காதல் நோயைத் தருபவள் பெண் என்றால் அந்நோய்க்கு மருந்தாகி இருப்பவளும் அதே பெண்தான் .
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து (குறள் 1091)
'மை தீட்டிய இவள் கண்களில் இருவித பார்வை உள்ளன .ஒரு பார்வை எனக்கு காதல் நோயைத் தரக்கூடியது இன்னொரு பார்வை அந்நோய்க்கு மருந்தாக இருக்கிறது '
வள்ளுவரின் அக்கருத்தை வலியுறுத்தும் ஒரு நற்றிணைப் பாடலை நாம் இன்று பார்ப்போம் .
பாடலின் பின்னணி இது.....
கள்ளத்தனமாக வந்து தன் காதலியை சந்தித்து செல்லும் காதலனைக் காதலியின் தோழி கண்டிக்கிறாள் .
"எப்போது அவளை மணந்துக் கொண்டு செல்வாய் ? , "என்று கேட்கிறாள் .
அக் காதலனோ , " என் காதலியே என் நோய் தீர்க்கும் மருந்து ,நான் அவளை எப்படி தவிர்ப்பேன் " என்று பதில் வினா தொடுக்கிறான் .
தலைவனின் கூற்று இது :
" இளங்கன்றுகள் பாலை அருந்தி விடாமல் இருக்க , அவற்றை வீட்டின் தொழுவத்திலேயே விட்டு விட்டு , கரிய எருமைகளின் மேல் ஏறி அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார்கள் மருத நிலத்து இளஞ் சிறுவர்கள் . புலர்ந்தும் புலராத அந்த விடியல் நேரத்தில் எழுந்து நீராடி தை நோன்பு நோற்கிறாள் என் காதலி .
அப்போது அவளுக்கு நான் அன்புடன் அளிக்கும் தழை ஆடையையும் , பூக்களையும் வாங்காமல் நாணம் கொள்கிறாள் .
அவளே என் நோய்க்கு மருந்தாவாள். அவளைத் தவிர வேறு மருந்தில்லை
என் உயிரான அவளை நான் எப்படி தவிர்ப்பேன் ? " என்று தன் உறுதியான மனதை தோழியிடம் திறந்து காட்டுகிறான் .
பூதந்தேவனார் இயற்றிய நற்றிணைப்பாடல் இதுதான் .
''மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன்'' என, 5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.
நற்றிணை 80
மருதத்திணைக்குரிய இப்பாடலில் பழமையான தொழிலான மாடு மேய்த்தலில் இடைச் சிறுவர்கள் ஈடுபட்டு இருப்பதையும் ,கன்றுகள் பாலைக் குடிக்காதவாறு மாடுகளிடம் இருந்து பிரித்து வைக்கும் வழக்கம் அந்நாட்களிலும் இருந்ததைக் காண்கிறோம்.
தவிர, அந்நாட்களில் பெண்கள் தாங்கள் அணிந்துள்ள ஆடைக்கு மேல் இடுப்பில் தழையாடையை ஒப்பனையாக அணிந்துக் கொண்ட தகவலும் இப்பாடலில் காண்கிறோம் .
நற்றிணை தீட்டும் இச்சித்திரத்தில் மருத நிலத்தின் தொழிலும் ,உடையும் வழக்கங்களும் நமக்குத் தெளிவாக புலப்படுகிறது .
அத்துடன்
காதலனின் உள்ளத்தையும் புலவர் நமக்குத் திறந்துக் காட்டி விட்டார் பூதந்தேவனார் என்னும் சங்கப்புலவர்
Leave a comment
Upload