தொடர்கள்
கதை
மீண்டும் ஒரு கல்யாணம்-சுஶ்ரீ

2024911110751168.jpeg
பாருவோட ஓர்ப்படியோட பேத்தி கல்யாண ரிசப்ஷனாக்கும்,பஞ்சு தாத்தாவும்,பாருப்பாட்டியும் டாண்ணு 7 மணிக்கே வடபழனில இருந்த எலைட் பிளாசான்ற ஸ்டார் ஹோட்டலுக்கு ஓலா டாக்சில போய் இறங்கியாச்சு.
வாசல்ல நின்ன கூர்க்கா விரைப்பா சல்யூட் வைத்தான்.பஞ்சுவுக்கு பழைய காலேஜ் என்.சி.சி. ஞாபகம் வந்து,பதிலுக்கு தானும் விறைப்பா நின்னு காலைத் தூக்கி அடித்து ஒரு சல்யூட் பண்ணினார்.பதிலுக்கு அவன் பண்ண,திரும்ப இவர் பண்ண, பெரிய வாகா பார்டர் சீன்தான் அங்கே.ஒரு சின்ன கூட்டம் சுத்தி நின்னு மொபைல்ல வீடியோ,செல்ஃபினு ஒரே அமர்க்களம்.
பாருப் பாட்டி திரும்ப வந்து பஞ்சுத் தாத்தாவை கையைப் பிடிச்சு உள்ளே இழுத்துண்டு
போனா.என்ன அந்த இளம் கூர்க்காவோட போட்டி போட்டுண்டு கொடி மரியாதை
பண்றது? ராத்திரி பூரா முழங்கால் வலினு உயிரை வாங்கறது,டி.வி.ல வாகாபார்டர் மிலிட்டரிக்காராளைப் பாத்துட்டு அவா மாதிரி நெஞ்சு வரை காலைத் தூக்கி சல்யூட் பண்றது,விழுந்து தொலைச்சா என்ன பண்றது.
அதில்லைடி அந்தக் காலத்துல என்.சி.சி. ல நான் ரேங்க் ஹோல்டராக்கும்,என்
கிட்டயே அந்த கூர்க்கா போட்டி போட்டா விடுவேனா?
சரி போதும் உங்க பிரதாபம்,எல்லாரும் உங்களையே வேடிக்கை பாக்கறா பேசாம உள்ளே வாங்கோ.உள்ளே ரிசப்ஷனிஸ்ட் கரம் குவித்து,மேரேஜ் ரிசப்ஷன் 3 rd ஃப்ளோர் ல்லிதா ஹால்ல மேடம்,சார்னு லிஃப்ட் பக்கம் கை காட்டினாள்.
லிஃப்ட்ல ஏறினவுடனே கதவுகள் மூடிக் கொண்டது.எந்த பட்டனை
எங்கே அமுக்கணும்னு பஞ்சு தேடறதுக்குள்ளே லிஃப்ட் ஜிவ்னு மேலே
போய் 12வது மாடில நின்னு திறந்தது.உள்ளே நுழைந்த ஒரு இளம் ஜோடி
இவர்களைப் பாத்து புன்னகைத்து விட்டு நின்றனர்.லி்ப்ட் இப்ப ஜிவ்னு
இறங்கியது படு வேகமாய்.நின்றவுடன் வெளியே வந்து பாத்தா அதே
ரிசப்ஷனிஸ்ட்,திரும்ப அதே கிரவுண்ட் ஃப்ளோர்.
இவர்களைப் திணறுவதைப் பாத்த ஒரு ஹோட்டல் பணியாள் இவர்களை
திரும்ப உள்ளே அனுப்பி லிஃப்ட் பட்டன் மூணை அமுக்கி இதான் லலிதா
ஹால்னு அனுப்பி வச்சார்.
அப்பாடா ஒரு வழியா கரெக்டான இடத்துக்கு வந்தாச்சுனு உள்ளே நுழைஞ்ச
அவர்களை முன்னால் மேசை போட்டு நின்றிருந்த இரண்டு இளசுகள் பன்னீர்
தெளித்து “ஆயியே”ன்னதுகள்.

“ஏண்டி பாரு,சரியான கல்யாணம்தான் வந்திருக்கோமா”
“எதுத்தாப்பல பாருங்கோ மேடைல ஏதோ வட நாட்டுப் பொண்ணு மாப்பிள்ளை
போலன்னா இருக்கு”
“ஆமாம் இல்ல? பின்னால ஜிகினா எழுத்துல “சுக்ராம் வெட்ஸ் சுமேதா”
இதுக்குள்ள நேரு தொப்பியோட ஒருத்தர் “பெஹலே கானா காயியே, லெப்ட் சைட்
மே டைனிங் ஹால்,பாத் மே சுக்ராம் பேடா சே மிலியேகா”
“என்னடி பாரு சிரிச்சிண்டே திட்டறான் இந்த ஆளு”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை முதல்ல சாப்பிட்டுட்டு அப்பறம் மணமக்களை
பாருங்கன்றார்”
“உங்க ஜிப்பா பாக்கெட்ல பத்திரிக்கை இருந்ததே பிரிச்சு பாருங்கோ இந்த
ஹால்தானான்னு”
ஓரு ஓரமாய்ப் போய் தன் பாக்கெட்ல எட்டாய் மடிச்சு வச்சிருந்த பத்திரிக்கையைப்பிரிச்சு பாத்தார், ஓட்டல் பேரு,ஹால் பேரு
விலாசம்லாம் சரியாதான் இருக்கு. ஆனா பொண்ணு பேரு சவிதா, மாப்பிள்ளை பேரு கணேசன்னு போட்டிருக்கே.
“பாரு நாம சரியான இடத்துக்குதான் வந்திருக்கோம்,இந்த வடநாட்டுக்காராதான்
தப்பான இடத்துல ரிசப்ஷன் பண்றார்”
“கொடுங்கோ அதை இங்கே,எலைட் பிளாசா,லலிதா ஹால்
3வது மாடி எல்லாம் சரியாதானே இருக்கு.திருமண வரவேற்பு
17 செப்டம்பர்.ஆமாம் இன்னிக்கு தேதி 7 தானே! பஞ்சு தாத்தா பத்திரிகையை எட்டா மடிச்சதுல 1 மறைஞ்சு 17 க்கு பதில்
7 மட்டும் தெரியறது.10 நாள் முன்னாலயே வந்துட்டோமா!”.
“என்னாச்சு பாரு சரியான மண்டபம்தானே வந்திருக்கோம்”
“சரி சத்தம் போடாம கிளம்புங்கோ,இடம் சரிதான் தேதிதான் தப்பு.
10 நாள் முன்னாலயே வந்துட்டோம்.ஒரு காரியம் சரியா பண்ணத் தெரியாது,இதுல வந்தவுடனே ராயல் சல்யூட் வாகா பார்டர் ஜவான்னு நினைப்பு,எல்லாம் என் தலையெழுத்து வாங்க சீக்கிரம்.”
“அதில்லை பாரு,நீதானே சொல்லுவே லேட்டா எங்கயும் போக்கூடாதுனு இப்ப
சீக்கிரம்தானே.....”
உளறாம புறப்படுங்கோ,சீக்கிரம்னா பத்து நாள் முன்னாலயா?”