தொடர்கள்
கவிதை
தீபத்திருநாள்-கோவை பாலா

பண்பாட்டின் அடையாளம்...!!

20241001120923819.png

அன்றாடம் அலைந்தோடும்,
அயராது உழைத்துண்ணும்
மக்களின் மனம் தேடிடும்...
மகிழ்ச்சி சூழலை நாடிடும்...!

ஆனந்தம் தரும் நிகழ்வுகள்
அரிதாகத் தான் வரும்..! அதை
பண்டிகை கொண்டாட்டம்
பெரிதாகக் கொண்டு வரும்...!

உன்னதத் தருணங்கள் பல
உள்ளத்தில் மகிழ்ச்சி தரும்...!
எண்ணத்தின் மனஓட்டங்கள்
வண்ணத்தை சேர்த்துவிடும்...!

எத்தனையோ பண்டிகைகள்
கொண்டாடி மகிழ்ந்தாலும்...
அத்தனையும் தீபாவளிக்கு
நிகர் உண்டோ என்பார்கள்...!

உதயமாகும் தீபத்திருநாள்...!
இதயமாகும் ஏக்கத்தில் தான்...!
ஒளிரும் ஒளிக் கீற்றுகளால்,
மிளிரும் புத்துணர்வு தான்...!

சின்னஞ் சிறார்கள், தனிச்
சிறகுகள் முளைத்தது போல்
துள்ளித் திரிந்து இருப்பார்...!

வண்ணமயமாய் ஆடைகளில்,
வண்ணத்துப்பூச்சிகள் போல்
இளசுகள் எங்கும் வட்டமிடுவார்..!

பிள்ளைகள் பேரக்குழந்தைகள்,
அள்ளித்தரும் ஆனந்தத்தில்,
மூத்தவர் திளைத்திருப்பார்...!

உற்றார் உறவினர்கள், தம்
பெற்றோர் பெரியோர் வணங்கி,
வாழ்த்துகள் பெற்றிருப்பார்..!

சுற்றத்தார் சூழ்ந்து இருந்து,
சுவையான விருந்து உண்ணும்
களிப்பில் மகிழ்ந்திருப்பார்..!

பாசமும் பந்தமும் இணைந்து,
முகத்தின் சிரிப்பு எல்லாம்
மத்தாப்பின் ஒளியில் காண்பார்...!

சொந்தங்கள் சேர்ந்து அன்று
வான் வெடிச் சத்தத்தால்
விண்ணைப் பிளந்திருப்பார்...!

இனம் மதம் மொழி மறந்து,
மனம் விரும்பி முகமலர்ந்து,
வாழ்த்துகள் பரிமாறுவார்...!

பார்க்கும் திசைகள் எல்லாம்
பளிச்சென்று முகம் சிரிக்கும்...!
பண்பாட்டின் அடையாளமாய்
தீபாவளி திருநாள் இருக்கும்...!!

இனிய தீபாவளி வாழ்த்துகள்...!!