அறிவிப்பு எதுவுமின்றி அடியெடுத்து வைக்கும் அமலாக்கத் துறை போல மெல்ல மெல்ல ஆயிரம் .. சாரி.. அந்த பந்தா இனி செல்லாது, ஐநூறு கரங்கள் நீட்டி அவனியை அடைய ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் ஆதவன் .
புள்ளினங்கள் துள்ளி எழுந்து மன்மத ராசா பாடின. “வள்” ளினங்கள் வான் நோக்கிக் குரைத்து வரவேற்றன . கறவை இனங்கள் தண்ணீர் கறந்தன .
பதி வழக்கம் போல் தூக்கம் பிடிக்காமல் பால் பாக்கட் காரன் , செய்தித்தாள் அலப்பறைகளால் எழுந்து விட்டான்.
அப்பா முதலில் குடித்தது போக மிச்சமிருந்த இரண்டாம் டிக்காஷன் போர் செய்து அம்மா தந்த காப்பியை உறிஞ்சிக்கொண்டே அப்பாவின் பின்னால் நின்று நாளிதழை மேய்ந்தான் . முதல் பக்கத்தில்
புகைப்படத்துடன் வந்திருந்த அந்த விளம்பரம் அவனை ஈர்த்தது..
காணவில்லை !!!
புகைப்படத்தில் தோற்றமளிக்கும் என் நாய் நேற்று
முதல் காணவில்லை - நாயின் பெயர் , உயரம் , நிறம் , கண் , வால்
நீளம் முதலான விவரங்கள் இருந்தன. கண்டு பிடித்துத் தருபவருக்கு
தக்க வெகுமதி அளிக்கப்படும் என்று போட்டு முகவரி , செல் நம்பர்
எழுதி இருந்தார் விளம்பரதாரர் மிஸ் . ரதி
அப்பாவின் நாள் தவறாத தண்டச்சோறு திட்டல்களும் , அம்மாவின் எப்படியாவது சீக்கிரம் ஒரு வேலை தேடிக்கோடா அன்பு வேண்டுகோளும் … குதித்து எழுந்து , ஆணியிலிருந்து டீ கறை ஷர்ட்டை மாட்டிக்கொண்டான் பதி . காலை சேமியா உப்புமாவை வழக்கம்போல் புறக்கணித்துவிட்டு நியூஸ் பேப்பருடன் கிளம்பி விட்டான் . எப்படியும் கண்டு பிடிச்சுடணும் . வெகுமதி என்ன வேணும்னு கேட்டா , ஒரு வேலை வேண்டும் என்று கேட்க மனதில் ஒத்திகை ரீல் படம் போல் ஓடிக்கொண்டிருந்தது .
வழியில் கால் ரூவா பஜ்ஜி , வாழைப்பழம் அவசரமாக விழுங்கி விட்டுத் தன் நாய் ’ வேட்டை ‘ யை ஆரம்பித்தான் . பார்க் , கடற்கரை , தெருச் சந்துகள் , குப்பைத்தொட்டிகள் என்று நாள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது .
இருட்டப்போகும் நேரம் நெருங்க , முகவரி வீட்டின் அடுத்த தெருவில் ஒரு கேட் வாசலில் வேறு ஒரு நாயுடன் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த அந்த ஃபோட்டோ நாயைக் கண்டுபிடித்துவிட்டான் பதி .
அடையாளங்கள் அனைத்தும் பொருந்தின . பெயர் சொல்லி அழைத்ததும் திரும்பிப் பார்த்த நாயை ஒரு கிழிந்த சாக்குப் பையில் அவசரமாக அபகரித்து மூட்டையில் கட்டி அள்ளினான் .
மிஸ்டு கால் பண்ணி ரதியை அழைத்து விவரங்கள் சொல்லி விட்டு உடனே அவளைச் சந்தித்து நாயைக் குடுக்க விரைந்தான் . அவள் பங்களா கேட் ஆம்னி இல்லாத புது பஸ் ஸ்டாண்ட் போல் வெறிச்சோடி
இருந்தது . கோணிப்பையில் நாயைக் கண்ட ரதி அழுதே விட்டாள் . பெடிகர் பாக்கட் உணவு , பால் , பிஸ்கட் ஊட்டி வளர்ந்த நாய் ஆயிற்றே!
நாயை நல்லா செக் பண்ணிக்குங்க என்று சொல்லி விட்டு அவசரமாகப் புறப்பட்டான் பதி .
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ் , “ எல்லாம் சரியா இருக்கு , ஆனா.. இது என் நாய் இல்லிங்க ” என்றாள் .
5.6 வெக்டர் அளவு அதிர்ச்சியில் மயங்கி விழப்போன பதி , “ எப்படிச் சொல்றீங்க ? “ என்று தகவல் அறியும் உரிமை யுடன் வினவ , அவள் “என் நாய் எப்பவும் ’ வள் -வள்’ னு தான் குரைக்கும் . ஆனா இது
‘லொள் – லொள்’ னு குரைக்குதே” என்றாள் . அழாத குறையாக பதி , தன் ஒரு நாள் தேடல் முயற்சிகளை விவரித்து , பின் ” நான் வேணா தினமும் இதுக்கு வள் – வள் னு குரைக்க டியூஷன் சொல்லித்தரேங்க தயவு செய்து இந்த நாயை ஏத்துக்குங்க , எனக்கு வெகுமதி எதுவும் வேண்டாம் , டியூஷன் சம்பளம் மட்டும் போதும்” என்றான் .
முடியாது , சாரி , மன்னிக்கணும் … குரை உள்ள நாயை என்னால் ஏற்க முடியாது . போய் விட்டாள் .
எரிச்சல் , ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான் பதி .
மறுநாள் மதியம் ரதியிடமிருந்து வந்த வாட்ஸ் அப் மெஸேஜை பார்த்த பதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி…
”என் நாய் கிடைத்து விட்டது . தானாகவே ராத்திரி வீட்டுக்கு வந்திருச்சு. உங்கள் தேடல் மற்றும் சிரமங்களுக்கு நன்றி . இன்று மாலை என்னைச் சந்திக்க இயலுமா? ஒரு மெர்சல் ஹைஃபை
வெகுமதி உங்களுக்காக ரெடி !! ஐ திங்க் ஐ லைக் யூ….”
Leave a comment
Upload