என்ன ராஜேந்திரா நாளைக்கு மினிஸ்டர் விசிட் தெரியுமில்லே!
உன் ஏரியா வழியாகத்தான் எல்லோரும் போவாங்க, நீயும் உன்
பொஞ்சாதியும் சேர்ந்து அந்த ஏரியாவை சுத்தபத்தமாக, சுகாதாரமாக
வைத்திருக்கணும் என்றார் வாழப்பேட்டை நகராட்சி துப்புரவு ஆய்வாளர்
ஐயா நாளைக்கு ஒரு நாள் லீவு குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்,
என்னய்யா இது ? லீவே எடுக்கவேமாட்டே! புதுசா கேட்கிறே ? என்றார்
ஆய்வாளர் உங்களுக்கு தெரியாதுங்களா? என் பையன் மணிமாறன் SI ட்ரைனிங்
முடிச்சு நாளைக்கு இங்கே டூட்டில சேர போகுதுங்க ஐயா, அதான் நாங்க
இருந்து வாழ்த்தி வழியனுப்பலாம் என்று லீவு கேக்குறேன்
அப்படியா! சரி ஆளை மாத்திவிடுறேன், நீ முடிச்சிட்டு மதியமா வந்திடு
என்றதும்தான் சந்தோஷமடைந்தார் ராஜேந்திரன்,
நகராட்சி துப்புரவு பணியாளராக கணவன் மனைவி இருவரும் பணிபுரிந்து
வர, இந்த மாத கடைசியிலே ஓய்வு பெற இருக்கிறார் ராஜேந்திரன்.
மனைவிக்கு இன்னும் ஜந்து வருடங்கள் இருக்கு.
இந்த முப்பத்தியெட்டு வருட சர்வீஸில், நகராட்சி முழுவதையும் தன்
கைகளாலே சுத்தப்படுத்திருப்பேன் என பெருமையாகச் சொல்வார்.
எத்தனை குப்பைகள்,கழிவுகள், நகரம் வளர்ச்சி் அடைய அடைய
குப்பைகளும் பெருகிவருகிறது, அதற்கு காரணம் மனித மனங்களும்
குப்பையானதுதான், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து
கொடுங்கள் என எத்தனை முறை நகராட்சி கதறியும் பிரயோசனமில்லை..
போதக்குறைக்கு உடைந்த கண்ணாடி குப்பைகளை கொட்டிவிடுவது என
ஒரே பிரச்சினைதான்.அள்ளுபவனும் மனுசந்தானே என நினைப்பு இருந்தால்
செய்வார்களா ? இருந்தாலும் சகிப்புத்தன்மையோடு,எந்த வித பழக்கங்களும் இல்லாமல் பணிகளை அற்பனிப்போடு செய்வதால் உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல பெயர், இவர்கள் சொல்வது போல்
அவர்கள் நடந்துக்கொள்வார்கள்.
மணிமாறன் சீருடையணிந்து வந்ததைப் பார்த்ததும்,
காக்கி சீரூடையணிந்த வேலைக்குத்தான் போவேன் என மகன்
சொல்லும்போதெல்லாம், எங்கே அ இதே வேலைக்கே வந்திடுவானோ
என பயம் வந்து ராஜேந்திரனின் வயிற்றைப்பிசைந்து இறுக்கும்.
இன்று அதே சீருடையில் பார்த்ததும், அருமையக இருக்கு தம்பி என்ற
பெற்றோர்கள் மகிழ்ந்து வழியனுப்பினர்.
வாழப்பேட்டை காவல் நிலையம் கம்பீரமாக காடசியளித்தது.
இருக்கை முழுவதுமாக ஆக்கிரமித்து அமர்ந்திருந்த ஆய்வாளருக்கு
விரைப்பான சல்யூட் அடித்து அவர் முன் நின்றதும்,
வா...வா.. வாழ்த்துகள் தம்பீ போய் வண்டியை ரெடி பண்ணு... டீசல்
போட்டுக்கோ.. மாவட்ட அலுவலகம் போகணும் என்றார் ஆய்வாளர்
எழுத்தரிடம் போய் டீசல் கேட்டதற்கு, ஆயிரம் ரூபாய் கொடுத்தார்
இன்றைக்குமட்டுந்தான் கொடுப்பேன் நாளை முதல்.. என சிரித்தார்
புகார் அளித்த எளியவர்கள் தரையில் அமர்ந்திருக்க,
கரை வேட்டிகள் கட்டியவர்கள் கும்பலாக வந்து அதிகாரிகளிடம் அமர்ந்து
சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். எளிய மக்கள் நம்பிக்கையோடு வாசலில்
காத்துகிடக்கின்றனர்.
சக மக்களுக்கான மரியாதையை காவலர்களின் பேச்சிலும்
செயலிலும் பார்க்க முடியவில்லை,தொடர்ந்து ஒரு மாதகாலம் செய்த
பணிக்குப் பிறகு முதல் சம்பளம் கணிணியில் ஏறியதை எடுத்து
தந்தையின் கையில் கொடுக்கும் பொழுது..
தம்பீ, வேலையெல்லாம் எப்படி போகுது ? நீ ஆசைப்பட்டு
செய்யணும்னு நினைத்த வேலையாச்சே என ராஜேந்திரன் கேட்டதும்..
பெரிசா ஒன்றும் இல்லைப்பா..என அலுத்துக்கொண்டான்
என்னாவாயிற்று ?
முடியலைப்பா... வேலை நான் நினைத்த மாதிரி இல்லை..
அரசு ஜீப்பிற்கு டீசல் கூட போட காசில்லை, புகார் தருபவரிடம்
பணத்தை வாங்கி டீசல் போடனுமாம்...அதிகாரம்,பொறாமை,அலட்சியம்,
சாதி, லஞ்சம், அரசியல் என அத்தனை குப்பைகளும் அடைஞ்சு சாக்கடை
போல நிறைஞ்சியிருக்கு என்று நிறுத்தினார் மணிமாறன்.
இந்த மாதிரி இடத்திலே வேலைப் பார்ப்பதைவிட உங்களோட சேர்ந்து
நானும் குப்பையையே அள்ளலாம் ஊராவது சுத்தமாகும் என்று பொறிந்து
தள்ளினான் நெஞ்சு புடைத்து நரம்புகள் தெறித்தன அவன் பேசியபோது.
தம்பீ, பொறுமையாக இரு. அரசு அலுவலகங்கள் மக்கள் சேவைக்காக
வரும் இடம், அதெல்லாம் அப்படித்தானிருக்கும், நாமதான் அனுசரித்து
போகவேண்டும் என அறிவுரை கூறினார்.
முடியாதுப்பா! நான் கஷடப்பட்டு இதற்காக படிக்கலை, ஏழை, எளிய
மக்களுக்காவது என் பணி பயன்படனும்னுதான் இந்த பணியையே
தேர்ந்தெடுத்தேன், அதற்கே சிக்கல் என்றால் என்ன செய்வது மேலும்
இதெல்லாம் மாறும் என்ற நம்பிக்கையும் என்னிடத்தில் இல்லைப்பா
என்றான்.
எல்லாம் மாறும்பா, இப்போ துப்பரவுத் தொழிலையே எடுத்துக்கோ,
பாரு, முன்னாடியெல்லாம் கீழே அமர்ந்தபடி கூட்டுவோம்,
இடுப்பெல்லாம் ரொம்ப வலியெடுக்கும், நோய் எங்களுக்கும் பரவும்,
யாரோ சிந்தித்ததானால் பிறகு குனிந்தபடி ஊரைப் பெறுக்க
ஆரம்பித்தோம், இப்போது பாரு, நின்றபடி கூட்டுகிறோம், அதுகூட
ஒருவகையில் சுயமரியாதையளிக்கும் செயல் என்பதாக கருதப்பட்டு
மாறியுள்ளது.
பொது இடங்களில் கூட்டுபவர்களுக்கு தரைக்கு அருகில் நெருங்கிச்
செல்லுவது துப்புறவு பணியாளர்களுக்கு மேலும் கெடுதியையே
வரவாழைக்கும் என்ற நோக்கிலும் இருந்திருக்கலாம், ஆனால் நிலை
மாறியது. அதுபோல நீ யோசி என்ன செய்யலாம், எப்படி மாற்றலாம்னு.
குப்பை என தெரிகிறது என்றால் அகற்ற வேண்டியது
குப்பையைத்தானே, தம்பீ வாறுகோலை அல்ல. நீ வாறுகோலாக மாறு !
சுத்தம் செய்! நல்லா யோசித்து முடிவு செய் என உறங்கப்போனார்.
விடிந்ததும்,சீரூடையில் விரைப்பாக நின்ற மணிமாறனை நினைத்து
மகிழ்ந்து நின்றார் ராஜேந்திரன்.
Leave a comment
Upload