பிரியங்கா மணிமேகலை சண்டை, ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு, சுசித்ரா மீது புகார் இயக்குனர் சிகரத்தை தாழ்வாகப் பேசியதால்.. சமூக வலைத்தளம் ஜெகஜோதியாகத் தான் போயிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு இதில் அத்தனையிலும் கருத்து இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் கூண்டில் ஏற்ற அவர்கள் தயங்குவதில்லை. பிரியங்கா மணிமேகலை இருவரில் யார் நல்லவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். தீர்ப்பும் தவறாமல் குடுத்து விடுவார்கள். “ஜெயம் ரவி எப்பொழுதோ எங்கேயோ சென்று யாருடனோ தங்கினார் அதனால் தான் விவாகரத்து." உண்மையோ பொய்யோ இதற்கு ஜெயம் ரவி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது”. சுசித்ராவின் கணைகள் அடுத்து யாரைத் தாக்கும் என்பது ஒரு தெலுங்கு படம் பார்ப்பது போல். யார் தலை எப்போது வேண்டுமானாலும் போகும். மக்கள் பகாசுரனைப் போல ஆகிக்கொண்டிருக்கிறார்கள். தீராப்பசி. சமூகவலை தளம் தான் பசியையும் கொடுக்கிறது உணவையும் அளிக்கிறது. பிரியங்கா மணிமேகலை சண்டை என்று தேடினால் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது 400k மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது. மற்ற வீடியோ க்களும் கிட்டத்தட்ட இத்தனை பார்வைகள் எத்தனையோ உணர்ச்சிகள். பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் இதை எல்லாம் அனுபவிக்க வேண்டியது தான் என்று காரணம் சொன்னாலும் கோடுகளை தாண்டும்போது, இதற்கு எல்லாம் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டுமா என்று கூட தோன்றுகிறது.
இந்த கட்டுரை போன வாரம் ஆரம்பித்தேன். முடிக்க முடியவில்லை. அடுத்த வாரம் முடித்து விடலாம் என்பதற்குள் கார்த்தி, திருப்பதி லட்டு விஷயம், சிம்புவின் ஏதோ புலம்பல், சுசித்ராவின் மற்றும் ஒரு வீடியோ. முன்பெல்லாம் செய்தி என்ற சொல் உபயோகப் படுத்தும்போது கருத்து சேர்க்காத விஷயம் என்று தான் நம் போன்றவருக்குத் தோன்றும். செய்தி இப்பொழுது கன்டென்ட் ஆக மாறிவிட்டது. உள்ளடக்கம் என்பது எது வேண்டுமானாலும் இருக்கலாம். கன்டென்ட் creation ஒரு முக்கியமான பணி. ஊடகங்கள், சமூக வலை தளங்கள் சற்றும் ஓயாமல் இதை செய்து கொண்டிருக்கிறது - வியாபாரத்தளங்கள்.
சரி இதில் நான் என்ன சொல்ல வருகிறேன்? சமூக வலைத்தடங்களில் நானும் இருப்பதினால் தானே குறை கூற முடிகிறது. பொழுது போகவில்லை என்றால் நம் கை தானாகவே ஷார்ட்ஸ், ரீல்ஸ் என்று செல்கிறது. அது எல்லோரும் சொல்வது போல் அடியே இல்லாத கிணறு. போய்க்கொண்டே இருக்கலாம் 24 /7 என்று. கிசு கிசு படிப்பதெனபது எல்லோருக்கும் ஒரு ரகசிய மகிழ்ச்சி தான். அந்தக்காலத்திலேயே வாரமலரில் 'ர' நடிகையின் ரகசிய திருமணம் என்றெல்லாம் படித்து வளர்ந்தவர்கள் தான். அதிலெல்லாம் இல்லாத ஏதோ ஒரு காவாலித்தனம் சமூகவலைத்தளத்தில் விஷயங்களை படிப்பதிலும் பகிர்வதிலும் இருப்பதாகத் தோன்றுகிறது. இன்ஸ்டன்ட் க்ராடிபிகேஷன் என்று சொல்லுவார்கள். நமக்கு தேவையில்லாத விஷயமாகவே இருப்பினும், நம் பதிவு அதிலிருப்பதிலும், அதன் மூலம் ஒரு சர்ச்சையை உண்டாக்குவதிலும் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி நமக்கு இருக்கிறது. பிந்தைய உண்மை (Post Truth ) என்னும் 21 ஆம் நூற்றாண்டு கோட்பாடு ஒரு விஷயத்தை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. எந்த உண்மையும் தற்போது உணர்வு ரீதியாகவே பார்க்கப்படுகிறது. எந்த ஒரு செய்தியும் மக்கள் உணர்வுக்கே எடுத்து செல்லப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் அது உண்மை தான். முப்பது வினாடிகளிலிருந்து மூன்று வினாடிகள் கன்டென்ட் வரை அத்தனையும் மக்களின் உணர்ச்சியை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. நாமும் சளைக்காமல் அந்த வலையில் மாட்டிக்கொண்டே இருக்கிறோம். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியுமா என்ன?
Leave a comment
Upload