தொடர்கள்
விளையாட்டு
அஸ்வின் ஒரு சகாப்தம்  - லண்டனிலிருந்து கோமதி

20241121083006565.jpg

"மாபெரும் சபைதனில் நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழ வேண்டும்

ஒரு மாற்று குறையாத மன்னவன்

இவனென்று போற்றி புகழ வேண்டும் "

என்ற கண்ணதாசனின் வரிகள், ஒரு மனிதன், மாமனிதனாக வாழ்தல் பற்றி கூறுகிறது. பிரபலமாக விளங்குவது மட்டுமே, உயர்ந்த மனிதன் ஆவதற்குரிய தகுதியாகாது. அதையும் தாண்டி திறமை, எண்ணம், விடாமுயற்சி, தொழில் பக்தி, சமுதாய அக்கறை என அனைத்தும் கலந்த கலவையே, அவனை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு மாமனிதனாக, இந்த உலகமே இன்று அவரை பெருமையுடன் திரும்பிப் பார்த்து வியக்கும் அளவிற்கு உயர்ந்து விளங்குகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

20241121083028808.jpg

2011 ஆம் ஆண்டில் உலக கிரிக்கெட் அரங்கில் தடம் பதிக்க ஆரம்பித்த அஸ்வின், பன்முகத் திறமை கொண்டவர். பதிமூன்று ஆண்டுகளில் 537 விக்கெட்டுகள் எடுத்து, ICCI தர வரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர். பாட்ஸ்மானாக தன்னுடைய பயணத்தை துவங்கிய அஸ்வின், ஆப் ஸ்பின்னராக உலக அரங்கில் பரிமளித்து கொண்டிருக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி. இந்தியாவில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்கு கொண்ட, ஒரே இந்திய கிரிக்கெட் வீரரும் கூட. இவர் , உலக சாதனையாளர், சிறந்த வீரர் என்பதற்காக நாம் இவ்வாறு கொண்டாடுகிறோமா, என்றால் இல்லை. இவை அனைத்தையும் தாண்டி, அவரின் பண்பு, தனது அணியினரிடம் பழகும் விதம், கிரிக்கெட்டின் மீது கொண்டுள்ள பக்தி, எதை செய்தாலும் திருந்தச் செய்யும் திறன், விடாமுயற்சி என இவரை பற்றிய பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

ஹர்ஷா போக்லே, அஸ்வினின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பகிர்ந்து கொண்ட சம்பவம், அஸ்வின் மற்றவரிடம் பழகும் விதத்தில் எத்தகைய உயர்ந்த மனிதராக விளங்குகிறார் என்பதற்கு ஒரு சான்று. கிரிக்கெட் விமர்சகராக ஒரு இக்கட்டான சூழலில் தான் இருந்ததாகவும், அப்பொழுது அஸ்வின் தன்னிடம் வந்து, ஆப் ஸ்பின்னிங் பற்றி நாம் பேசுவோமா என்று கூறி, தன்னோடு பல யுக்திகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறியிருந்தார் . அது தன்னை மெருகேற்றுவதற்கு உறுதுணையாக அமைந்ததாகவும் அதில் தெரிவித்திருந்தார். இக்கட்டான சூழலில் இருக்கும் ஒருவரை கீழாக நடத்தாமல், தன்னால் இயன்ற உதவியை தக்க தருணத்தில்,அடுத்தவரின் மனம் கோணாமல் நடந்து கொண்ட அஸ்வினின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது.

20241121083051357.jpg

சாதாரண நடுத்தர குடும்பதிலிருந்து வந்த அஸ்வின், கிரிக்கெட் சிகரத்தின் உச்சியை தொடுதல் சாதாரண செயலல்ல. விடாமுயற்சி, புத்தி சாதுர்யம், ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் பண்பு, என இவற்றை தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக கொண்டிருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது. இவரது நெருங்கிய நண்பரான பிரசன்னா, அஸ்வின் பற்றி கூறுகையில் - தான் தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்தபொழுது, இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்பொழுது, தாங்கள் இருவரும் இரவு உணவு ஒன்றாக உண்ண சென்றதாகவும், ஒரு நாள் அஸ்வின் வரவில்லை, தான் அவரை பார்க்க சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, தனக்கு உடம்பு சரியில்லை என்றும், நீ பார்த்திருந்தால் இந்த செய்தியை வைத்து, உன் அணி வெற்றி பெற யுக்திகளை கையாண்டு, தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு வழிவகுத்து விட வாய்ப்புள்ளது என அஸ்வின் கூறியது தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக குறிப்பிட்டிருந்தார். தன் அணியின் வெற்றியை மட்டுமே எப்போதும் முன்னிறுத்தி செயல்படும், இவரது இந்த செயல், மெய்சிலிர்க்க வைக்கிறது.

அஸ்வினின் யூடியூப் பக்கம்

இவை அனைத்தையும் தாண்டி இவரது யூ டியூப் சேனலின் மிகப் பெரிய விசிறி நான். கிரிக்கெட் பற்றிய பல தகவல்களை தனக்கே உரிய பாணியில் கூறுவதோடு, புதுப் புது சிந்தனைகள் கொண்டு வடிவமைக்கும் ஒவ்வொரு காணொளியும் அருமை. தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரான அஸ்வின், அதன் சாயலோடு தனது காணொளிகளை இணைந்திருப்பது, இவரது ரசிகர்களின் எண்ணிக்கையை பன்மடங்காக்கி இருக்கிறது. வாஷிங்டன் சுந்தரின் வாழ்த்திற்கு அஸ்வினின் பதிலாக "துப்பாக்கியை புடிங்க வாஷி" என்பதே இதற்கு சான்று.

இந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடரின் போது, தனது ஓய்வு அறிக்கையை அஸ்வின் வெளியிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதை பற்றி முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ் குறிப்பிடுகையில்,நான் அணியில் இருந்திருந்தால், இதை தவிர்க்க முயற்சித்திருப்பேன் என்றும், இவ்வாறு அவரை வழி அனுப்பியிருக்க மாட்டேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து, அனைத்து கிரிக்கெட் பிரபலங்களும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அஸ்வின் விளையாடிய போட்டிகளில் அவருக்கு ஆதரவாக இருந்தார்களா என்பது கேள்விக்குறியே. நமது தமிழ் நாட்டை சேர்ந்த மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரும், நாம் அனைவரும் கொண்டாடும் ஸ்ரீகாந்த் உட்பட அவருக்கு வேண்டிய ஆதரவு அளிக்கவில்லை என்பது உண்மையே. இரண்டாவது ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் ஏன் அஸ்வின் வந்தார் என்ற அவரது கேள்வி, அவரது காணொளியை கண்ட என்னை துணுக்குற செய்தது. ஆனால், எந்த ஒரு சிறந்த மனிதரையும், அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகம் பாராட்டி இருக்கிறதா என்பதை யோசித்தால், இது ஒன்றும் வியப்புக்குரிய செயலல்ல.

20241121083207602.jpg

கும்ப்ளேவை உயர்வாகக் கொண்டாடும் இந்திய அணி, அஸ்வினை அந்த இடத்தில் வைத்தார்களா என்பது கேள்விக்குறியே. வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளை ஆராய்ந்தோமேயானால் , நாற்பது டெஸ்ட் போட்டிகளில்,150 விக்கெட்கள், எட்டு முறை ஐந்து விக்கெட்கள், பேட்டிங்கில் ஆறு முறை ஐம்பது ரன்கள், இரண்டு முறை நூறு ரன்கள் என்பது அஸ்வினின் சாதனை. கும்ப்ளே 69 டெஸ்ட் போட்டிகளில் 269 விக்கெட்கள், பத்து முறை ஐந்து விக்கெட்கள், பேட்டிங்கில் ஒரு முறை தான் 50 ரன் மற்றும் 100 ரன்கள் எடுத்துள்ளார். அறுநூறு விக்கெட்கள் சாதனையை அஸ்வின் தொடுவதற்கான ஊக்கம் அவருக்கு அளிக்கப்படாததும் வருத்தத்திற்குரியது.

இருப்பினும் CSK அணிக்கு திரும்பி இருக்கும் அஸ்வின், நிச்சயம் புத்துயிர் கொண்டு சாதனை படைப்பார் என்பதில் ஐயமில்லை. கிரிக்கெட் விளையாட்டின் மீது அவருக்கு இருக்கும் தாகம், காதல் என்றும் குறையாது என்பதும் உண்மையே. அஸ்வினின் அடுத்தடுத்த பரிமாணங்களில் வெற்றியின் சிகரத்தை தொட வாழ்த்துகள்