வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அல்லேரிமலை பகுதி, அத்திமரத்துகொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜி-பிரியா தம்பதி. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 26ம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே தூங்கும்போது தனுஷ்காவை பாம்பு கடித்துள்ளது. அக்குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் எழுந்து, அக்குழந்தையை சுமந்தபடி பைக்கில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறிது தூரத்துக்கு பிறகு பைக்கில் செல்ல பாதை வசதி இல்லாததால், அனைவரும் குழந்தையை தூக்கி சுமந்தபடி அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், நடுவழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இப்புகாரின்பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து குழந்தையின் சடலத்தை ஆம்புலன்ஸ் சொந்த கிராமத்துக்கு பெற்றோர் கொண்டு வந்தனர். எனினும், அல்லேரி மலையடிவாரம் வரை ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு பாதை வசதி இல்லாததால், அங்கிருந்து சுமார் 10 கிமீ தூரம் குழந்தையின் சடலத்தை தூக்கி சுமந்தபடி பெற்றோரும் உறவினர்களும் மணலில் நடந்தபடி வீடு வந்து சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து அல்லேரி மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘அல்லேரி மலைக்கு சரியான சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இங்குள்ளவர்கள் சரியான மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் இறந்து வருகின்றனர். அதேபோல்தான் தற்போது பாம்பு கடித்து இறந்து போன பெண் குழந்தையின் கதியும். அல்லேரி மலையிலிருந்து அணைக்கட்டு பகுதி சுமார் 17 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு சரியான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் உள்பட எந்த வாகனங்களும் வருவதில்லை. எனவே, அல்லேரி மலைக்கிராமத்துக்கு நிரந்தர சாலை வசதி செய்துதர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…’’ என வேதனையுடன் வலியுறுத்துகின்றனர்.
‘இக்கோரிக்கைக்கு வேலூரை சொந்த மாவட்டமாக கருதும் பொதுப்பணி துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறியே!’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
நிதின் கட்காரி பெரிய பெரிய நகரங்களை சிரமமேற்கொண்டு இணைத்துக் கொண்டிருக்கிறார். கடைசி குக்கிராமம் வரை சாலை வசதிகள் செய்யப்பட்டால் தான் இது போன்ற குழந்தை மரணங்களை தடுக்கலாம்.
Leave a comment
Upload