தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
‘எண்குணத்தார்’ - பித்தன் வெங்கட்ராஜ்  

20241120234406965.jpeg

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

-குறள் 9

இறைவனை எண்குணத்தான் என்கிறார் வள்ளுவர்.

உரையாசிரியர் பலரும் எண்குணம் என்பதற்கு எட்டுக் குணங்கள் என்றும், எண்ணத்தகு குணங்கள் என்றும், எளிமையான குணம் என்றும், மதிப்புமிகு குணம் என்றும் பலவகையாக உரை செய்துள்ளனர். அதில், ஓர் ஒப்பீட்டுக்காக எட்டுக் குணங்கள் என்பதை நாம் எடுத்துக்கொள்வோம்.

விவிலியத்தில் எட்டு வகையான குணங்கள் கொண்டோரை இயேசு பெருமான் பேறு பெற்றோர் அதாவது பாக்கியவான்கள் என்கிறார்.

பொதுவாகவே எட்டை வைத்து நிறையத் தத்துவங்கள் இலக்கியங்களில் உண்டு.

எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம், எறும்பும் தன் கையால் எண்சாண், எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ எனத் தொடர்கிறது அது.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 5 இல், இயேசு பெருமகனாரின் மலைப்பொழிகை வருகிறது. (பொழிகை என்றால் தொடர்ச்சியான உரை என்கிறார் பாவாணர். மலையின் மீதிருந்து செய்த தொடர்ச்சியான உரை). அதில் எட்டு வகையான பேரைப் பாக்கியவான்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் யார் யாரென்று பார்ப்போம்.

1. ஆவியில் எளிமையுள்ளவர்கள்:

செல்வத்தை முதன்மையானதாகக் கருதாது, உள்ளத்தளவிலும் எளிமையானவர்களாக இருந்து, தேவனையே எண்ணித் துதிப்பவர்களுக்குச் சொர்க்கத்தில் இடமுண்டு. அவர்கள் பேறு பெற்றவர்கள்.

2. துயரப்படுகிறவர்கள்:

பிறர் துன்பத்தையும் தன் துன்பமாய் எண்ணித் துயருற்று, அதைக் களைய வேண்டி இறைவனைத் துதிப்போர் ஆறுதல் பெறுவார்கள். அவர்கள் பேறு பெற்றவர்கள்.

3. சாந்தகுணமுள்ளவர்கள்:

பொறுமையைக் கடைப்பிடிப்போர் இவ்வுலகத்தின் மரபுரிமை கொண்டவர்கள். அவர்கள் பேறு பெற்றவர்கள்.

4. நீதியின்மேல் பரிதாகமுள்ளவர்கள்:

உயர்வு தாழ்வு பேதம் நீக்கி, இலாப நஷ்டக் கணக்குகள் தாண்டி, நேர்மையையும் நியாயத்தையும் கொண்டு நீதிக்காகப் போராடுவோர் திருப்தியடைவார்கள். அவர்கள் பேறு பெற்றவர்கள்.

5. இரக்கமுள்ளவர்கள்:

உயிர்நேயம் கொண்டோர், மனிதர்க்கும் மனிதரல்லாத பிற உயிர்களுக்கும்கூட இரக்கம் காட்டுபவராக இருப்போர் இரக்கத்தைப் பெறுவார்கள். அவர்கள் பேறு பெற்றவர்கள்.

6. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்:

தன் உள்ளத்தாலும் தவறான எண்ணங்களை நினையாதவர்கள் இறைவனைக் காண்பார்கள். அவர்கள் பேறு பெற்றவர்கள்.

7. அமைதியை விரும்புவோர்:

சண்டை, சச்சரவுகள், போட்டி, பொறாமைகள் தவிர்த்து உலகம் நிம்மதியாய்த் தழைத்திருக்க வேண்டி, அமைதியைக் கடைப்பிடிப்போர் இறைவனின் குழந்தைகள். அவர்கள் பேறு பெற்றவர்கள்.

8. நீதியினிமித்தம் துன்பப்படுபவர்கள்:

நீதிக்காக, அதாவது உண்மைக்காகத் தன் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை ஏற்று, அந்நீதி பிறழாமல் காப்பவர்களுக்குச் சொர்க்கத்தில் இடமுண்டு. அவர்கள் பேறு பெற்றவர்கள்.

இந்த எட்டு வகையானோரும் பாக்கியவான்கள் அதாவது நற்பேறு பெற்றவர்கள் என்று கூறுகிறார் இயேசு பெருமான். இந்த எட்டுக் குணங்கள் எந்தவிதமான பிரிவினைகளையும் சொல்லாமல் அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்கும்படியாக உள்ளதை நாம் கவனிக்கிறோம்.

உலக நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த மலைப்பொழிகையின் கருத்துகளை ஏற்று நடந்து, அவரின் தியாகத்தை நியாயப்படுத்துவோம். நற்பேறு பெறுவோம். நல்வாழ்வு வாழ்வோம். அவர்தம் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

எத்தனை உண்மை வந்து பிறந்தது

இயேசு பிறந்ததிலே!

இத்தனை நாளும் மானிடன் வாழ்வது

இயேசுவின் வார்த்தையிலே!

-கவியரசர் கண்ணதாசன்.

(இயேசு காவியம்)

அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்.