தொடர்கள்
கவர் ஸ்டோரி
சாதனை படைத்த ஏர் ஷோ -தில்லைக்கரசிசம்பத் ,வீடியோ: மேப்ஸ்

2024910170456153.jpeg

இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில்,கடந்த 6ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரைவிமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒரு மாதம் முன்னதாகவே இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளி வந்ததிலிருந்து சென்னை மக்கள் ஆவலுடன் அக்டோபர் 6 க்காக காத்திருந்தார்கள். நிகழ்ச்சியன்று ஏறக்குறைய 15 லட்சம் பேர் மெரீனாவில் கூடினார்கள்.

2024910170628683.jpeg

முதலில் ஆக்ராவின் ஆகாஷ் கங்கா அணியை சேர்ந்த பாராசூட் வீரர்கள் 8,000 அடி உயரத்தில்இருந்து குதித்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர்.

2024910170702251.jpeg

தாம்பரம் விமானப் படையை சேர்ந்த சேட்டக்ஹெலிகாப்டர்கள் வானில் வலம் வர அதிலிருந்து வீரர்கள் நமது தேசிய கொடியை பிடித்தபடி பாராசூட் மூலம் குதித்தனர்.

பிறகு ஒரு நாடகம் போலே கீழே நிலத்தில் தீவிரவாதிகளால் ஒரு கட்டிடத்தில் பிணை வைக்கப்பட்ட கைதிகளை மீட்க, வானில் பறந்து வந்த எம்ஐ-70 ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் குதித்து, அவர்களை மீட்கும் சாகசத்தைநிகழ்த்தினர்.

நவீன போர் விமானமான ‘சூப்பர்சானிக் ரஃபேல்’ வந்த புதிதில் எப்படி அரசியல்களத்தில் நெருப்பை கக்கியதோ, அதேப்போல வானிலும் தீப்பிழம்புகளை கக்கியபடி சென்றது.

2024910170748916.jpeg

நமது நாடு சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து 1989 வரை போர்களங்களில் ஈடுப்பட்ட டகோட்டா, ஹார்வர்டு விமானங்கள் நாங்களும் இன்னும் போட்டியில் தான் இருக்கிறோம் என்பது போல அழகாக பறந்து வந்து தங்களது இருப்பை தெரிவித்தன.

சாகசங்களுக்கு வானமே எல்லை என்பது போல நடுவானிலேயே நாங்கள் எரிபொருளை கூட நிரப்பிக் காட்டுவோம் என போர்விமானம் மிராஜ் 2000 , கூட பறந்த 2 விமானங்களுக்கு வானத்திலேயே டேங்கை நிரப்பி சாகசம் செய்தது.

நம் நாட்டு பெருமைக்குரிய உள்நாட்டுதயாரிப்பான தேஜஸ் போர் விமானம் வானில் பறந்து, தலைக்கீழாக குட்டிக் கரணம் அடித்து, நேர் குத்தாக பறந்தது மட்டுமில்லாமல் திடீரென ‘ரிவர்ஸில்’ சென்று மக்களை பதட்டப்படுத்தியது. போர் நடக்கும் இடத்திற்கு மிக நெருக்கமாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிக சக்தி வாய்ந்த என்ஜின்களை கொண்ட மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானமான சி-17 விமானம் மற்றும் சூர்யகிரண் ஏரோபாடிக் டீம் வானில் சாகசத்தில் ஈடுபட்டு வானில் புகையைவைத்து, சென்னை மக்களுக்கு தங்கள் அன்பை தெரிவிக்கும் வகையில் ஒரு வடிவான இதயம்வரைந்ததை கண்ட மக்களும் அதன் அழகில் தங்கள் இதயத்தை ஆசையாக தொலைத்தனர்.

விமானப் படையில் புதிய வரவான எச்டிடி-40 என்ற பயிற்சி விமானம், வானில் குட்டிக் கரணம்அடித்து, பயத்தில் பொதுமக்களின் வயிற்றில் பந்தை உருள செய்ய, எதிரெதிர் திசைகளிலிருந்து வேகமாக பறந்து மோதுவது போல கடந்து சென்று, வானத்திலேயே நடனம் ஆடுவது போல பல அபாயகரமான வித்தைகள் செய்த சாரங் ஹெலிகாப்டர்கள் மக்களின் அட்ரீனல் சுரப்பை மேலும் அதிகரிக்க வைத்தது.

2024910171423229.jpeg

இந்த நிகழ்ச்சியை நேரடி வர்ணனை செய்தது தமிழகத்தைச் சேர்ந்தபைலட் கார்த்திக், ரேவதி தம்பதியினர். பாரதியின் பாடல்களுடன் , தமிழில் அருமையாக பேசி அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விமானப் படையின் 72 விமான ரகங்கள் பங்கேற்றன. இந்த நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் பார்வையிட்டதின் மூலம், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், முப்படை அதிகாரிகள், இந்திய விமானப் படை தலைமை தளபதிஅமர்ப்ரீத் சிங் போன்றவர்கள் பங்கேற்றனர். இப்படி திட்டமிட்டப்படி நடந்த சாகசங்களின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் நல்லபடியாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது ஒரு பக்கம் என்றால் , நிகழ்ச்சி முடிந்த நிமிடமே அங்கிருந்த மக்கள் அடித்துப்பிடித்து வெளியேற, ஏற்கனவே பல மணி நேரம் மொட்டை வெயிலில் காய்ந்து நின்றதின் காரணமாக பல பேர் மயக்கமுற்று விழுந்து அதில் 5 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.

2024910172607926.jpeg

தமிழக அரசு சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.பதிலுக்கு அவர்கள், இது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி அவர்கள் தான் காரணம் என்று அவர்கள் மேல் பழிப்போட, “இல்லை..இல்லை..மக்கள் தான் காரணம். இவ்வளவு வெயிலில் எவன் கிளம்பி வர சொன்னது? வீட்டிலேயே தொலைக்காட்சியில் பார்த்து தொலைப்பதற்கு என்ன?” என்று மக்கள் மேலேயே பழியை தூக்கிப்போட்டதும், இதற்கு முத்தாய்ப்பாக “விமானப்படை சென்னையில் ஏன் சாகச நிகழ்ச்சி நடத்தினார்கள்? அதுவும் நட்ட நடு பகலில்..? காலையிலோ அல்லது மாலையிலோ வைத்திருக்க கூடாதா?” என்று கேட்கிறார்கள்.

விமான சாகசங்கள் நடக்க வானம் நல்ல தெளிவாக மேகமூட்டம் இல்லாது, நல்ல பகல் வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். மெரீனாவில் மாலையில் சிலுசிலுவென்று காற்றுடன் , பீச்சில் உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்க இது என்ன ட்ரைவ் இன் சினிமா கொட்டகையா? இது இந்திய ராணுவப்படையினரின் போர் சாகசங்கள் நிகழ்ச்சி.

2024910173126130.jpeg

2003 ல் நடந்த ஏர் ஷோவின் போது 10 லட்சம் பார்வையாளர்கள் மெரினாவில் கூடினார்கள் என்ற தகவல் உண்டு . அப்போது தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா இருந்தார்.

2024910171549171.jpeg

15 லட்சம் மக்கள் வருவார்கள் என்று முன்னரே கணித்த நிலையில் அன்று காலையில் ரயில் நிலையங்களில், மெட்ரோக்களில், பறக்கும் ரயில்களில், பேருந்துகளில் கூட்டம் மாளவில்லை. ஏற வழியில்லாது பல ஆயிரம் மக்கள் திரும்பி வீடு சென்றனர். அக்கறையற்ற ரயில் நிர்வாகம், ஞாயிறு என்பதால் எப்போதும் போல் குறைந்த ரயில் சேவைகளையே இயக்கியது. மக்கள் 6 மணி நேரம் வெயிலில் நின்றது, பின் நிகழ்ச்சி முடிந்த உடன் தத்தம் வாகனங்களை எடுக்க 2 கிமீ நடந்தது வேறு வினையாகி போனது.

பறக்கும் ரயில் சேவையை தினசரி 55 ஆயிரம் பேர் பயன்படுத்துவார்கள். ஏர் ஷோ அன்று மாலை 4.30 மணி வரை சுமார் 3 லட்சம் பேர் ரயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இப்படி ரயில்வே எல்லா ஏற்பாடும் செய்தது தமிழக போக்குவரத்து அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை கூட்ட நெரிச்சலுக்கு அது ஒரு காரணம்.

நாங்க ஆவடியில் இருந்து ஏர் ஷோ பார்க்க வந்தோம் , சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் எல் .ஐ. சியில் இருந்து மெரினா ஷோ நடக்கும் இடம் வரை 5 கிமீ என் குடும்பத்துடன் மக்கள் வெள்ளத்தில் நடந்து வந்து ஏர் ஷோ பார்த்தோம் என்று முன்னாள் ராணுவ வீரர் தெரிவித்தார்.

அரசு எல்லா ஏற்பாடுகளையும் ஏதோ செய்து வைத்திருந்தது தான். ஆனால் அது 15 லட்சம் பேருக்கு காணாது. போக்குவரத்து முதல் வந்தவர்களுக்கு குடிநீர் , கழிவறை ஏற்பாடுகள் வரை பற்றாக்குறை. சாதாரணமாகவே விடுமுறை தினங்களில் மெரீனா சென்றாலே கஷ்டம்.

உச்சி வெயில், அதுவும் கடற்கரை மணலில் 5 மணி நேரம் நிற்பதற்கு குடிநீர்,குடை கூட எடுக்காமல் வந்தவர்கள் எத்தனை பேர்?! கூட்டத்தில் மிதிப்பட்டு சாகாமல் இருந்தது சென்னை மக்கள் செய்த புண்ணியம்.

2024910172542379.jpeg

காவல்துறையும் முடிந்தவரை தங்கள் கடமையை செய்தார்கள். ஒரு உயிர் என்றாலும் அது விலைமதிப்பு மிக்கது. லட்சம் பேர் கூடும் கூட்டம் என்றால் தவிர்த்துவிடுங்கள். நம் உயிர் பாதுகாப்பு நம் கையில் தான். அரசாங்கங்களை முழுமையாக நம்புவது வீண்.

இந்த நிகழ்வை பொதுமக்களிடையே நடத்தி தங்களது சாகசங்களை நாட்டு மக்கள் கண்டு களிக்க வேண்டும் என்ற துடிப்பில், பல மாதங்களாக கடின பயிற்சி செய்து , நிகழ்ச்சியன்று விமானசாகசங்களை சிறப்பாக செய்த இந்திய விமானப்படைக்கு சென்னை மக்கள் சார்பில் ராயல் சல்யூட்.