தொடர்கள்
அரசியல்
நழுவும் நடிகர்கள் தொடரும் சர்ச்சை - லைட்பாய்

20240807090546790.jpg

மலையாளத் திரை உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க மாநில அரசு நியமித்த நீதிபதி ஹேமா தலைமையிலான மூன்று நபர் கமிட்டி அறிக்கை வெளிவந்த பிறகு, தென்னிந்தியாவில் உள்ள நடிகர்கள் இது பற்றி பெரிய அளவு கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தார்கள். இந்த அறிக்கை வெளிவந்த பிறகு நடிகை சரிதா கணவர், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகேஷ், நடிகர்கள் ஜெயசூர்யா,இயக்குனர்கள் ரஞ்சித்ஸ்ரீ, குமார் மேனன் உள்ளிட்டோர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மா என்று அழைக்கப்படும் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் மோகன்லால் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். சங்கத்தின் செயற்குழுவும் கலைக்கப்பட்டிருக்கிறது .அதே சமயம் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பத்திரிகையாளர்கள் நடிகர் மோகன்லாலை கேட்ட போது நான் அந்த அறிக்கையை படிக்கவில்லை என்று சொல்லி நழுவினார். சர்ச்சையை எதிர்கொள்ள துணிச்சல் இன்றி நடிகர் மோகன்லால் ஓடி ஒளிவதாக நடிகை பார்வதி விமர்சனம் செய்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பிறகு பல நடிகைகள் மலையாள உலகில் பாலியல் பலாத்காரம் இருப்பது உண்மைதான் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகை ராதிகா மலையாள சினிமா படப்பிடிப்பின் போது கேரவன் வாகனத்தில் ரகசிய கேமரா வைத்து நடிகையர் உடை மாற்றுவதை நடிகர்கள் ரசிப்பதாக குற்றம் சொன்னார். கூடவே நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது மலையாள சினிமாவில் மட்டுமல்ல தமிழ்,தெலுங்கு, இந்தி அனைத்து சினிமாவிலும் உள்ளது. எனவே சினிமாவில் உள்ள பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அறிவுரையும் சொல்லி இருக்கிறார். எப்போதும் தைரியமாக கருத்து சொல்லும் ராதிகா இந்த விஷயத்தை இவ்வளவு தாமதமாக ஏன் சொல்கிறார் என்ற விமர்சனமும் நடிகை ராதிகா பற்றி வரத் தொடங்கி இருக்கிறது.

பிரபல மலையாள நடிகை சௌமியா தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்ததாக கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு போலீஸ் குழுவிடம் தெரிவித்திருக்கிறார். தம்பி மகளே என்று அழைத்த அந்த அந்த இயக்குனர் பல வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். என்னை அவர் பாலியல் அடிமை போல் நடத்தினார் என்று சொல்லி இருக்கிறார் நடிகை சௌமியா.

ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி நடிகர் விஷால், யாராவது படுக்கைக்கு அழைத்தால் செருப்பை கழட்டி அடிங்க என்று நடிகைகளுக்கு அறிவுரை கூறினார். விஷால் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஸ்ரீ ரெட்டி தன்னிடம் ஏராளமான செருப்புகள் உள்ளன வேண்டுமா என்று விஷாலுக்கு பதிலடி கொடுத்தார்.

ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் கருத்து கேட்டபோது எனக்கு எதுவும் தெரியாது என்று நழுவி விட்டார்.

சினிமாவில் மட்டும் தான் பெண்களுக்கு ஆபத்து என்றால் ஓடோடி வந்து உதவுவார்கள் இந்த நடிகர்கள். ரீலில் உதவும் நடிகர்கள் தான் ரியலில், தொழில்நுட்பக் கலைஞர்களோடு டார்ச்சர் கொடுப்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.