ஆட்சியில் பங்கு
விகடகவியார் உள்ளே நுழைந்ததும் அதிரசம், முறுக்கு, போன்றவற்றை ஒரு தட்டில் வைத்துகொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன். அதிரசத்தை எடுத்து மெல்ல சாப்பிட ஆரம்பித்தார் விகடகவியார். நாம் 'விஜய் மாநாடு ' என்று துவங்கியதும் 'நான் அந்த செய்திக்கு தான் முதலில் வருகிறேன் ' என்று ஆரம்பித்தார் விகடகவியார்.
நல்ல கூட்டம் காவல்துறை 8 லட்சம் பேர்கள் வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் அதில் 90 சதவீதம் அவர் ரசிகர்கள் காசெல்லாம் தந்து கூட்டப்பட்ட கூட்டம் இல்லை என்பதும் போலீஸ் தகவல். அவர் பேசுவதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு முன்பே அவரது ஆலோசகர்களிடம் என்ன பேசலாம் என்ன பேச கூடாது என்பதை பேசி முடிவு செய்தார் என்றார் விகடகவியார்.
பிறகு அவரே தொடர்ந்து அவர் பேச வேண்டியதை சொல்ல வேண்டியதை டைப் செய்து வைத்திருந்தார் அதையும் படித்தார் நடுவே இந்த அடிச்சு விடறது என்று சொல்வார்களே அதையும் செய்தார் தமிழக வெற்றி கழக தலைவர் என்றார்.
அந்த அடிச்சு விடுவது என்கிறீர்களே அது எது என்று நாம் கேட்டதும் பொதுவாக திமுக பாசிச பாஜக என்று பேசும் அவங்க பாசிசம் என்றால் நீங்க பண்ணுவது என்ன பாயசமா என்று ஆவேசமாக கேட்டது மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள் என்று நேரடியாக திமுகவின் மீது தாக்குதல் அதிகமாக இருந்தது. இதேபோல் கூட்டணி சேர்ப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்று அவர் கொளுத்திப் போட்ட வெடி திமுகவில் தான் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார் விகடகவியார்.
ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் சில தலைவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இப்போது ஆட்சியில் பங்கு என்ற விஜயின் அழைப்பு கூட்டணியில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை என்றார் விகடகவியார்.
"ஆனால் அதிமுகவை அவர் கண்டு கொள்ளவில்லையே" என்று நாம் கேட்டதும் அது பற்றியும் விஜய்க்கு வேண்டிய நிர்வாகிகளிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் சொன்னது ஆட்சியில் இருப்பவர்களை நாம் இப்போதைக்கு விலாசுவோம் மற்றதெல்லாம் பிறகு என்று விஜய் சொல்லிவிட்டாராம் என்றார் விகடகவியார்.
சரி அவர்கள் கொள்கை விஷயத்துக்கு வாருங்கள் என்று நாம் கேட்டதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அண்ணா சொன்னது அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். பெரியார் கட் அவுட் வைத்தார். ஆனால், அவரது கடவுள் எதிர்ப்புக் கொள்கையை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சொல்லி விட்டார். பெரியார் மற்ற கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டார். ஆனால், கடவுள் எதிர்ப்பில் தான் உறுதியாக இருந்தார் பெரியார் அதையே செல்லாது செல்லாது என்று சொல்லிவிட்டார் நடிகர் விஜய். காமராஜர் மாடல்பள்ளி மாவட்டத்தில் அமைப்போம் என்று பாஜகவின் கடவுள் ஆதரவு காங்கிரஸின் காமராஜர் திராவிட கட்சிகள் பேசும் நீட் எதிர்ப்பு இருமொழிக் கொள்கை ஆளுநர் வேண்டாம் இவற்றையெல்லாம் தன் கட்சிக் கொள்கையாக சொல்லி விட்டார் என்று சிரித்தார் விகடகவியார்.
"சரி திமுக விஜய் மாநாடு விஜய் அரசியல் கட்சி இதை எப்படி பார்க்கிறது "என்று நாம் கேட்டோம்.
"கொஞ்சம் பயந்து தான் போயிருக்கிறார்கள் என்பது ஆளாளுக்கு திமுக தரப்பில் கருத்து சொல்வதில் இருந்து தெரியவில்லையா ? என்று சொல்லி சிரித்த விகடகவியார் விஜயை எதிர்த்துப் பேசுவதற்கு நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின். கட்சியிலெல்லாம் சேர வேண்டாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயை எதிர்த்து பேசினால் போதும் என்று பேக்கேஜ் மாதிரி பேசி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தற்சமயம் இதற்கு ஓகே சொல்லி இருப்பவர்கள் பிரகாஷ்ராஜ், சந்தானம் ஆகியோர் மட்டுமே. ஆனால் மற்றவர்களிடமும் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார் என்றார் விகடகவியார்.
"திருமாவளவன் விஜய் பேச்சை விமர்சனம் செய்திருக்கிறாரே "என்று நாம் கேட்டதும் அவர் விமர்சனம் தான் செய்திருக்கிறார். ஆனால், விஜய்யை அவர் கண்டிக்கவில்லை. ஆட்சியில் பங்கு என்ற விஜயின் தேன் பேச்சு காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம் பேரையும், திருமாவளவன் கட்சியில் நிறைய பேரையும் யோசிக்க வைத்திருக்கிறது. அதே சமயம் திராவிட கட்சிகள் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை பலமுறை நிராகரித்து இருக்கிறது. 2006 -இல் திமுக மைனாரிட்டி ஆட்சி தான் செய்தது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தயவில் தான் ஆட்சி செய்தது. அப்போதே அவர்கள் ஆட்சியில் பங்கு கோரிக்கையை ஏற்கவில்லை. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்காது. இப்போதைக்கு இதுதான் நிலவரம். 2026 -இல் என்ன நடக்குமோ யார் அறிவார் ? என்று சொல்லி சிரித்தப் படி ....
மகாராஷ்டிரா தேர்தல் சூடு பிடித்திருக்கிறது.
சிவசேனையில் இருந்தும் அந்த குடும்பத்தில் இருந்தும் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய ராஜ் தாக்கரே வாரிசு அரசியல் பற்றி சொன்ன விளக்கம் தான் சூப்பர். பின் சீட்டில் அமர்ந்தபடி காரை இயக்க உத்தரவு பிறப்பிக்கும் ரிமோட் கண்ட்ரோல் செயல்பாட்டை விட, வாரிசு அரசியல் எவ்வளவோ மேல் என்ற விகடகவியார் எதார்த்தத்தை தானே சொல்லியிருக்கிறார் அவர் என்ற படி புறப்பட்டார்.
Leave a comment
Upload