உடம்பில உள்ள சுகர், பி.பியோட, இப்ப மனசில வந்த கவல கிச்சாமி மாமாவை ஒரே வழியா படுக்க வைச்சுடுச்சு. தன் மகன் பத்துவோட,அதான் பத்மநாபனோட, எவ்வளவோ போராடி பார்த்துட்டார். கடைசியில மனுஷன் இந்த விஷயத்துல தோத்தும் போயிட்டார்.
அந்த பிரபலமான ஆஸ்பத்திரியில லட்சக்கணக்கில பணம் செலவு பண்ணியும், டாக்டர் கொடுக்கும் மருந்துகளை 78 வயசான கிச்சாமி மாமாவின் உடம்பு எடுத்துக்கல. அவரை இழந்த அதிர்ச்சியில அவரோட மகன் பத்மநாபனும், பேத்தி கல்பனாவும் உறைந்து போனாங்க. நீலகண்ட ஐயரும் அவரோட மகன் சங்கரும்தான் இப்ப அவங்களுக்கு ஆதரவா இருக்காங்க. இதோ, அவரை வீட்டிற்கு எடுத்து போற ஆம்புலன்ஸ் மூவாயிடுத்து.
ஆம்புலன்ஸ் பின்னாலே நடந்து வந்த பத்மநாபன்,கடந்த சில நாட்களில் நடந்ததை எல்லாம் மனதில் அசைபோட்டபடி நடந்தான்.
போன வாரம் காலை பத்து மணி இருக்கும். பத்மநாபன் வீட்டிற்கு அவனுடைய பேஃமிலி பிரஃண்ட் நீலகண்ட ஐயர் வந்திருந்தார். ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்த நீலகண்ட ஐயரை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட அவரது மகன் சங்கர் வந்தான்.
சங்கர் நல்ல உயரமானவன். பார்க்க இலட்சணமாக இருப்பான். வயது 30 ஆகிறது. மிலிட்டரியில இருக்கான்.இப்ப லீவில வந்திருக்கான். அவன் வந்த உடனே அவனுக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்த கல்பனா, அவனைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை வீசிவிட்டுப் போனாள். ‘கல்பனா கொஞ்சம் குண்டாகியிருக்கா. மூக்கும் ,முழியுமா பார்க்க அழகா இருக்கா.இந்த பச்சைக் கலர் பொடவ அவளுக்கு நல்லா இருக்கு.பாவம் அம்மா இல்லாத பொண்ணு’ன்னு மனசில சொல்லிக் கொண்டான்.போகும்போது ஜன்னல் ஓரம் இருந்த கல்பனாவுக்கு கண்ணாலேயெ ’டாடா’ காட்டிப் போனான்.இத கிச்சாமி மாமா பார்த்துட்டார்.
மறுநாள் கோவில்ல, சங்கரை தனியா அழைச்சு கல்பனாவை பற்றி அவனிடம் பேசினார். அவன் இதுக்காகத்தானே காத்துக் கொண்டிருந்தான்.உடனே பச்சக் கொடிய காட்டிட்டான்.’இப்ப வந்துருக்கிற இந்த இரண்டு மாச லீவிலேயே கல்யாணத்தை முடிச்சுட்டா நல்லது’ன்னும் சொன்னான்.
வயசாகிக் கொண்டிருக்கும் கிச்சாமி மாமாவுக்கும் ’இது சரி’ன்னு மனசுல பட்டது. இத கிச்சாமி மாமா தன் பையனிடம் சொன்னபோது,அவர்தான் வானுக்கும் கீழுக்குமா குதித்தார். ’அவன் மிலிட்டரியில இருக்கான். நான் என் பொண்ண அவனுக்கு கொடுக்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக சொன்னார்.
’சங்கர் கொஞ்ச நாள் மிலிட்டரியில் இருந்துட்டு வந்துடுவான். இங்கு வந்து தன்னுடைய படிப்புக்கேத்த வேலையில சேர்ந்துப்பான். நல்ல சம்பளமும் கிடைக்கும். அவங்கள மாதிரி ஆட்களுக்கு வேலை கொடுக்கிறல முன்னுரிமையும் உண்டு’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார் கிச்சாமி மாமா. ஆனால் பத்மநாபன் பிடி கொடுக்கவில்லை. அந்த சோகத்திலேயே மனுஷன் படுத்தது படுத்துதான். தன் பேத்தியோட கல்யாணத்த பார்க்காமேயே போய் சேர்ந்துட்டார்.
கிச்சாமி மாமாவினுடைய சடங்கு எல்லாம் ஒரு வழியா முடிஞ்சுது. வீட்டில் அமைதி தொடர்ந்தது. ஆனால் பேச்சை யார் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கல்பனா அப்பாவோட பேசறதயே நிறுத்திட்டா.அவ்வளவு கோபம் அப்பா மேல.
பத்மநாபன்தான் மெதுவாக பேச்சை ஆரம்பிச்சார்,’நீ எனக்கு இருக்க ஒரே பொண்ணு. உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு, நான் தனியா கஷ்டப்படணுமா? என் கூடவே இரும்மா’ன்னு சொல்லி முடித்தார். ஒரு அப்பாவாக கல்பனாவின் உணர்வுகளை அவர் துளியும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
கல்பனா மெல்ல ஆரம்பித்தாள்,’ அப்பா, அம்மா உன்னை கல்யாணம் பண்ணிக்கும் போது அம்மாவோட அப்பா இப்படி நெனச்சு உனக்கு அம்மாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்காம இருந்தா, உனக்கு நல்ல மனைவி கெடைச்சிருப்பாளா? எனக்குத்தான் நல்ல அம்மா கிடைச்சிருப்பாளா? அத நெனைச்சு பாருங்க அவங்க என்ன தனியா விட்டுட்டு போனது தப்பு.’ன்னு சொல்லி முடித்தாள்.
ஒரு பொண்ணா பொறந்துட்டா, என்னிக்கு இருந்தாலும் ஒரு நாள் கணவன் வீட்டுக்கு போறதுதான் பெருமை. கல்யாணமாகி போனாலும் உங்கள நான் பார்த்துப்பன். ஏன் அனாவசியமா கவலைப்படுறப்பா. நீ டெய்லி பூஜை பண்ற பரமேஸ்வரன் நம்மளை கைவிடுவானா?’ என்று சொல்லிக் கொண்டே அப்பாவை தாத்தா போட்டோவிடம் அழைத்துப் போனாள். ஃபோட்டோவில் அப்பாவைப் பார்த்த பத்மநாபன் குற்ற உணர்வில் ஒரு குழந்தையாக அழுது விட்டான்.
எதிர்பாராமா நீலகண்ட ஐயரும், சங்கரும் அங்க வந்தாங்க. தாத்தா படத்துக்கு முன்னாடியே கல்பனாவின் கையை பிடித்து நீலகண்ட ஐயரிடம் கொடுத்தார் பத்மநாபன். தனது கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியே வந்தார். கல்பனாவும் சுவாமிநாதனும் தாத்தாவின் படத்துக்கு சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்து விட்டு கோவிலுக்கு புறப்பட்டார்கள்
Leave a comment
Upload