'டிசம்பரும் மார்கழியும்' என்று சொல்லாமல் மார்கழி மாதத்தை ஏன் கிறிஸ்துமஸோடு ஒப்பிட்டு தலைப்பு இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது.
உலக அரங்கில் கிறிஸ்துமஸ் என்பது மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதே போன்று தான், மார்கழி மாதம் என்பது நம் தமிழர்களுக்கு, கொண்டாட்டம் நிறைந்த ஒரு மாதம். லண்டனில் வசிக்கும் எனக்கு, இங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை காணும் பொழுது, மார்கழி மாத கொண்டாட்டங்கள் கண் முன்னே வந்து செல்கின்றன
எத்தகைய ஒற்றுமை வாய்ந்ததாக இந்த இரு கொண்டாட்டங்களும் இருக்கின்றன என்கிற எண்ணம், என்னை வியப்பில் ஆழ்த்துகிறது . உடனே நீங்கள், எம்மதமும் சம்மதம், கிறிஸ்துவம், இந்து என்ற அடிப்படையில் இந்த கருத்தை முன்வைப்பதாக நினைக்காதீர்கள்.மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த கொண்டாட்டங்கள், எவ்வாறு நம்மை இணைக்கிறது ?
மார்கழி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தினந்தோறும் கிடைக்கும் கோவில் பிரசாதமும், வெண்பொங்கலுமே! என்ன தான் வெண்பொங்கலை தூக்கத்தோடும், மயக்கத்தோடும் ஒப்பிட்டு அலுத்துக்கொண்டாலும், மார்கழியின் இறுதியில் வரும் பொங்கல் பண்டிகை, நம் மனதுக்கு எப்போதும் நெகிழ்ச்சியை தரும் கொண்டாட்டம்.
இதே போன்று தான், கிறிஸ்துமஸ் மாதமான டிசம்பர் மாதம், முதல் நாளிலிருந்தே, இங்கு வசிக்கும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும், அட்வென்ட் காலண்டரில் இருக்கும் இனிப்பை உண்டு மகிழ்கிறார்கள் . டிசம்பர் 1ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு இனிப்பு என்னும் வகையில் இந்த காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில காலெண்டர்கள் டிசம்பர் 25ஆம் தேதியோடு முடிவடையும். ஒவ்வொரு ஆண்டும் சாக்லேட் தயாரிப்பாளர்கள் இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைத்து, புதுப் புது யுக்திகளை கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். இனிப்பு மட்டுமல்ல, அழகு சாதன பொருட்கள், தேயிலை வகைகள், காபி வகைகள் என இவைகளும் அட்வென்ட் காலண்டரில் இடம் பெறும்.
அடுத்ததாக, மார்கழி குளிரை எவ்வாறு மறக்க இயலும் ! நம் தமிழ்நாட்டில் காலை, மாலை வேளைகளில் சால்வை, குல்லா அணிந்து செல்லும் காட்சி நாம் அனைவரும் அறிந்ததே. இதே போன்று, பெரும்பாலான வெளிநாடுகளிலும் டிசம்பர் மாதம் குளிரின் உச்சத்தில் இருக்கும் ஒரு காலம் என்றே கூற வேண்டும். குளிர் அதிகமாகும் பட்சத்தில் பனி மழை பெய்து, வெள்ளை கிறிஸ்துமஸ் என்று இவர்களின் கொண்டாட்டத்தை மேலும் அது மெருகேற்றும்.
மார்கழி என்றவுடன் மார்கழி கச்சேரி பற்றி பேசாமல் இருக்க முடியுமா? சபாக்கள் தோறும் நடைபெறும் இசை, நடன, நாடக நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நாம் எதிர் நோக்கும் சிறப்பு வாய்ந்த நிகழ்வு. வீதி தோறும் பஜனை பாடும் மரபும் மார்கழி மாதத்திற்கே உரித்தான நிகழ்வும் கூட. இதே போன்று, கிறிஸ்துமஸ் கரோல் என்பது ஒரு நேசத்துக்குரிய பாரம்பரியமாகும், இது விடுமுறை காலத்திற்கு அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
கிறிஸ்மஸின் போது, பாடகர்களின் குழுக்கள் கூடி, கிளாசிக் மற்றும் பண்டிகை பாடல்களை நிகழ்த்தி, நிகழ்வின் உணர்வைக் கொண்டாடுகிறார்கள் . இந்த கரோலர்கள், அடிக்கடி குளிர்ச்சியான குளிர்கால உடைகளை அணிந்து, வீடு வீடாக, சுற்றுப்புறங்கள் வழியாக அல்லது பொது இடங்களுக்குச் சென்று, தங்கள் இணக்கமான மெல்லிசைகளுடன் மகிழ்ச்சியை பரப்புகிறார்கள்
மார்கழி மாத கோலம் பற்றி கூறாமல் விட்டால் இந்த கட்டுரை முழுமை பெற்றதாக இருக்காது. வண்ண வண்ண கோலம், பரங்கி பூ, ஆங்காங்கே நிகழும் கோலப் போட்டி, என அந்த மாதம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு விளங்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது. அப்படியே லண்டன் வந்தீர்கள் என்றால் வணிக வளாகங்கள் முதல், வீதிகள், வீடுகள் வரை எங்கு நோக்கினும் விளக்குகள்,அலங்காரங்கள் , கிறிஸ்துமஸ் மரம் என இவைகளை காண கண்கோடி வேண்டும்.
மனித மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும், நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதத்திலும் அமைந்ததே இத்தகைய விழாக்கள், கொண்டாட்டங்கள். நாமும் இந்த தருணத்தில், மன நிறைவோடும், மகிழ்வோடும் வாழ்ந்து, நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் அதே உணர்வை பரப்பி மகிழ்வுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.
Leave a comment
Upload