தொடர்கள்
தொடர்கள்
சாஹித்ய டாகாடமியில் சுப்புசாமி - 4. புதுவை ரா.ரஜினி. ஓவியம் : மணி ஶ்ரீகாந்தன் இலங்கை

20230502234836979.jpeg

"ஜல்தியா 'புக்கு சோக்கு' (Book Show) போவணும் வாத்யாரே...!” என்ற பிளேடுவை, கொஞ்சலாய் கையை முறுக்கினான் குண்டு ராஜா.

"நீயெல்லாம் இன்னாத்துக்கு உசுரு வாழரே? நம்ம தாத்தாவுக்கு ஒரு கவுரதை கெடைக்குதுன்னா நாமெல்லாம் சப்போர்ட்டா இருக்க வோணாம்?"

"அது கரீட்டு நைனா. நந்தனத்திலே சனம் பொஸ்தகம் வாங்க அலமோதும். போனாக்க, நானூறு ஐநூறு பீராயலாம்...!"

"தாதா, இந்த மனுஷ சுத்தம் கெட்ட மனுஷ. பன்னிக்கு பலகாரம் வெச்சா, ’நீயே சாப்பிடு. நான் காலைல வந்து சாப்புடறேன்னு' ஒரு பழமொழி கன்னடத்தில் உண்டு தாதா...!" என்று கோபப்பட்டான் அப்பாராவ்.

"மவனே பன்னி கின்னினே மூஞ்சிலே பூரான் உட்டுறுவேன்...!" என்று எகிறினான் பிளேடு.

சுப்புசாமி திடீர் சமாதானத் தூதுவராகி, இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை பிளேடுவிடம் திணித்தவர்,

"இது உன் பேட்டா. டிபன் செலவு தனி. கார்லே கம்முனு வா. நில், கவனி, புறப்படு...!" என்றார்.

"வாத்தியாருன்னா...வாத்தியாருதான்! போங்கடா தம்மாத்தூண்டு பசங்களா!"

'பேசாம நாமும் பிகு பண்ணி இருந்தா, ஆயிரம் கிடைச்சிருக்குமோ?' - குண்டு யோசித்தான்.

"தோல் கொடுப்பான் தோழன்கள்...!" என்றார் தாத்தா.

"தோல் இல்ல தாத்தா, தோள்...! இதைக் கருத்தா வெச்சு, ஒரு கதைகூட எழுதியிருக்கீங்க. வாராந்தரி ராணியிலே வந்ததே...!"

"எழுத்தாளருக்கே பேனாவா? வயசானா உனக்கும் நாக்கு தப்பும்டா...! தோள் கொடுப்பான், தோழன்கள்...போதுமா? நீங்க இல்லாம நான் ஏதுடா? என் பேனாவிலேருந்து வரும் ஒவ்வொரு எழுத்தும் என் உயிர்த் தோழர்களின் உத்வேகம்தானடா...!" என்றார்.

"அது சரி, தாத்தா. கொல்லன் பட்டறையிலே ஈ மாதிரி, நம்ம கருணாச்சலம் முறுக்குன மீசை, மடிச்சுக் கட்டின லுங்கியுமா வந்தாக்கா, செயலாளர் பயந்துடப்போறார்...!"

"அதுவும் சரிதான். நாய்க்கு என்னோட ஜிப்பா ஒன்னைப் போடு. வேட்டிய தளறக் கட்டிவுடு. ரெண்டு பேனாவை நெஞ்சில சொருகு. கவிஞர்ன்னு சொல்லிடறேன்...!"

ராவ் கண்களில் கண்ணீர் பெருகச் சிரித்தான். ஹாஃப் பிளேடு விழித்தான்.

'ஏ...நிலாவே...

எங்க தாராந்துப் பூட்டே?

அட, மச்சின்ச்சி நெத்திலே பொட்டு...!'

”நம்ம பிளேடு ஹைக்கூ எப்படி தாத்தா?" என்று கேட்ட குண்டு, தொந்தி குலுங்கச் சிரித்தான்.

தாத்தாவுக்கும் அவனது கிண்டல் பிடித்துப்போக, சிரித்தார்.

"யோவ் இன்னாபா என்னிய வெச்சு கில்லி ஆடுறிங்களா? சரி, துட்டு வாங்கினதுக்கு கவிஞர் இன்னா, கவிப்பேரரசு ஆக்டே குடுப்பான் இந்த கருணாச்சலம்...!"

"சபாஷ்...!" என்றார் சுப்புசாமி.

+++++

பிளேடுவுக்கு பத்திரிகையாளர் மாலனை மிகவும் பிடித்தது. அழகாகப் படியத் தலைவாரி, வழ வழ வென்று முகச்சவரம் செய்து, நேர்த்தியாக உடை அணிந்து, அறிவுக்களை வீசும் பார்வையோடு இருந்த அவரது தோற்றம் அவனுக்கு, அவரிடம் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.

கற்றவர்கள் கூடிய சபையில் தானும் தோஸ்துகளும் 'குந்திகினு இருப்பதே மருவாதி' என்று நினைத்தான்.

பிளேடின் எழுத்தாளர் அவதாரத்தை மாலனும் ரசித்தார். அவருக்குத் தெரியாதா, அவனைப்பற்றி?

"என்ன கவிஞர் ஹாஃப் பிளேடு எப்படி இருக்கீங்க?" என்றார்.

"சோக்காகீறேன் சார்? உங்கள அடிக்கடி கோட்டு சூட்டோட டிவியில பாத்திருக்கேன்...!" என்றவன், தனது பிளேடு பட்டப்பெயர் இவருக்கு எப்படி தெரியும் என்று விழித்தான்.

"என்ன விஷயத்துக்கு நேரடியா போய்டலாமா? எழுத வேண்டியது நிறைய இருக்கு. வெட்டு ரெண்டா இருக்கலாம், துண்டு ஒண்ணுதான் இருக்கணும். என்ன நாஞ் சொல்றது?" என்றார், செயலாளரிடம் சுப்புசாமி.

'வேடிக்கை மனிதரைப்போல வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்று கூவிய பாரதியின் புது அவதாரம், துணிவு...வாரிசாக... இந்த மீசையற்ற நரைகூடி, கிழப் பருவமெய்திய நவீன பாரதி சுப்புசாமியிடம் இருக்கிறதோ...?' என்று எண்ணினார் மாலன்.

(அடாவடி தொடரும்…)