நியூயார்க்கில் உள்ள 'டைகெர் ஹைட்ஸ்' (Dyker heights) பகுதி கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டத்திற்கு புகழ் பெற்றது . இப்பகுதியை மக்கள், “Winter Wonderland” என அடைமொழி இட்டு அழைக்கிறார்கள் .நான் இப்பகுதியைப் பற்றி கேள்விப்பட்டு, கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இதன் பிரத்தியேகமான அலங்காரங்களைப் பார்க்க சென்றேன்.
டைகெர் ஹைட்ஸ் பகுதி, நியூயார்க்கில் ப்ரூக்ளின் பகுதியில் உள்ளது . இது கிறிஸ்துமஸ் ஒளிக் காட்சிக்கு (Christmas Light display) பிரசித்தி பெற்றதாகும். வசதியான மக்கள் இருக்கும் இக்குடியிருப்புப் பகுதியில் ஒவ்வொரு வீட்டின் வெளியேயும், முன்புறத் தோட்டத்திலும் சர விளக்குகளுடன் கூடிய கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றை 16 தொகுதிகளில் தொடர்ச்சியாக காணலாம். இது "தேங்க்ஸ் கிவிங் டே"க்கு அடுத்த நாளில் இருந்து புது வருடம் ஆரம்பித்த முதல் சில நாட்கள் வரை இருக்கும். மில்லினிய ஆண்டு முதல் இந்த பகுதி சமூக ஊடகங்களால் பேசப்படுகிறது
லூசி ஸ்பாட்டா (Lucy spata) என்பவர், “டைகெர் ஹைட்ஸ்” பகுதியில்,1986 ல் தன் அம்மாவை நினைவு கூர்ந்து, அவர் வழக்கமாக செய்த கிறிஸ்துமஸ் அலங்காரத்தை ஆரம்பித்து வைத்தார். அவரது வீட்டை 38 வருடங்களாக கிறிஸ்துமஸ் மற்றும் பனிக் காலத்துக்கு தொடர்புடையவற்றை ஆடம்பரமாக அலங்காரம் செய்து வருகின்றார். இப்படி அவர் ஆரம்பித்து வைத்த பாரம்பரியத்தை, அண்டை வீட்டார்களும் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அதனை இப்போது தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான வீடுகளில் காணமுடிகின்றது.
இங்கு அண்டை வீட்டார் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை நிலவுகின்றது. நாம் பொங்கல் திருவிழாவில் நம் வீட்டு கோலம் நன்றாக இருக்க சிரத்தையுடன் மேற்கொள்வது போல, இப்பகுதி மக்கள் மற்றவர்கள் வீட்டு அலங்காரத்திலிருந்து தங்கள் வீட்டு அலங்காரம் மாறுபட்டு, சிறப்பாக இருக்க நிறைய முயற்சிகள் எடுக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் அலங்கார தொழில் வல்லுனர்களை நியமித்து, பல்லாயிரம் டாலர் அளவுக்கு பணத்தை செலவழிக்கிறார்கள்.
இங்கு வரிசையாக வீடுகள் ஒளி அலங்காரத்துடன் காணப்பட்டன. மாலையில் சூரியன் மறைந்த பிறகு எல்லா வீடுகளும் கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தன.
இங்கு ஆடம்பர வீடுகளின் ஒளி காட்சியைப் பார்த்து கொண்டே நடைபாதையில் நடந்தேன்.வீடுகளின் முன்புற கதவு, ஜன்னல் போன்ற பகுதிகள் கிறிஸ்துமஸ் வளையங்கள் (Wreath), தோரணங்கள், ரிப்பன்கள், குமிழிகள், நட்சத்திரங்கள், பனித்துளிகள் (Snowflakes) ஆகியவற்றால் அழகுபடுத்தப்பட்டிருந்தன. புல் தரைகள்,மரங்கள், மதில் சுவர்கள் உட்பட வீடுகளின் வெளிப்பகுதி முழுவதும் மின்சார தொடர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சில வீட்டினர், மரம் முழுவதும் ஒரே வண்ணத்தில் தெரியும்படியும் விளக்குகள் அமைத்திருந்தனர்..
இங்குள்ள வீடுகளின் முகப்பு தோட்டங்களில் Nutcrackers, Gingerbread, Candycones, Reindeers, Angels,Toy soldiers, கிறிஸ்துமஸ் மரங்கள், பரிசு பெட்டிகள், சறுக்கு வண்டிகள், குழந்தைகள் விரும்பும் கதாபாத்திரங்கள், இயேசு பிறந்த காட்சி ஆகியவை இருந்தன. சில வீட்டினர், டிசம்பர் 25 ந்தேதி நள்ளிரவில் குழந்தை இயேசு பொம்மையை காட்சிக்கு வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
வெவ்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பாடல்களும், இசையும் கேட்டுக்கொண்டே இருந்தன. ஒரு வீட்டில் நேரடி இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நாம் கொலுவுக்கு ஒரு மையக்கருத்தை (Theme) வைத்து அலங்கரிப்பது போல சில வீடுகளில் அழகுபடுத்தி இருந்ததை காண முடிந்தது. இயந்திரங்களின் மூலம் பனி போன்ற பொருள் கொட்டிக்கொண்டு இருந்தது.
இந்த டைகெர் ஹைட்ஸ்' ஒளி காட்சி, மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10:00 மணி வரையில் இருக்கும். இதனைப் பார்க்க கட்டணம் எதுவுமில்லை. சில வீடுகளின் வெளியே உண்டியலை பார்க்க நேர்ந்தது.அந்த வீட்டினர்,மக்கள் விருப்பப்பட்டு உண்டியலில் போடும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கின்றார்கள்.
தெருமுனைகளில் இருந்த உணவு டிரக்கில் ஐஸ்கிரீம், சூடான சாக்லேட் பால் மற்றும் உணவு வகைகள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன.. குழந்தைகள் மிகவும் குதூகலமாக காணப்பட்டார்கள். . மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினரின் வாகனங்களும் இருந்தன. எனக்கு ஒரு திருவிழாவிற்கு வந்த மனநிறைவு ஏற்பட்டது.நாம் பொங்கல் திருவிழாவிற்கு குடும்பமாக சேர்ந்து, நம் சொந்த ஊருக்கு போவது போல, இங்கு அருகாமையில் வசிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் குழந்தையில் இருந்து குடும்பமாக சேர்ந்து வந்து, இந்த சிறப்பான ஒளி காட்சியை பார்க்க வருகிறார்கள். இதனை ஒரு பாரம்பரியமாக வைத்திருக்கிறார்கள்.
டைகெர் ஹைட்ஸ்' ல் கிறிஸ்துமஸ் ஒளி காட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த லூசியின் வீட்டை, எண்பத்தி நாலாவது தெருவில் பார்த்தேன். அவரின் வீட்டிற்கு வெளியே மிகவும் கூட்டமாக இருந்தது. அவருடைய தோட்டம், உயரமான மர பொம்மைகளால் நிரம்பியிருந்தன. அங்கு ஏறக்குறைய 30,000 விளக்குகள், 80 வடிவங்கள் மற்றும் 16 அடி Nutcracker, 30 அடி Toy soldiers, 40 Angels பொம்மைகள் இருந்தன. இவற்றில் 12 அடி உயரம் உள்ள இரண்டு Soldiers பொம்மைகளை பாரம் தூக்கும் கருவி மூலம் (Crane) லூசி வீட்டிற்கு கொண்டுவந்தார். பிரம்மாண்டமான பேசும் Santa வும் இருந்தது. வீட்டிற்கு வெளியே இதமான இசையும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இப்பகுதி, சிறுவர் கதைகளில் வரும் மாய உலகம் போல காட்சியளிக்கின்றது...நம் ஊரில் கார்த்திகை தீபத்தின் போது ஒளிரும் அகல் விளக்குகளை பார்க்கும் மகிழ்ச்சியான உணர்வு எனக்கு ஏற்பட்டது..வாய்ப்புள்ளவர் அனைவரும் இந்த ஒளிக்கண்காட்சியை தம் வாழ்நாளில் பார்த்து விட வேண்டும்.
Leave a comment
Upload