தொடர்கள்
கவர் ஸ்டோரி
பயங்கரவாதத்தை வென்ற பாஜக பெண் எம்.எல்.ஏ!-நமது நிருபர்

2024910164242266.jpeg

நடந்து முடிந்த 2024 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் கிஷ்த்வார் தொகுதியில் பாஜகவின் பெண் வேட்பாளரான, 29 வயதே ஆன ஷகுன் பரிஹர் வெற்றி பெற்றுள்ளார்.
ஷகுன் பரிஹரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சஜாத் அகமது கிச்லூவைதான் 521 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஷகுன் சாதனை படைத்துள்ளார்.

ஷகுன் பரிஹரின் வெற்றிக்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். ஷகுனின் தந்தை அஜித் பரிஹர் மற்றும் மாமா அனில் பரிஹர் 2018 நவம்பரில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள். இதில் அனில் பரிஹர் அங்கே மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர்.
ஷகுன் போட்டியிட்ட கிஷ்த்வார் தொகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இடமாகும். வெற்றியடைந்தவுடன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஷகுன் பரிஹர் “என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த கிஷ்த்வார் தொகுதி மக்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பயங்கரவாத அச்சுறுத்தல்தான் தலையாய பிரச்சனை. தீவிரவாத தாக்குதல்களால் நான் என் தந்தை, உறவினரை இழந்திருக்கிறேன்.

மீண்டும் இது போன்ற சம்பவங்கள் இங்கே நடக்காமல், அமைதி நிலவ அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

2024910164439451.jpeg

தேர்தல் பிரசுரத்தின் போது “ மக்களின் பாதுகாப்பு, தொகுதியின் முன்னேற்றம், வேலைவாய்ப்புகள்,பெண்கள் நல மேம்பாட்டு திட்டங்கள், வணிகம், சுற்றுலாதுறை மேம்பாடு முதலியவை முன்னேற கவனம் செலுத்துவேன்.” என்று கூறியிருந்தார்.

கிஷ்த்வார் தொகுதி என்பது குங்குமப்பூ விளையும் பூமி. விளைச்சலை அதிகரித்து வணிக ரீதியில் ஏற்றுமதி அதிகரிக்க முயற்சிகள் முன்னெடுப்பேன் என்று ஷகுன் உறுதியளித்திருக்கிறார்.

2024910164513916.jpeg

ஷகுன் எம்டெக் மின் பொறியியல் (எலக்ட்ரிகல் பவர் சிஸ்டம் ) முடித்துவிட்டு தற்போது முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சியாளராக உள்ளார். பொறியியல் துறையிலேயே கடினமான துறை மின் பொறியியல் துறை என்பார்கள் . அதிலேயே டாக்டர் பட்டம் பெறுகிறார் என்றால் ஷகுன் எப்படிப்பட்ட புத்திசாலித்தனத்துடன் கூடிய கடின உழைப்பாளியாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

ஷகுன் தேர்ந்தெடுத்த அரசியல் பாதை மிக கடினமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது குடும்ப உறுப்பினர்களை பயங்கரவாத செயல்களுக்கு பலி கொடுத்தும் கூட, சற்றும் தயங்காமல் தனது உயிரை பணயம் வைத்து சொந்த மக்களுக்கு நன்மை செய்வேன் என்று துணிந்து இறங்கி இருக்கிறார்.

2024910165212328.jpg

பிரதமர் மோடி, ஷகுன் போட்டியிட்ட தொகுதியில் நேரடியாக சென்று பிராசரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக சார்பில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட்ட ஒரே பெண் வேட்பாளர் ஷகுன் பரிஹர் தான். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 42, பாஜக 29, காங்கிரஸ் 6, மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் , சுயேட்சைகள் 7 இடங்களிலும் வென்றுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக்கிய பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. கடந்த முறை தேர்தலில் 22.98 சதவீதம் வாங்கிய பாஜக இம்முறை 25.64 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளதை காணும் போது ஜம்முகாஷ்மீரில் பாஜக படிப்படியாக வளர்ந்து வருவதை உணர்த்துகிறது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா கூட்டணியின் சார்பாக முதல்வராகப் பதவியேற்கிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே பத்திரிக்கையாளர்களிடம் உமர் அப்துல்லா “ இங்கே திரும்பவும் ஆர்ட்டிகள் 370 கொண்டு வருவது சாத்தியமில்லை. வேறுவழிமுறைகளில் அதை பற்றி எண்ணுவதும் பெரும் முட்டாள்தனமே! இப்போதைக்கு இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு, காங்கிரஸுக்கு ஓட்டளித்த மக்களுக்கு மட்டுமில்லாமல், பாஜகவுக்கு ஓட்டளித்தவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்பதை உறுதிப்படுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

2024910165312447.jpeg

ஆர்ட்டிகள் 370 சட்டப்பிரிவை நீக்கிய காஷ்மீரில் பாஜக வளர்ந்து வருவதை தேர்தல் முடிவுகள் ஊர்ஜித படுத்துகின்றன. அதிலும் இளம்பெண் ஷகுன் பரிஹர் போன்ற மெத்தப்படித்தவர்களின் வெற்றி அங்கே வாழும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

படிப்பில் உச்சம், தன்னம்பிக்கை, தைரியம், நியாத்திற்கான சமரசமில்லா போராட்டம் போன்ற அணிகலன்களே பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கிறது என்பதற்கு பெரும் உதாரணமாக திகழ்கிறார் ஷகுன் பரிஹர்.