பாக்காளில் இன்று முதலில் வெண்பாவை பற்றி பார்க்கலாம் என்று நமது பரணீதரன் ஆரம்பிக்கிறார்.
பாக்களின் வகைகள் முடியும் வரை, அவற்றை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால் யார் ஒருவர் யாப்பிலக்கணத்தை நன்றாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு மொழியின் மேன்மை புலப்படும். ஒரு மொழியின் யாப்பிலக்கணம் நன்றாக புரிந்தால், அந்த மொழியில் இசை பாடுவது மற்றும் இசையமைப்பது மிகவும் சுலபம். யாப்பிலக்கணம் கணக்கு, மொழி, இசை, விஞ்ஞானம் ஆகிய பல விஷயங்கள் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
அது எப்படி மொழிக்கும் இசையும்….? என்று நமது கேள்விக்கு போகப் போக தக்க சமயத்தில் அதையும் வெளிப்படுத்துவதாகச் சொன்னார் பரணீதரன்.
அவர் தொடர்கிறார்.
இதற்கு எடுத்துக்காட்டாக, ஏழு சீர்களும் ஒன்றே முக்கால் அடிகளும் கொண்ட திருக்குறள், ஆதிதாளம் என்ற தாள வகையில் உருவாக்கப்பட்டதாகும். அந்த காலத்தில், எந்த செய்யுளை இயற்றினாலும் அவைகள் பாடலாக பாடப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படும்.
இதனால் தான் திருப்புகழ், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவருட்பா போன்ற இலக்கியங்கள் ராகங்கள் மற்றும் தாளங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் மற்றும் உலகில் உள்ள பல்வேறு மொழிக் குடும்பங்களிலும், பாடல்களை சார்ந்தே அவர்களின் இலக்கணம் உள்ளது.
தாளத்தில்
லகு (தட்டு மற்றும் விரல் எண்ணிக்கை),
திருதம் (தட்டு மற்றும் வீச்சு) என்று பல பிரிவுகள் உள்ளன.
இதில் ஆதிதாளம் என்பது லகுவும் திருதமும் சேர்ந்த ஒரு கலவை. மொத்தம் எட்டு எண்ணிக்கைகளைக் கொண்டது.
திருக்குறளில் உள்ள ஏழு சீர்களையும் இந்த எட்டு எண்ணிக்கைக்குள் அடக்கி அந்த காலத்தில் அரங்கேற்றம் செய்துள்ளார்கள். அதனால்தான் திருக்குறளில் உள்ள சிறு குறட்பாக்களில் இசை குறைந்து வருவதால் அளபெடைகளை திருவள்ளுவர் கையாண்டு உள்ளார்.
பொதுவாக யாப்பிலக்கணத்தில்
- எழுத்து,
- அசை,
- சீர்,
- அடி
- தொடை,
- தளை,
- பா என்று ஒரு செய்யுள் வடிவமைக்கப்படுகிறது.
பல எழுத்துக்கள் சேர்ந்து அசையும்,
பல அசைகள் சேர்ந்து சீரும்,
பல சீர்கள் சேர்ந்து அடியும்,
சீர்களும் அடிகளும் தொடுத்து உருவான மாலையை போன்ற தொடையும்,
அசையும் சீரும் சேர்ந்து உருவாகும் தளையும், இவைகள் அனைத்தும் சேர்ந்து ஓசையுடன் இசைக்கப்படுவது பாவாகும்.
இவற்றை ஒரு வாய்ப்பாடு போல நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கீழே உள்ள பகுதியை பாருங்கள் :
எழுந்து வரும் ஒலிகளை எழுதுவது - எழுத்து.
எழுத்துகள் சேர்ந்து அசைக்கப்பெறுவது - அசை.
அசைகள் தனித்தும் சேர்ந்தும் சீராக அமைவது - சீர்.
முதல் சீரையும் அடுத்தச் சீரையும் சேர்த்துக் கட்டுவது - தளை.
பல சீர்கள் வரிசையாக அமைவது - அடி அல்லது வரி.
வரிகளுக்குள் அமையும் ஒழுங்குமுறை - தொடை.
அனைத்து உறுப்புகளையும் சேர்த்து புனையப்படுவது - பா.
இதில் எழுத்துக்களை பற்றி நாம் எழுத்திலக்கணத்தில் பார்த்து விட்டோம். சொற்களின் கலவைகளை அசை, சீர், தொடை, தளை ஆகியவற்றில் நாம் பார்க்க போகிறோம். அசையைப் பற்றி சித்திரக்கவிக்கு முன்னால் நாம் மிகுதியாக பார்த்து விட்டோம். அடுத்ததாக சீரினை பற்றி நாம் பார்ப்போம்.
சீரினை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு, நாம் பொதுவாக பிள்ளையாருக்கு கூறும் ஒரு செய்யுளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். இந்த செய்யுளை இயற்றியவர் ஔவையார்.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
நாலசைச்சீருக்கான ஒரு எடுத்துக்காட்டு பாடலை கீழே பார்ப்போம்
அங்கண்வானத் தமரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தல் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச்
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையும் முக்குடைநிழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
அனந்தசதுட்டயம் அவையெய்த
நனந்தலையுலகுடை நவைநீங்க
மந்தமாருதம் மருங்கசைப்ப
அந்தரந்துந்துபி நின்றியம்ப
இலங்குசாமரை எழுந்தலமர
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந்து
அருள்நெறி நடாத்திய வாதிதன்
திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே
- குணசாகரர்
மேலே உள்ள பாடலில்
அங்கண்வானத் (அங் கண் வா னத் - நேர் நேர் நேர் நேர்) தமரரசரும் (தம ரர சரும் - நிரை நிரை நிரை)
வெங்களியானை (வெங் களி யா னை - நேர் நிரை நேர் நேர்) வேல்வேந்தரும் (வேல் வேந் தரும் - நேர் னேர் நிரை)
…….
அருள்நெறி (அருள் நெறி - நிரை நிரை) நடாத்திய(நடாத் திய - நிரை நிரை) வாதிதன்(வா திதன் - நேர் நிரை)
திருவடி (திரு வடி - நிரை நிரை) பரவுதும் (பர வுதும் - நிரை நிரை) சித்திபெறற் (சித் திபெ றற் - நேர் நிரை நேர்) பொருட்டே (பொருட் டே - நிரை நேர்)
இந்த பாடலில் பல்வேறு விதமான சீர்கள் (ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்) மிகுந்து வந்துள்ளது. பொதுவாக தமிழ் செய்யுள்கள் நாலசைச்சீரில் பாடப்படுவதில்லை. மேலே உள்ள பாடல் நாலசைச்சீருக்கு எடுத்துக்காட்டாக பாடப்பட்டதாகும்.
அடுத்ததாக அடியை பற்றி பார்ப்போம். பல சீர்கள் சேர்ந்தது ஒரு அடி என்று முன்பே பார்த்தோம். ஒரு வரியில் எத்தனை சீர்கள் உள்ளன என்பதை வைத்து அது என்ன அடி என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஒரு வாய்ப்பாடு உள்ளது.
குறள்ஒரு பந்தம் இருதளை சிந்தாம்
முத்தளை அளவடி நால்தளை நெடிலடி
ஐந்தளை முதலா எழுதளை காறும்
வந்தவும் பிறவும் கழிநெடில் என்ப
- வைத்தியநாத தேசிகர் (இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்)
அதாவது,
ஒரு தளை (இரண்டு சீர்கள்) பெற்று வரும் அடி குறளடியாகும்.
இரண்டு தளை (மூன்று சீர்கள்) பெற்று வரும் அடி சிந்தடியாகும்.
மூன்று தளை (நான்கு சீர்கள்) பெற்று வரும் அடி அளவடியாகும்.
நான்கு தளை (ஐந்து சீர்கள்) பெற்று வரும் அடி நெடிலடியாகும்.
ஐந்து தளை (ஆறு சீர்கள்) முதல் ஏழு தளை (ஏழு சீர்கள்) வரை அல்லது அதற்கும் மேல் (ஏழு சீர்களுக்கும் மேல்) உள்ள தளைகள் பெற்று வரும் அடி கழிநெடிலடியாகும்.
அந்த காலத்தில் செய்யுளை மட்டும் இல்லாமல் பேசுவதைக் கூட அளந்து தான் பேசுவார்கள். அதனால் தான் அளவாக பேசு என்று கூறும் சொலவடை வந்தது. அதாவது ஒரு வரியில் நான்கு சொற்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
வரும் வாரம் தளை, தொடை, பா போன்றவற்றை பார்ப்போம் என்கிறார் பரணீதரன்.
Leave a comment
Upload