தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 33 "இரயில் பல்பு " - மோகன் ஜி (சித்திரம்: தேவா)

2024931230326256.jpg

‘நீ இதுவரை எந்த தீபாவளிக்கும் தனியாக இருந்ததில்லை. காலேஜ் போகும் வாலிபன் ஆகிவிட்டதாலேயே நாளும் கிழமையுமாக நீ ஊருக்கு வரவில்லை என்று தீர்மானம் செய்தால், நான் சொல்ல என்ன இருக்கிறது? கடலூருக்கும் மதராசுக்கும் கடல்தாண்டியா வர வேண்டும்? உன் அக்காவும் குழந்தைகளும் வேறு தீபாவளிக்கு வருகிறார்கள். வந்து சேர்!’

இப்படியாக, ஒரு இன்லேண்ட் லெட்டர் முழுதுமாக மற்ற விஷயங்களோடு நுணுக்கி நுணுக்கி அம்மா எழுதி இருந்தாள். நவராத்திரிக்கு தான் நான்குநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கடலூர் போயிருந்ததால், தீபாவளிக்கு வரவில்லை என அம்மாவுக்கு எழுதி இருந்தேன். அதற்குத்தான் அம்மாவின் மேற்கண்ட பதில் கடிதம்!

அப்போதெல்லாம், எக்மோரில் இருந்து கடலூர் செல்ல இரவுநேரம் இரண்டு பாசஞ்சர் ரயில் வண்டிகள் உண்டு.

இரவு புறப்பட்டு முதல் ரயில் அதிகாலை 3:30 மணிக்கும், அடுத்தது காலை 5:30 மணிக்கும் கடலூரை அடையும்.

இந்த தீபாவளிக்குப் போக வேண்டியதுதான்! நானும் என் நண்பன் நாகராஜனும் தீபாவளிக்கு முதல்நாள் இரவு ரயிலில் எக்மோரில் இருந்து புறப்பட்டோம்.

நாகராஜனுக்கு மாயவரம். எனக்கு ஒரு வருடம் படிப்பில் சீனியர். வேறு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தான். விழுப்புரத்தை அடையும்வரை ஓயாமல் பேசிக்கொண்டு வந்தோம். விழுப்புரத்தில் என் கம்பார்ட்மெண்டில் இருந்த பலரும் இறங்கிவிட்டனர்.

நாகராஜன் தான் சொன்னான், ”மோகா! கடலூர் வரும்வரை மேல் பர்த்தில் கொஞ்சம் படுத்துக்கோ! எனக்குத்

தூக்கம் எல்லாம் வராது. கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்) ஸ்டேஷன் வந்ததும் உன்னை எழுப்புகிறேன்” என்றான்.

மீண்டும், “தைரியமா ஏறிப் படுடா! நான் இருக்கேன் இல்ல?” என்று பர்த்தில் ஏற்றி விட்டான். தாலாட்டுப்பாடி, என்னை

மெல்லத் தட்டி தூங்கப் பண்ணாத குறை தான்!

கீழே ஜன்னலோரம் அமர்ந்து, ‘பொட்டு வைத்த முகமோ… கட்டி வைத்த குழலோ’ என்று நாகராஜன் ஹம் பண்ணியதைக் கேட்டபடியே நித்ராதேவியின் வசம் சரியலானேன்.

“மோகா! மோகா!! எழுந்திருடா. சிதம்பரம் வந்துருச்சு” என்று நாகராஜன் பரபரக்க, வாரிச்சுருட்டி கொண்டு கீழே குதித்தேன். “என்னடா சொல்ற?” என்று செருப்பை மாட்டிக்கொண்டு ஜன்னல் வழியே பார்த்தேன். சிதம்பரம் ஸ்டேஷன் தான்.

என் பையைத் தூக்கிக்கொண்டு வெளியே பாய்ந்தேன்.

“சாரிடா மோகா! திருப்பாப்புலியூர் வர்ரதுக்குள்ள நானும் அசந்துட்டேன். சட்டுனு முழிச்சுப் பார்த்தா, வண்டி இங்க வந்து நிக்குது. ரொம்ப சாரிடா! நான் நாளைக்கு கடலூர் வந்து உன்னை பார்க்கிறேன். ரெண்டு பேருமா பாண்டிச்சேரி போகலாம்” என்றான் அந்தக் கல்லூரி மங்கன்.

‘நீயாவது ஒழுங்கா மாயவரத்தில் இறங்கு!’ என்று நான் சொல்லி முடிப்பதற்குள், வண்டி புறப்பட்டு விட்டது.

அடுத்து டிடிஆரை வேறு சமாளிக்க வேண்டும்! கடலூர்வரை தான் என் டிக்கெட் இருந்ததால், எவ்வளவு ஃபைன் போடுவார்கள் என்றும் தெரியவில்லை. ‘என்னப்பனே நடராஜா! நாகராஜன் மாதிரி நீயும் மேலும் என்னை மாட்டிவிட்டு விடாதே ‘ என்று வேண்டிக்கொண்டு வெளிப்புற வாசலில் நின்ற டிடிஆரை நோக்கி நடந்தேன். இறங்கிய சிலரும் ஸ்டேஷனுக்கு வெளியே போய்விட்டார்கள்.

நான் மெல்ல புருவத்தையெல்லாம் சிவாஜி போல தூக்கிக்கொண்டு அவரை அடைந்தேன்.

மேலும்கீழும் என்னைப் பார்த்தபடி, “என்ன? வித்தவுட்டா?”என்றார்.

“அய்யய்ய…இல்ல சார். திருப்பாப்புலியூரில் இறங்க வேண்டியவன், கொஞ்சம் தூங்கிட்டேன். சாரி சார்… ஃபைனை கொஞ்சம் பார்த்துப்போடுங்க சார்!” என்றேன்.

“படிக்கிற வயசுல பசி தூக்கம் எல்லாம் பக்கத்திலேயே சேர்க்கக்கூடாது தம்பி! சரி போப்பா.. இனிமே ஜாக்கிரதையாக இரு”

“நன்றி சார். வரேன்!” என்றவன், ‘சார்! அந்த ஸ்டாலில் ஒரு காபி சாப்பிடலாம் வருகிறீர்களா?” என்று கேட்டேன்.

“என்ன? லஞ்சமா எனக்கு? போனாப்போகுதுன்னு பார்த்தா…”

“சார்! தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க வந்தீங்கன்னா, உங்களைப் பார்த்துட்டு அந்த மாஸ்டர் நல்ல காபியா போடுவார் என்றுதான் உங்களைக் கூப்பிட்டேன்” என்றேன்.

“நீ பொழச்சிக்குவே தம்பி! சரி வா! என்றார்.

ஒரு வழியாக காபியைக் குடித்துவிட்டு, டிடிஆருக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியே வந்தேன். மணியோ காலை 6 ஆகிவிட்டது. வீட்டில் எல்லோரும் கங்காஸ்னானம் பண்ணி, பாதி வெடியை வெடித்துத் தள்ளியிருப்பார்கள்.

கிடைத்த பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு ஒரு வழியாக வீட்டில் நுழைந்தேன். வேகும் இட்லியின் மணம் மூக்கைத் துளைத்தது. இலைபோட மன்னி தயாராகிக் கொண்டிருந்தாள்.

“சாரிம்மா! இரயிலில் இடம் கிடைக்காததால் ஏதோ பஸ்ஸில் நின்று கொண்டே வந்தேன். நான் வரலைன்னா நீ தான் சும்மா விடுவியா?” என்று அம்மாவிடம் கதை அளந்து விட்டு, இட்லி வடை பட்சணம் என்று ஒரு பிடிபிடித்தேன். வெடிகளையும் வெடித்துத் தள்ளினேன்.

அடுத்தநாள் காலை சொன்னபடி நாகராஜன் வீட்டுக்கு வந்தான். அம்மாவுக்கு மாயவரம் பக்கம் தேரழுந்தூர். அம்மாவின் விசேஷ கவனிப்பு நாகராஜனுக்கு கிடைத்தது.

“சாரி மாமி! நான்தான் இவனை ஊர் வந்தால் எழுப்பறேன் படுத்துக்கோ” என்று ரயிலில் சொன்னேன். ஆனா பாருங்க… நானே தூங்கிவிட்டேன். சிதம்பரம் வந்து தான் எழுந்தோம். இங்கு தீபாவளி முடிந்துதான் மோகி வந்திருப்பான். எல்லாம் என்னால்தான்” என்று ஒரு தவுசண்ட் வாலாவை அம்மாவிடம் பற்றவைத்து விட்டான். நான் காட்டிய ஜாடைகளை அந்த நாகு பார்த்தால் தானே!

“ரவா உருண்டை அட்டகாசம் மாமி!”

நான் தூக்கத்தில் ஸ்டேஷனைத் தவறவிட்டதை, ஏதோ அம்மாவுக்காக தியாகம் பண்ணி வந்ததுபோல ஜோடித்திருக்க, இந்த நாகராஜன் என்னைப் படமெடுத்து கொத்தி விட்டானே! அவனுடன் பாண்டிச்சேரி போய்விட்டு, அவனையும் அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.

அம்மாவின் முகம் பார்த்துப்பேச கூச்சமாக இருந்தது. நான் புளுகியிருக்க வேண்டாம். காபியை டபராவில் ஆற்றிக்கொண்டே, “பொய் எல்லாம் நல்லா நம்பறாப்புல சொல்லக் கத்துக்கிட்டயேடா!” என்றாள்.

“நான் ரயிலில் தூங்கிட்டு ஸ்டேஷனை கோட்டை விட்டதை சொன்னேன்னா, என்னை எல்லோரும் பரிகாசம் பண்ணுவீங்களேன்னு தான் அப்படிச் சொன்னேன் ருக்கு! சாரி!” என்று சமாதானம் செய்தேன்.

மீண்டும் சென்னைக்கு கிளம்பும்போது அம்மாவை அணைத்துக்கொண்டு “வரேம்மா!” என்றேன்.

“போயிட்டு வா மோகி. ரயிலுக்கு நேரமாகிறது பார்! எப்பவும் கவனமா விழிப்போடு இரு” என்றபடி என்னைத் தீர்க்கமாகப் பார்த்தாள். தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினேன்.

சென்னைக்குத் திரும்பும்போது, அந்த ரயிலின் பெட்டியில், என் இருக்கைக்கு மேலிருந்த பல்பு மட்டும் எரியவில்லை.