தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை எனில்?! -தில்லைக்கரசி சம்பத்

20241120234313262.jpeg

இயேசுவை கைது செய்ய யூதாஸ் இஸ்காரியோட் ஒரு கூட்டத்தோடு வருகிறான். இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவின்இருப்பிடத்தை காண்பித்துக்கொடுக்கிறான். கைது செய்வதை எதிர்த்து இயேசுவின் சீடர்களில் மற்றொருவரான பீட்டர் இயேசுவை காப்பாற்றும் பதற்றத்தில் கைது செய்ய வந்தவர்களின் வேலையாள் ஒருவனை தனது வாள் கொண்டு அவன் காதை வெட்டி எறிகிறார். இயேசுவோ அதற்கு மேல் பீட்டர் செயல்படா வண்ணம் தடுத்து “ க‌த்‌தி எடுத்தவன் கத்தியாலே சாவான். வாளை அதன் இடத்தில் வை” என்கிறார். தடுத்தது மட்டுமில்லாமல் காது வெட்டப்பட்டவனை அவ்விடத்தில் தனது இறையருளால் உடனடியாக குணப்படுத்துகிறார். தான் கைது செய்யப்பட்டு, கொல்லப்படுவோம் என்கிற நிலையிலும் எதிரிக்கு கூட கருணை காட்டுகிறார் இயேசு. கொல்லப்படுவதற்கு முன் இயேசு செய்த கடைசி அற்புதமாக வரலாற்றில் பதியப்படுகிறது இந்த சம்பவம்.

இயேசுவை ஒரு மதத்தின் தலைவராக சுருக்கி விட முடியாது. அவர் மனிதக்குலத்தின் அமைதிக்கான தூதர். எளிய மக்களுக்கான பாதுகாவலர். ஆனால் அப்படி வாழ்ந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார்.

இப்போது உலகில் நடப்பதென்ன? வலியவன் வாழ, எளியவன் வதைப்படுகிறான். மனிதர்களுக்கோ சகிப்புத்தன்மை என்பதே காணாமல் போய் விட்டது. நம்முடன் கருத்து முரண் படுபவர்களை கூட பரம எதிரிகளாகவே நடத்துகிறோம். ஒரு சிலருக்கு நல்லவனாய் தெரிபவன் மற்ற சிலருக்கு கெட்டவனாக தெரிவது எப்படி? என்ற கேள்விக்கு பதிலாக “ எவை நல்லவை, எவை கெட்டவை என ஒரு மனிதனால் எப்படி முடிவுக்கு வர முடியும் ? அவன் “நல்லவன்” இவன் “கெட்டவன்” என்று முத்திரை குத்த நீ யார்? அது கடவுளின் வேலை, மனிதர்கள் செய்யக்கூடாது” என்கிறார் இயேசு.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்னவராயிற்றே! ஆனால் தங்கள் கண்ணெதிரே ஒருவனின் வெட்டுப்பட்ட காதை குணப்படுத்திய போதும் அந்த முட்டாள்கள் கூட்டம் இயேசுவை “இறைவனின் தூதராக இருந்தாலும் யாருக்கென்ன!?”என்று கவலைப்படாமல் கைது செய்கிறார்கள்.

அந்த காலம் என்றில்லை.. இன்று இயேசு அவதரித்தாலும் கயவர்கள் மத்தியில் அவரது பாதுகாப்புக்கு உத்திரவாதம் கிடையாது. இயேசுவுடன் சேர்த்து இரண்டு திருடர்களும் பக்கத்து சிலுவைகளில் அறையப்பட்ட நிலையில், வலி தாங்காமல் இயேசு தவிக்கிறார். இதைக்காணும் திருடர்கள் “ ஏம்ப்பா நாங்க தான் திருடர்கள். குற்றம் செய்தோம் அனுபவிக்கிறோம். நீ நல்லவன்! இறையை நம்புபவனாயிற்றே.. இன்னுமா உன்னை உன் தேவன் காப்பற்ற வரவில்லை?” என கேலியாக கேட்கிறார்கள். அச்சமயத்தில் மனம் உடைந்த இயேசு, வானை நோக்கி “ஏலி! ஏலி! லாமா சபக்தானி?” (என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) என கதறுகிறார்.

இறைதூதர், தேவனின் மைந்தர் போன்றவைகளை தாண்டி எளியவர்களுக்கு நன்மை செய்த நல்ல மனிதர், தனக்கு ஏற்பட்ட துன்பங்களை தாங்க முடியாமல் , முற்றிலும் நம்பிக்கை இழந்து இறைவனை நோக்கி “ என்னை கைவிட்டுவிட்டீர்களே!” என கதறி அழுகிறார். அப்போதும் தேவன் வரவில்லை. உலகில் மனிதனாக பிறந்த எவருமே பூமியின் கொடுமைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நியதிக்கு ஏற்ப தான் இயேசுவுக்கும் நிகழ்கிறது. கிறிஸ்துவ நம்பிக்கையின் படி உலகின் அனைத்து மனிதர்களின் பாவச்செயல்களுக்காக இயேசு இரத்தம் சிந்தி, சிலுவையை சுமந்தார் என கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள். ஒரு வேளை இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்றால் என்னவாகி இருக்கும்? நிச்சயம் அவர் வாழ்ந்த சமூகத்தின் மிக மதிக்கத்தக்க மனிதராக இருந்திருப்பார். இயேசுவின் அற்புதங்கள், கருணை மிக்க செயல்கள், போதனைகள் போன்றவை அக்கம்பக்க நாடுகளிலும் பரவியிருந்திருக்கும்.

பாலியியல் தொழிலாளியை அக்கால வழக்கப்படி கல்லால் அடித்துக்கொல்ல கூட்டம் கூடிய போது “ உங்களில் பாவம் செய்யாதவர் முதலில் கல்லை எடுங்கள் “ என அப்பெண்ணின் முன் வந்து நின்றவர். சமூகத்தினால் கைவிடப்படும் எளியவர்களுக்காக பாடுப்பட்டவரை, தோழர் இயேசு என்று கூட அழைத்திருப்பார்கள். உலகமே கொண்டாடும் மனிதராக வாழ்ந்திருப்பார். மனிதர்கள் இயேசுவைப்போன்றே கருணை உள்ளவர்களாக மாறி பூமியே ஒரு பெரும் பூந்தோட்டமாக மலர்ந்திருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் உலகில் பாவிகளே அதிகம் இருந்ததால் இயேசு சிலுவையில் அறைப்பட வேண்டியதாயிற்று. இப்போதும் பாவிகளுக்கு குறைவில்லை. இயேசு இன்னும் நமக்காக சிலுவை சுமந்துக்கொண்டே இருக்கிறார். இறை அவதாரங்கள், தூதர்கள் மனிதக்குலத்தின் சாபங்களை நீக்க அபூர்வமாக பூமிக்கு வருகிறார்கள். வந்தவர்களை போற்றிக் காப்பாற்ற வக்கற்ற மனிதர்களாக நாம் இருக்கிறோம். அதனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அன்று அவர் மனிதர்களுக்காக செய்த தியாகத்தால் தான் இன்று கிறிஸ்துவம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. சிலுவை இயேசு, மனிதர்களின் பாவங்களுக்கு சாட்சியாக இருக்கிறார்.

“நானே மீட்பர்!” என்று துன்பத்தில் உழலும் நம்பிக்கையாளர்களின் கரங்களை கைப்பற்றி இறுக்கி பிடித்துக்கொள்கிறார். கன்னத்தில் அடித்தால், அடித்தவனின் தலையை வெட்டுவதற்குப்பாயும் உலகில் இன்று கருணையாளர் இயேசு போன்று நாமும் இரக்க உணர்வுடன், சகிப்புத்தன்மையுடன், நம்மை வெறுப்பவர்களிடம் கூட நம்மால் அன்பு செலுத்த முடியுமா? இயேசுவால் முடிந்தது.. அதனாலேயே இன்றும் உலகே வணங்கும் இறையின் தூதராக, இயேசு விளங்குகிறார். தியாகத்தின் சின்னமாக வாழ்ந்த தேவமைந்தன் இயேசுவின் பிறப்பை கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடி நினைவுக்கூறுவோம்.