தொடர்கள்
கதை
முத்துகிருஷ்ணனும் பென்ஸ் காரும் - கி.ரமணி

20240807084844379.jpg

முத்து கிருஷ்ணன் மெர்ஸிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் வண்டியை ஒரு கோடி கொடுத்து வாங்கின போதே கவலைப்பட ஆரம்பித்து விட்டார்.

யானை வாங்கியாச்சு. நல்ல பாகனைத் தேட வேண்டுமே என்று.

ஃசெல்ப் டிரைவிங் புலி இல்லை அவர். சொந்த மென்பொருள் நிறுவனம் ஆரம்பிச்சு பத்து வருஷங்களில் நல்ல வளர்ச்சி.பென்ஸ் வாங்கற அளவுக்கு.

முத்துவின் எழுபது வயசு நிரம்பிய மாயவரத்து டாக்டர், ரோட்டரி நண்பர் நாகராஜன் சொன்னார்.

" நான் அமெரிக்காக்கு க்ரீன் கார்டுல போறேன். பசங்க கூப்படறாங்க. அங்க செட்டில் ஆக.

என்னோட 'ஆடி' காரை வித்துட்டேன்.

என் டிரைவரா இருந்த கதிரேசன் இப்போ ஃபிரீ. ரொம்ப நல்லவன் , ..

வயசு 45. ஃபேமிலி கிடையாது. ராப்பகலா உழைப்பான். கொஞ்சம் கோபக்காரன். அவ்வளவு தான்.

ஒழுக்கமானவன். உங்களுக்கு

பர்ஃபெக்ட்டா பொருந்துவான்.

முப்பதாயிரம் தாராளமா கொடுக்கலாம்."

கூடவே டாக்டர், கதிரேசனின் பூர்வோ த்தரம் பற்றிச் சொல்லி, எங்கே நாம் ஜாக்கிரதயா அவன்கிட்ட இருக்கணும் என்றும் சொன்னார்.

கேட்டுட்டு கொஞ்ச நேரம் யோசித்துப் பின் கடைசியில், 'சரி' என்றார் முத்து,

மறுநாள் கதிரேசன் வந்தான் . கட்டை யாக 5 அடி 2 அங்குலத்தில் எண்பது கிலோவில் இருந்தான் .

நெற்றியில் விபூதி,குங்குமம். வெள்ளை சட்டை பாண்ட்.

அடியாள் ஜாடை.

கதிரேசனின் வலது கையில் கட்டை விரலைத் தவிர நாலு விரலிலும் சோழி சைஸ்ல,பெரிய மோதிரங்கள் ..

வலது கையில் பச்சை குத்தின வேல் முருகன்.

முத்து, வண்டி சாவியைக் கொடுத்தார்.

அன்னப்பறவை போல வெள்ளை நிற வண்டியை மிதக்க விட்டு முத்து வீட்டு வாசல்ல நிறுத்திப் பின் கதவை பவ்யமாக கதிரேசன் திறக்க..உள்ளே ஏறினார் முத்து. அன்று ஆபீஸ் போனபோது புஷ்பக விமான ஃபீல் அவருக்கு இருந்தது.

நாள் போகப்போக,கதிரேசனை முத்துக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. ரொம்ப அடக்கம்,பணிவு,என்று. அதனால் நிறைய சுதந்திரம் கொடுத்தார்.

வீட்டில் அவர் மனைவி ஆனந்திக்கோ, பிள்ளை ராகேஷ்க்கோ ஆரம்பதிலிருந்தே

கதிரேசனைப் பிடிக்கல. "ஒரு டிரைவர்னா டிரைவர் மாதிரி இருக்கணும். இவனை ஃபிரன்ட் மாதிரி நடத்தறாரே? "

ஒரு மாசம் சென்றது.ஒரு இரவில் ஸ்டார் ஹோட்டல் கார் பார்க்கிங்கில் இருந்து கதிரேசன் காரை எடுக்கும் போது,தன் காரை குறுக்கே நிறுத்தி, வெளியே கார் மேல் அமர்ந்து போனில் யாரிடமோ சத்தம் போட்டு விஸ்கி வாடையுடன் பேசிக்கொண்டிருந்தான், பௌன்சர் போன்ற ,தாட்டியான ஒரு ஆள்.

கதிரேசனைக் காரில் இருக்கச் சொல்லிய முத்து, , அந்த ஆள் கிட்ட போய் வண்டிய நகத்த சொன்னார்.

பௌன்சர் கண்டுக்காமல் கைபேசியில் இருந்தான். முத்து அவன் முன்னே போய்" வண்டிய நகத்துங்க" என அந்த ஆள் அசையவில்லை.

கடுப்புடன்" ஏம்ப்பா உன்னைத்தான்" என்றார். அந்த ஆள் கைபேசி கவனம் சிறிதும் சிதறாமல் இடக்கையால் அலட்சியமா முத்துவைத் தள்ள,களேபரமாகத் தன் காரின் மேல மல்லாக்க விழுந்தார் முத்து.

கதிரேசன் உடனே வந்து .அவரைப்பிடித்துப் பின் சீட்டில் உட்கார வைத்துப் பின் பௌன்சர் ஆசாமியிடம் நிதானமாகச் சென்றான். அவனை குண்டுக்கட்டாக தூக்கி நடந்து கார்பரேஷன் லாரிக்குள் குப்பையைப் போடுவது போல ஒரு மூலையில் அவனைக் கொட்டிவிட்டு, நகர்ந்தான். குறுக்கே நின்ற அவன் காரில் ஏறி அதை நகர்த்தி வைத்து விட்டு, பென்ஸை வெளியே எடுத்தான்.

வீட்டு காம்பௌண்ட் நுழைந்ததும் விளக்கு வெளிச்சத்தில் கதிரேசனின் மோதிரக்கையை பார்த்து அரண்டார் முத்து .

"என்னப்பா உன் கையில் ரத்தம்?"

"அந்த ஆள் ரத்தம் சார்.தூக்கிட்டு போறப்போ கையைக் கடிச்சான். அவன் வாய் மேல ஒரு குத்து உட்டேன். அப்புறம் அவனை கீள போட்டுட்டேன்."

"ஏம்ப்பா அவனுக்கு அடி பலமா? "

"இருக்காது சார். ஒண்ணு,ரெண்டு, பல் போயிருக்கலாம். அவ்வளவு தான்."

என்றான் சாதாரணமாக.

"ஏம்ப்பா இந்த வம்பு எல்லாம்?"

"என்னா சார், என் கண் முன்னாடி உங்களத் தள்றான். பாத்துகிட்டு சும்மா இருக்க முடியுமா?தவிர அவனுக்கு ஃபுல் போதை. ஒண்ணும் சரியா ஞாபகம் இருக்காது. போலீஸ்க்கு போக மாட்டான்." னு சிரிச்சான்.

அன்றிலிருந்து முத்துவின் வலது கரமாக,மைக்கேல் மதன காமராஜ னின் 'பீம்பாய் ' மாதிரி ஆகி விட்டான் கதிரேசன்.

அடுத்த மாசம் ஒரு இரவு,ராகேஷை ஏதோ பார்ட்டி முடிஞ்சு திரும்ப கூட்டி வர கதிரேசன் போயிருந்தான்.

ரெண்டு நாள் கழித்து முத்துவிடம் "சார் நம்ம ராகேஷ் தங்கமான பையன் .அவன் கூட ரெண்டு

பசங்க அலையரானுங்க. கஞ்சா எல்லாம் அடிக்கிறாங்க. ராகேஷ் கெட்டுப் போயிடக்கூடாது இல்லையா?"

"ஆமாம். ஆமாம்.சொல்லு "

"அதுனால அந்த பசங்களைக் கூப்பிட்டு 'ராகேஷ் கிட்ட போகாதீங்க' னு சொல்லிட்டேன் "

. "அவுங்க கேப்பாங்களா?"

"கேட்கும்படியா கொஞ்சம் பயமுறுத்தியே சொல்லிட்டேன் சார்.நிச்சயம் கேப்பாங்க.

ஆனா ராகேஷ் கிட்ட இதை சொல்ல வேணாம் சார். "

நன்றியுடன் அவனைப் பார்த்தார் முத்து.

ராகேஷுக்கு, இப்போ சுத்தமா

கதிரேசனை பிடிக்கலை. சின்ன விஷயத்துல எல்லாம் எரிச்சல் ஆகி அப்பாவிடம் கதிரேசன் பத்தி கோள் சொல்லிப் பார்த்தான். அவர் மசியவில்லை.

முத்துவின் மனைவி ஆனந்திக்கும் கதிரேசன் மீது முத்து வைக்கும் நம்பிக்கை ரொம்ப ஓவராகத்தான் பட்டது.

ஒரு வருஷம் ஆச்சு.

அன்றுகாலை காரில் கதிரேசன் ஓட்ட கபாலிஸ்வரர் கோவில் சென்று திரும்பினாள் ஆனந்தி.சாயுங்காலம் ஒரே அமக்களம். வைர நெக்க்லஸ் காணம். காலைல அணிந்து இருந்த

நெக்லஸ் கோவிலிலிருந்து காரில் திரும்பும் போது இருந்தது என்றாள். வீட்ல எல்லாம் பாத்தாச்சு என்று காருக்கு சென்று பார்த்தால் இல்லை.

கதிரேசனும் சொன்னான்." காருக்கு உள்ள விழலைம்மா.விழுந்தா எனக்கு தெரியும்" னு.

ஆனந்தி முத்துவிடம் "போலீஸ்க்கு சொல்லுங்க. எனக்கு கதிரேசன் மேல்

தான் சந்தேகம் ".என்றாள்.

முத்து மறுத்துவிட்டார்."நல்லா தேடு. அவசரம் வேண்டாம்." என்றார்.

அடுத்த நாள், ஆனந்தி முந்திய நாள் அணிந்திருந்து பின் மடிச்சு பீரோக்குள் வெச்ச புடவைக்குள் நெக்க்லஸ் பத்திரமா இருந்தது தெரிந்தது .

ஆனந்தி தன் அவசரத்துக்கு, அலட்சியத்துக்கு, மறதிக்கு காரணம் கூறி துளி வருந்தினாள்.

முத்து புன்னகைத்தார்.

ராகேஷுக்கு கடுப்பு.

"அது சரிப்பா. கதிரேசன் ஒரு டிரைவர் தானே. நேத்து நியாயமா உனக்கும் தானே அவன் பேர்ல சந்தேகம் வந்திருக்கணும். வரலையே. ஏன்.அவன் மேல ரொம்ப நம்பிக்கையா, இல்லை கொஞ்சம் பயமா.?" என்றான்.

"இரண்டும் தான்.இதில் என்ன சந்தேகம்?" என்று சிரித்துப் பின், தொடர்ந்தார் முத்து.

" கதிரேசனோட பழைய கதை உங்களுக்கு தெரியாது.

இப்போ சொல்றேன்.

இருபது வருஷம் முன்ன மாயவரத்தில் ஹோட்டல் சர்வரா

இருந்தான் கதிரேசன்.அப்பவும் ரொம்ப சின்சியர் ஆள் தான்.

ஒரு நாள் கல்லா பணம் குறைஞ்சிருக்குனு கதிரேசனை சந்தேகப்பட்டு திருடன்னு கூப்பிட்டு எல்லார் முன்னாலயும் மோசமா திட்டிட்டார் முதலாளி.

யோசிக்காமல்,அப்போ சர்வ் பண்ண கையிலிருந்த வெண்கல சாம்பார் கரண்டியால் முதலாளி தலையில் ஒரே அடி தான் அடித்தான் கதிரேசன் .

முதலாளி பரலோகம். இவன் பத்து வருஷம் ஜெயிலில். அப்பறம் உறவி னர் டாக்டர் நாகராஜன் கிட்ட. இப்போ இங்க. இப்போ சொல்லுப்பா .

நான் என்ன பண்ணி இருக்கணும்.?"