தொடர்கள்
கதை
கனவு நிஜமானது – பா. அய்யாசாமி

202491111130444.jpg


காலங்கார்த்தாலே எனக்கு கனவிலே ரயில் வந்தது,
விடியற்காலையிலே நாய்களும் ஊளையிட்டது ருக்கு, காலையிலே கனவுகண்டால் பலிக்குமென்பாளே, கனவில் இரெயில் வந்தால் என்ன ருக்கு சொல்லுவா?

ம். ரயில் நின்றதா.. ஓடியதா? என திரும்பக் கேட்டாள் ருக்கு.

அது ஞாபகம் இல்லை என்றவர் நின்றால் என்ன ? ஓடினால் என்ன ? என கேட்டார். சாவுச்செய்தி வரும் என்பார் என் மாமியார், ஆனாலும் எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாள் ருக்கு.

ஏன் அப்படி சொல்கிறாய் ?

உங்களைக் கூடத்தான் ரொம்ப சமர்த்து என்றார் என் மாமியார், நம்பி ஏமார்ந்தேன் என்றாள் ருக்கு.

வாய்ப்பு கிடைக்கிற இடத்திலெல்லாம் இடறிண்டேயிரு,என முகம் சுருங்கினார் அய்யாசாமி.
நம்மாத்திலே யாரும் இப்போ உடம்பிற்கு முடியாமல் இழுத்துண்டு இல்லே ? என சொன்ன ருக்குவிடம்

ஏனில்லே ? என் மாமாதான் மூனு வருஷமா சீரியஸாகவே இருக்கார் டிபியோட என்றார் அய்யாசாமி.

மூனு வருஷமா இழுத்துண்டிருக்க அவர் என்ன டிபி பேஷன்டா ? இல்லை டிவி சீரியலா ? என ருக்கு கேட்ட்தும், எங்காத்து மனுஷான்னா எப்பவும் உனக்கு இளக்காரம்தான் எனறார் அய்யாசாமி.

தெருவிலே இருந்த ஒரே கிழம் அபஸ்வரம் தாத்தா, அவரும் போயாச்சு ? வேற யார் என யோசித்தார் அய்யாசாமி

ஒரு வேளை கோடியாத்து பாட்டியாக இருக்குமோ என்று அய்யாசாமி் சொன்னதும், “அது அத்தனை சீக்கிரம் போயிடுமா ? என்ற ருக்கு ஆத்திற்கு வந்த மாட்டுப்பெண்ணிற்குப் பண்ணிண சேட்டைக்கு அத்தனை சீக்கிரம் போயிடுமா ? இன்னும் அனுபவிக்கனுமே என்றாள்.

அப்போ அந்த பண்ணையராத்திலே ஒரு மாமா இருப்பாரே, அவரோ ? உடம்பிற்கு முடியாமல் இருக்கார் என்று போஸ்ட் ஆபிஸில் பேசிண்டா.
போதுமே,உங்க இரெயில் கனவை வச்சு யாரையெல்லாம் மேலே பார்ஸல் அனுப்பிவிடப் பார்க்கிறேள் ? என்று அடக்கிய ருக்கு.

ரத்த சம்பந்தம் உள்ள பந்துக்கள், தாயதிக்காரளுக்குத்தன் இதைச் சொல்லுவா, நீங்க நினைக்கிறவா எல்லாருக்கும் அப்ளிகேபுள் ஆகாது. எல்லோரும் ஒரு நாள் போகத்தான் வேண்டும் யார் முதலில் போகிறார்கள் என்பதுதான் வாழ்க்கையில் புரியாதப் புதிர் என்ற ருக்கு,

“போய் வடாத்தை மூனாவது நாள் காய்ச்சலுக்குப் போடுங்கோ,
ஞாபகமாக காக்கா விரட்ட நம்ம கல்யாணத்திலே நீங்க போட்டுண்டு நின்னேளே ஜோக்கர் மாதிரி, அந்தக் கறுப்புக் கோட்டை எடுத்துப் போடுங்கோ, ஒரு காக்கையும் கிட்டே வராது என சொல்லி மொட்டை மாடிக்கு அனுப்பினாள்.

தூக்கதிலே வந்த கனவைச் சொன்னால், நமக்கு தூக்கமே இல்லாமல் செய்திடுவா இந்த ருக்கு என முனகிய படியேறினார்.

என்ன முனகல் அங்கே ? என்ற ருக்குவிடம்,
ஒன்றும் இல்லை, காரியத்தில் கண்ணாகவிருக்கிறாய் என்றேன்.

நிலைபோன் ஒலித்திட, எடுத்த ருக்கு, அப்படியா ? அச்சோ!!
எப்போ ? எனக் கேட்டுப் பரிதாபப்பட்டாள்.

இந்த பிராமணன் கனவைக் கண்டதும் போதும், எதிர் பார்த்த மாதிரியே துக்கச் செய்தி வந்திடுத்தே !

ஐயோ பாவம் பத்மா. கணவனோ டாஸ்மாக்-விற்கு வாடிக்கையாளர்,தனது உழைப்பினாலேதான் குழந்தைகளைப் படிக்கவைத்து வந்தாள், பத்மா இனி வருமானத்திற்கு என்ன பண்ணுவாளோ தனி மனுஷியாக. அவளுக்குப்போய் இப்படி ஆயிடுத்தே ? என கவலைப்பட்டாள் ருக்கு.
மொட்டை மாடிக்குச் சென்று யாரெல்லாம் உடம்பிற்கு முடியாமல் இருக்கிறார்கள் என யோசித்து ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த அய்யாசாமியை,
யண்ணா ! சீக்கிரம் நீங்க கீழே வாங்கோ, நாம பத்மா வீட்டிற்குப் போகனும் என கூப்பிட்டாள்,

என்னாச்சு இப்போ ? பத்மா வீட்டுவேலைக்கு வரலியா ?

இல்லைன்னா, அவள் வளர்த்த பசு மாடு காலையிலே இறந்துடுத்தாம். இப்போதான் அழுதுண்டே சொன்னாள் பாவம்.

நாலு வீட்டிற்குப் பால் கொடுத்துப் பிழைக்கவைத்தது, அதுவும் போயிடுத்து, நீங்க உடனே போயி இருபதாயிரம் ரூபாய் எடுத்துண்டு வாங்கோ, அவளுக்கு கொடுக்கனும், தற்போதைக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்றாள் ருக்கு.
இருபதாயிரம் எப்படி போதும் ? கறவை மாடாத்தான் பார்த்து வாங்கனும்,இதை நல்லடக்கம் பண்ணனும் என் முப்பதாயிரமாக எடுத்து வந்துக்கொடுத்தார்.

என்ன கொஞ்சம் காஸ்ட்லி கனவு கண்டீர்கள் போல என கலாய்த்த ருக்குவிடம், நல்லவேளை ருக்கு. கனவில் ரயில்தான் வந்தது, ஏரோப்பிளேன் வந்திருந்தால்...என பதிலளித்தார்.

அதெல்லாம் மூட நம்பிக்கைண்ணா. இப்போ கொடுத்தேள் பாருங்கோ இதுதான் நிஜமும், யதார்த்தமும்.

பத்மா வீட்டிற்குச் சென்று தொகையினைக் கொடுத்துவிட்டு பத்மாவிற்கு ஆறுதல் சொல்லித் திரும்பியவள் அய்யாசாமியை ஸ்நானம் பண்ணச்சொன்னாள்.

ஏன் ? இதற்குப்போய் என கேட்டதற்கு, இத்தனை நாள் நாம சாப்பிட்டது அதோட பால்தாண்ணா. ரத்த சம்பந்தம் இருக்கே. தாய் மாதிரி இல்லையோ நமக்கு ?! என்றாள் ருக்கு.