தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
இயேசு வாசனை-என் குமார்

20241120135733243.jpg

Jesus Wept – john 11:35

சின்னத் துண்டுக் காகிதத்தில் இருந்த இந்த வாசகம், என் கண்ணில்பட்டபோது, நான் பட்ட பாடு. வந்த குழப்பம். உலகமே உச்சரிக்கும் - தோத்தரிக்கும் வலி வந்தால் தேடிச்சென்று மண்டியிடும் கர்த்தரின் மகனுக்குக் கண்ணீரா?

எதற்காக அழுதிருப்பார்? யாருக்காக அழுதிருப்பார்? அழுகையெல்லாம்கூட வருமா? தேவதூதனின் கண்ணீர்ச் சுரப்பிக்கு என்ன வேலை? குடைந்த கேள்விகளோடு பள்ளி செல்லும் சாலையில் நடக்கிறேன்.

2024112014002036.jpg

தூரத்தில் பழைய கனரக வாகனம் ஒன்று மண் சாலையின் பள்ளத்தில் இறங்கிவிட்டபடியால், மீண்டும் மேட்டிற்கு ஏற முடியாமல், மண்ணை வாகனப் பின் சக்கரங்கள் வாரி வாரி இறைத்துக்கொண்டிருந்தன. தொம்தொம்என்று விநோதச் சத்தம் போட்டுக்கொண்டு அது படும் அவஸ்தைஇந்த வண்டி எப்போது மேலேறும்? யார் தூக்கிவிடப் போகிறார்கள்? இனி, வேடிக்கை பார்க்க நேரமில்லை. மூன்றாம் வகுப்புக்கு நேரமாகிறது. பைக்கட்டோடு ஓடுகிறேன். நுழைந்த கணமே, கரும்பலகையிலிருந்து கையை எடுத்துவிட்டு நேராக என்னிடம் வந்து என் வலது காதில் கையை வைத்துத் திருகினார், ஆசிரியை. “இதான் வர்ற நேரமா?” - வலித்தது. எல்லோரும் பார்க்கிறார்கள். உடம்பெல்லாம் வலித்தது.

இந்த பூமியில் தரையிறங்கிவிட்டால் மண்ணில் கால்பட்டுவிட்டால் வலிகளின் எல்லாப் பரிமாணங்களும் வாய்த்துவிடும்.

*

குற்றம் சாட்டி அழைத்துவரப்பட்ட அவையிலும், ஏரோது வினவிய ஏராளக் கேள்விகள் எதற்கும் மறுமொழியாக அவர் ஒன்றும் சொல்லவில்லை. “இவனிடத்தில் குற்றம் ஏதும் தெரியவில்லையே? மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையேஎன்று பிலாத்து தண்டிக்க மறுத்து, பண்டிகைக்கால விடுதலை என்று அவரை விடுவிக்க நினைத்தபோதும், கூச்சலிட்ட அந்தக் கும்பல் சொன்ன அர்த்தமற்ற அற்பக் குற்றம்… “இவன் தன்னை ராஜாவென்று சொல்லிக்கொள்கிறான்.. ராயருக்கு வரி கொடுக்க வேண்டாமென்கிறான்.. மனதை ஏதோ செய்கிறது இவன் பேச்சுஇவன் பின்னால் இழுக்கிறதுமொத்தத்தில் இவன் ஒரு கலகக்காரன்!”.

*

முன்பொரு நாள், அடர்ந்த மரங்களின் நடுவே தனித்து ஓலமிட்டுக்கொண்டிருந்த செம்மறி ஆட்டைப் பார்த்துப் பதறித் தூக்கினார். கூட்டத்தை விட்டுப் பிரிந்த துயரம் அதன் மருண்ட கண்களில்! தன் தோளோடு ஒட்டிக்கொண்ட அதன் காதோரம் வாஞ்சையாகச் சொன்னார்… “கூட்டத்திலிருந்தாலும் தனித்திருக்கப் பழகு. உன் பாதையிலிருந்து நீ எப்போதும் வழி தவறுவதில்லை!”.

*

விசாரணை அரங்கைவிட்டு வெளியே வந்த கணம், எதிர்பாராத சுளீர்..’ என்ற சாட்டையடிஅவரது சட்டையைக் கிழித்து, தோலையும் கிழித்தது.

*

20241120135907962.jpg

முன்பொரு நாள், தன்னைப் பின் தொடர்ந்தவர்களை எப்போதும் தான் தனியாக வந்தமரும் மலையுச்சிக்குக் கூட்டிச்சென்றார். தன் காதில் விழுந்த அசரீரிகளைக் கண் மூடி உதிர்த்துக்கொண்டிருந்தார்.

தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கூட்டம் அவரை நெருங்கியபோது அவர்களை இவர்கள் தடுத்தபோது இவர்களை அவர் தடுத்தார். சிறுவர்களோடு பேசிக் களிப்பூட்டினார். குலுங்கிக் குலுங்கி நகைத்துக் குழந்தைகளோடு குழந்தையானார். ‘இவ்வளவு அழகான சிரிப்பா!’ என்று வந்தவர்கள் அன்றுதான் சீடர்களானார்கள்.

*

அதிகமான பாரம்கொண்ட அந்த மரச்சிலுவை அவர் தோள்மீது சுமத்தப்பட்டது. எதிர்பாராத அந்த எடையால் அவரது கால்கள் தடுமாறித் தரையில் சாய்ந்தது

அய்யோ…” என்று பதறியது, கூட்டத்தில் தங்களை மறைத்து நின்றுகொண்டிருந்த, அவரை நேசித்த பெண்கள் கூட்டம்.

சந்தேகம் - காட்டிக்கொடுத்தல் பழி தகாத சுடுசொற்கள் பொல்லாப்பு அவமானம் எல்லாவற்றையும் அனுபவித்த அந்த உடல், முதுகு வளைந்து வீதிகளைக் கடந்து மெல்ல மெல்லத் தள்ளாடி நடந்தது.

*

வானத்தில் புதிய நட்சத்திரம் தோன்றியதை வைத்த கண் வாங்காமல் பார்த்த மரியாள், தன் பிஞ்சுக் குழந்தையை ஆதூரமாகத் தூக்கி உச்சி முகர்ந்து முத்தமிட்டபோதுகுழந்தையின் தலையில்குருதியின் வாசனையை உணர்ந்தாள்….

*

தலையில் முள் கிரீடம். இரத்தச் சேறு வழிந்து அவரது கண்களை நனைத்தபோது, வாழ்ந்த நாட்கள் எல்லாம் ஓர் கணம் கண்ணுக்குள் வந்துபோனது... தான் இழைத்து இழைத்துச் செவ்வனே செய்துகொடுத்த அழகான மேசை விரலால் தான் மண்ணில் எழுதிய வரிகள் தன் பாதத்தைக் கண்ணீரால் கழுவி, தலைமுடியால் துடைத்து, முத்தமிட்டு, பரிமளத் தைலம் பூசி நன்றி சொன்ன, பாவியெனக் கருதப்பட்ட பெண்ணின் முகம் கொடுநோயால் படுத்தவனைத் தொட்டு, “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட!” என்றதும் அவன் குணமானது புறா ஒன்று தோள்விட்டு அகலாமல் நாள் முழுக்கக் கூட வந்ததுஎல்லாமும் ஓர் கணம் கண்ணுக்குள் வந்துபோனது.

இப்போது, இதோஆடை உருவப்பட்ட அவரது மேனி அவருக்கே விசித்திரத் தோற்றமமாக இருந்தது. ஆனாலும், பரிகசித்தவர்களை உயிரைப் பிடுங்க வந்தவர்களை மன்னிக்க விண்ணப்பம் வைத்தார்.

அப்போது அவரையும் அறியாமல், “Eli Eli Lema Sabachthani” ( “என் கடவுளேஎன் கடவுளே.. ஏன் என்னைக் கைவிட்டீர்?”) - அவரது உயிரின் உரத்த குரல், வானத்தை நோக்கி தன்னைப் படைத்த அப்பனை நோக்கிகலங்கியவண்ணம் எழுந்தது.

வானம் மூன்று மணிக்கே இருண்டுபோனது. காற்றின் வேகம் படபடத்தது. எல்லோரும் பயந்தார்கள். அவர்களுக்கு அப்போதுதான் அவரைப் பற்றி ஏதோ புரிய ஆரம்பித்தது. ஆனால், அதற்குள்

கபாலஸ்தல மலையில் - ஆணிகளின் பிடியில் - அந்தரச் சிலுவையில் அவரது தலை ஒருபக்கமாகச் சரிந்திருந்தது.

*20241120135645232.jpg

இதை எதுவும் அறியாத அந்தக் குழந்தை, கன்னம் சிவக்கச் சிரித்தது.

இதோ சகலருக்கும் சந்தோஷம் தரப்போகும்இயேசு பிறந்துவிட்டான்!” என்று அதன் சிரிப்பை வந்தோர் கொண்டாடினர்.

தொழுவத்தின் முன்னணையில் சூழ்ந்து நின்ற கன்றுக்குட்டியும், ஆடும், கழுதைக்குட்டியும் அக்குழந்தையை முத்தமிட நெருங்கின.

****