ஒரு சமூகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தோற்றுவிக்க வேண்டுமானால் ,அங்கே கல்வியும் ,மருத்துவமும் சிறப்பாக அளிக்கப்பட வேண்டும் . இந்தியா அடிமைப்பட்டு இருந்த காலத்தில் , இங்கு நிலவிய வறுமை, அறியாமை ,நோய் ,மூடநம்பிக்கை இவற்றை உடைத்து கல்வியும் மருத்துவமும் தழைக்க கிறிஸ்தவ மிஷனரிகள் பலர் உழைத்தனர் .
நாடெங்கும் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி, எல்லா மக்களுக்கும் கலவியைத்தந்தனர்.மருத்துவமனைகளை ஏற்படுத்தி நோய் நீக்கினார்கள். அவர்களுள் மிக முக்கியமானவர் ஐடா சோபியா ஸ்கடர்
அவர் வேலூரின் மிகப்பெரிய அடையாளமாக விளங்கும் சிஎம்சி மருத்துவமனை(Christian Medical College Hospital) யைத் தோற்றுவித்தவர் . வேலூர் மட்டுமல்ல , இந்தியாவின் அடையாளமாக விளங்கி இன்று இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும், உலகின் பல பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்று திரும்பும் ,ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக சிஎம்சி விளங்குகிறது.
இம்மருத்துவமனை துவக்கப்பட்ட வரலாறு மிகவும் உருக்கமானது.
அமெரிக்கவைச் சேர்ந்த இளம் பெண் ஐடா சோபியா ஸ்கடர் தன் தாயைப் பார்க்க தமிழகத்தின் ராணிப்பேட்டைக்கு வந்தார் .அவர் தந்தை மருத்துவராக அப்பகுதி மக்களுக்குச் சேவை செய்து வந்தார் .ஒருநாள் நள்ளிரவில் மனைவியின் பிரசவத்துக்காக மருத்துவ உதவி கேட்டு வந்த மூவரும் , மருத்துவர் "ஆண்"என்று அறிந்து உதவியை மறுத்து விட்டு சென்றதைக் கவனித்தார் . அந்த மூன்று பெண்களும் பிரசவத்தின் போது இறந்தனர் என்பதை அறிந்த ஐடா பெரிதும் மனம் வருந்தினார் .
அவர்களுக்கு தன்னால் ஆன சேவையை அளிக்க விரும்பினார்.வெளிநாட்டில் மருத்துவம் பயின்று இந்தியா திரும்பினார். வேலூரில் மருத்துவமனை தொடங்கினார். "பெண்களுக்குக்கான மருத்துவம் ஒரு பெண்ணால் " என்ற அற்புதம் அப்படித்தான் தொடங்கியது .
"பணிவிடை பெறுவதற்கு அன்று, பணிவிடை புரியவே வந்தேன் ( Not to be served but to serve) " என்று கூறிய இயேசுவின் மொழியை விருது வாக்காக கொண்டு அவர் தொடங்கிய இம்மருத்துவமனையும்,மருத்துவக்கல்லூரியும் இன்று நூறாண்டுகள் கடந்து , உயர்ந்த மருத்துவ சிகிச்சையை எல்லோருக்கும் அளிக்கும் உன்னத கோவிலாக திகழ்கிறது.
சிஎம்சி இப்போது 7 இடங்களில் கிளை பரப்பி உள்ளது .வேலூர் கிராமப்புற மருத்துவமனைகளான சாட் (CHAD ) , கே.வி.குப்பத்தில்ரூசா (RHUSA ), ஷாலோம் மருத்துவ மையம் . கண் மருத்துவத்துக்காக ஷெல் (SHELL )கண் மருத்துவமனை ,சித்தூர் சிஎம்சி , ராணிப்பேட்டையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அதி நவீன மருத்துவமனை, பாகாயம் மனநல மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையம் (Rehabilitation Center ) என்று ஆலமரமாக தழைத்து வளர்ந்துள்ளது. இந்தியாவின் பழமையான தனியார் மருத்துவக்கல்லூரியில் 1484 மருத்துவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப்படிப்பைத் தொடர்கிறார்கள் .செவிலியர் கல்லூரியில் 856 பேர் பயிற்சி பெறுகிறார்கள் . இவை தவிர பலவித டிப்ளோமா வகுப்புகளும் நடக்கிறது .
1923 ஆம் ஆண்டில் ஒரே படுக்கை கொண்ட மருத்துவமனையாக தொடங்கப்பட்ட சிஎம்சி நூறாண்டுகள் கடந்த பின் இன்று 3675 படுக்கைகளுடன் பெருவளர்ச்சியை அடைந்துள்ளது . 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 18 லட்சம் புற நோயாளிகளுக்கும் ,1.53 லட்சம் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது . இலவச மருத்தவ உதவி பெற்றவர் கிராமப்புற நோயாளிகள் 1.15 லட்சம் ஆவார்கள் .13, 712 ஊழியர்களில் 2397 மருத்துவர்கள் , 4679 செவிலியர்கள் இரவும் பகலும் சுழன்று மருத்துவ சேவை தருகிறார்கள்.
மருத்துவ உலகிற்கு சிஎம்சியின் பங்களிப்பு அபாரமானது . உலகின் எந்த மூலையில் நடக்கும் மருத்துவ ஆராய்ச்சியும் , கண்டுபிடிப்புகளும் முதன் முதலாக இந்தியாவில்முயற்சி செய்து வெற்றிகரமாக்கும் இடம் சிஎம்சி தான்.பல முதல் முதலான சிகிச்சை முறைகளை சிஎம்சி அறிமுகப்படுத்தி உள்ளது.1944இல் தொழுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உடலுறுப்பு சீரமைப்பு நடந்தது என்றால் , 1961 ஆண்டில் முதல் இதய அறுவை சிகிச்சை (Open heart surgery )இங்கு நடத்தப்பட்டது . 1986ல் தாலசீமா நோய்க்கு எலும்பு மஜ்ஜையை மாற்றியது போன்ற பல "முதல்'"களை சிஎம்சி நடத்திக் காட்டியது
சமீபத்தில் ராணிப்பேட்டை சிஎம்சியில் கருப்பை புற்றுநோய்க்கான அதி நவீன ரேடிய சிகிச்சையாக , உட்புறமாக புற்றுநோய் கட்டிக்கு மிக அருகில் ரேடிய கதிர்களை செலுத்தும் Brachytheraphy அளிக்கப்படுகிறது/
அயல் நாட்டவரும் வேலூர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள் . சென்ற ஆண்டில் வந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அயல்நாட்டவர்களில் 9800 பேர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சை பெற்று குணம் பெறுகிறார்கள்..
கிராம மக்கள் சேவையில் சிஎம்சி மருத்துவமனை ஒருமுன்னோடி கிராமப்புற மையங்களில் மக்களை நேரில் சந்தித்து இலவச மருத்துவம் அளிக்கிறது .இவர்களின் சேவையைப் பாராட்டி சித்தூரில் துவங்க இருக்கும் மருத்துவ கல்லூரிக்கு அஜிம் பிரேம்ஜி 500 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார் .
"குன்றின் மேல் இட்ட விளக்கு மறைவாய் இருப்பதில்லை"என்கிறது பைபிள் .அது போல் ஒளி விளக்காக சுடர் விடுகிறது சிஎம்சி மருத்துவமனை. நவீன மருத்துவ முறைகள் , அதி நவீன கருவிகள் , மருத்துவத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவ குழுவினர் , கனிவான அணுகுமுறை வசதிமிக்க தூய்மையான சூழல், பல ஆண்டுகளுக்கும் முன்பே கணினி மயமாக்கப்பட்ட அலுவலகங்கள் என்று சிஎம்சி மருத்துவமனை தனித்துவம் பெற்று விளங்குகிறது
ஐடா ஸ்கடர் என்னும் மகத்தான பெண்மணி இந்த மண்ணில் நிகழ்த்திய மருத்தவ அற்புதம் சிஎம்சி . இந்நிறுவனம் பன்னெடுங்காலம் வாழ வாழ்த்துக்கள்.
.
Leave a comment
Upload