தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 39 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
பொதுவாக தமிழ் திரைப்படங்களில் 1970 களில் தந்தையை இழந்த குடும்பத்திலுள்ள மூத்தபெண் வேலைக்குச்சென்று மீதியுள்ள குடும்பத்தார் அனைவரையும் காப்பாற்றுவதாக காண்பிப்பது அரிதே, அரிது மட்டுமல்ல, காண்பித்தார்களா என்பது சந்தேகமே ...
அப்படிப்பட்ட காலகட்டத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அழகானதொரு கதைக்களம் அமைத்து அதில் சுஜாதா போன்றதொரு திறமையான நடிகையையும் மற்ற நடிகர்களையும் கொண்டு " அவள் ஒரு தொடர்கதை " என்ற சிறப்பானதொரு திரைப்படம் உருவாக்கினார் .....
ராஜாக்கள் தங்களது மணிமகுடத்தை தங்கத்தால் செய்துகொண்டாலும் அதை மேலும் ஜொலிஜொலிக்க மிகச்சிறந்த வைரவைடூரியங்களை பதிப்பதுபோல், தனது திரைப்படத்திற்கு மெருகூட்ட MSVன் இசைமழையையும், கவியரசர் கண்ணதாசனின் பொன்வரிகளைக்கொண்ட பலதரப்பட்ட பாடல்களையும் இணைத்தார் ....

பொதுவாக திரைப்பாடல்கள் பலவிதங்களில் எழுதும் திறமைகொண்ட கவியரசர், சூழ்நிலைப் பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவதுபோல் சந்தோஷாமாக பாடல்வரிகளை தருவார் என்பதில் இருவேறு கருத்துண்டா ....
அப்படியொரு பாடல்தான் " ௧ண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் " என்ற சூழ்நிலைப்பாடால் (situation song), இதுபோன்ற பாடல்களில், கவியரசின் சிறப்பம்சம் மூன்றுவகையில் மிளிரும் ....
1. அந்தப்பாடல் படத்தில் வரும்வரை கதையின் போக்கென்ன என்பதை பாடல்வரிகளால் உணர்த்துவார்,
2. அந்தப்பாடல் எந்த சூழ்நிலையில் பாடப்படுகிறது என்பதை அழகோவியமாய் உணர்த்துவார்,
3. அந்தப்பாடலே கதையினை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதுபோல் எழுதுவார்
இப்படியொரு கவிஞனை திரையுலகில் காண்பது அந்த காலகட்டத்திலும் சரி, அதற்குபின்பும் சரி, காண்பது அரிதாகிப்போனது ....
கண்ணிலே என்ன உண்டு பாடலில் கதாநாயகி குடும்பத்தில் தானொரு மெழுகுவர்த்தி போன்று இருந்து குடும்பத்து உறுப்பினர்களின் முன்னேற்றங்களுக்காக பாடுபடுவதாகவும், தனக்கான நற்காரியங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதையும் சூசகமாகவும், மனதிலுள்ள ஏக்கத்தை விளக்கும் வரிகளாக " கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும், கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும், என்மனம் என்னவென்று யாருக்குத் தெரியும் " என அழகாக விவரித்திருப்பார், அதாவது கண்களால் காண்பதன்மூலமே எல்லாவற்றையும் புரிந்துகொள்ளமுடியாது, காணமுடியாத பலவும் தன்மனதுள் ஒளிந்திருப்பதாக கதாநாயகி ஏக்கத்தோடு சொல்வதாக வரும் வரிகளிவை, எதுகைமோனை ஒருபுறமென்றால், ஆழமான கருத்தடக்கம் கொண்ட வரிகளல்லவா இவை ....
தொடர்ந்துவரும் வரிகளில் ஒருசொல் இருபொருள்படவும் அதேநேரத்தில் தன்னுடைய ஆற்றாமையை எடுத்துரைக்கும் விதத்திலும் கதாநாயகி பாடுவதாக வடிவமைத்தது கவியரசின் திறமையே என்பது திண்ணம் ....

பயணம் தொடரும்...