தொடர்கள்
தொடர்கள்
நவீன குத்தூசி கணேசன்- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20220705184617879.jpg

அந்த சின்ன அறையை விடியோ ஸ்டுடியோவாக மாற்றியிருந்தான் நவீன குத்தூசி கணேசன்.

நவீன குத்தூசி கணேசனின் இயற்பெயர் கணேசன், கணேசன் என்கிற ஒரிஜினல் பெயரை விட்டுவிட்டு புனைபெயரில் ஒளிந்து கொள்ளலாமா என யோசித்தான். யோசனை சரிபட்டு வரவில்லை. தனது பெயருக்கு முன் எதாவது வித்தியாசமான புனைபெயரை இணைத்துக் கொள்ளலாமா என யோயோயோசித்தான்.

தோட்டா கணேசன்…

டைனமைட் கணேசன்..

குத்தூசி கணேசன்…

நவீன குத்தூசி கணேசன்..

கடைசியாக யோசித்த பெயரையே தனக்கு சூடிக் கொண்டான் கணேசன். வயது 46. 165செமீ உயரம். மெல்லிதான திரேகம். முள்புதர் போன்ற தலைகேசம் இரு பக்கமும் முறுக்கி விடப்பட்ட மீசை. ஆல்கஹால் வாய். சோடா புட்டி கண்ணாடிக்கு பின்னே அரைமயக்க கண்கள். இந்திய அரசியலில் தான் பத்து சாணக்கியனுக்கு சமம் என்கிற உடல் மொழி அவனிடம் வழிந்தோடியது. காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி செய்து விருப்ப ஓய்வு பெற்றவன். மனைவியிடம் பத்து வருடங்களுக்கு முன்னமே விவாகரத்து பெற்றவன். கடந்த இரண்டு வருடங்களாக ஒரு செவிலியர் நங்கையுடன் தாலிகட்டாத தாம்பத்யம் நடத்துகிறான்

ஐந்து வருடங்களாக நவீன குத்தூசி கணேசன். ‘நெத்தியடி’ எனும் யூட்யூப் சானலை நடத்துகிறான். பார்வையாளர்கள் இரண்டு லட்சம்.

தினம் இருமுறை விடியோக்களை பதிவேற்றம் செய்வான். விடியோக்களில் ஐஐடி புரபஸர் மாதிரி பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் செய்வான். அவனது விடியோக்கள் எல்லாம் காரசாரமானவை, மத்தியஅரசையும் மாநில அரசையும் கழுவிகழுவி ஊற்றுவான், சமயங்களில் எதிர்கட்சி தலைகளையும் விட மாட்டான்.

ஸ்டாண்டில் விடியோ கேமிராவை பிக்ஸ் செய்தான் உதவியாளன். இருவட்ட வடிவ வெளிச்சங்களை நவீனகுத்தூசி கணேசனின் மீது பதித்தான். கணேசனின் சட்டையில் காலர் மைக் பொருத்தினான்.

சதுரங்க ஆட்டத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முதலில் விவரித்தான் நவீன குத்தூசி கணேசன். தொடர்ந்து தமிழக அரசு நடத்தும் ‘செஸ் ஒலிம்பியாட் 2022’ பற்றி ஸ்லைடுகள் போட்டு நீட்டி முழங்கினான்.

அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள் இடம் பெற வேண்டுமா, வேண்டாமா? அலசி ஆராய்ந்தான்.

முடிவில் ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்கள் போட அவசியமில்லை என தீர்ப்பளித்தான்.

எடுத்த விடியோவை எடிட் பண்ணிக் கொண்டடிருக்கும் போது வாசலின் அழைப்புமணி சிணுங்கியது.

உதவியாளன் ஓடிப்போய் கதவைத்திறந்து விட்டான். கட்சிக்கரை வேட்டி கட்டிய ஒரு மனிதர் சூட்கேஸுடன் நின்றிருந்தார். அவர் சட்டைப்பையில் ட்ரான்ஸ்பரனட்டாக அவரது தலைவியின் புகைப்படம் சிரித்தது.

“உள்ளே வரலாமா?”

நவீன குத்தூசி கணேசன் வரவேற்பறைக்கு வந்து நின்று “வாங்க” என்றான்.

“உக்காந்து பேசலாமா?”

“தாராளமா…” இருவரும் எதிர்எதிரே அமர்ந்தனர்.

“நீங்க ஆரஞ்சுகட்சி எனப்படும் எதிர்கட்சி பிரமுகர்தானே?”

“ஆமாம்!”

“எதற்கு வந்தீர்கள்?”

“உங்கப்பா பேர் விநாயக மூர்த்தி. விஏஓவாக இருந்தவர். உங்கம்மா ஒரு இல்லத்தரசி உங்களுக்கு இரண்டு தம்பிகள் ஒரு தங்கச்சி. தங்கச்சி தஞ்சாவூர் மானம்பு சாவடியில் வசிக்கிறார்.. மூத்த தம்பி திருச்சியில் இரண்டாவது தம்பி அரியலூரில்.”

“ஆமா… அதுக்கென்ன இப்ப?”

“நீங்க சப் இன்ஸ்பெக்டரா இருந்தது திசையன்விளைல. நீங்க டூட்டில இருந்தப்ப ஒரு பொண்ணு தன் புருஷன் மேல புகார் பண்ண உங்ககிட்ட வந்துச்சு. அந்த பொண்ணு கூட உங்களுக்கு கள்ளத்தொடர்பு ஆகி போச்சு. அவ புருஷன் உங்களின் மேலதிகாரிகள்கிட்ட உங்கள பத்தி புகார் பண்ணினான். பிரச்சனை பெருசானது. பார்த்தீங்க டிபார்ட்மென்ட் உங்களை டெர்மினேட் பண்றதுக்கு முன்னாடி முந்திக்கிட்டு விஆர்எஸ் வாங்கிட்டீங்க… உங்க கள்ளத்தொடர்பை காரணமா வச்சுதான் உங்க மனைவி உங்ககிட்ட விவாகரத்து வாங்னாங்க…”

“ஏன் பழையகதை எல்லாம் பேசுறீங்க?”

“ஒருத்தன் எங்களை ஆதரிச்சாலும் எதிர்த்தாலும் சரி அவனோட முழு பழைய கதையையும் தோண்டி எடுத்திருவோம்,,,”

“பழைய கதைய தோண்டி எடுத்து சினிமாவா எடுக்கப்போறீங்க? உங்க பேரு என்ன?”

“என் பெயர் ராஜ மார்த்தாண்டம்!”

“வந்த விஷயத்தை போட்டுடை மார்த்தாண்டம்”

“எங்க தலைமை உன் விடியோவெல்லாம் தொடர்ந்து பாக்குது. பைஜு வாத்தியார் மாதிரி பார்வையாளர்களுக்கு பாடம் நடத்ற. பாக்க பாக்க நீ சொல்றதெல்லாம் அக்மார்க் உண்மை மாதிரியே ஒரு பிரமை பிறக்குது- எவ்வளவு நாள்தான் அந்த நர்ஸோட தாலிகட்டாம குடும்பம் நடத்துவ அவளை நீ கல்யாணம் பண்ணி வாழ்க்கைல செட்டில் ஆக வேண்டாமா?”

“அதனால?”

“நீ தினம் ரெண்டு விடியோ போடுறேல்ல. அந்த விடியோக்களை எங்க கட்சிக்கு ஆதரவா பதிவற்றம் செய்யனும். அதுக்கு நீ உன்னை எங்க கட்சிகாரனா காட்டிக்கக் கூடாது. நீ நடுநிலைல இருந்துக்கிட்டு எங்க கட்சியின் நேர்மையை உண்மையை வேண்டாவெறுப்பா சொல்ற மாதிரி ஒரு பாவ்வா காட்டனும். பத்து விடியோவுக்கு ஒரு விடியோ எங்களை கொஞ்சமா திட்டிக்க… மொத்தத்ல எங்க கட்சி உன் விடியோக்கள் மூலம் மீண்டும் தமிழ்நாட்ல ஆட்சிக்கு வரணும்.!”

“சாரி… என்னால முடியாது!”

“எங்களுக்கு ஆதரவா பதிவிடுற ஒவ்வொரு விடியோவுக்கும் பத்தாயிரம் தரம். ஒரு நாளைக்கு இருபதாயிரம். . மாசத்துக்கு ஆறு லட்சம் வருஷத்துக்கு 72லட்சம்.. பணப்பயன் மட்டும் நாங்க தரமாட்டோம். எங்க கூட்டணி கட்சியின் மூலம் ரயில்வேல நீ சொல்ற ஆளுக்கு வேலை. எங்க கூட்டணி கட்சி ஆட்சி செய்ற மாநிலங்களில் பினாமி பேரில் கான்டிராக்ட்… உன் யூட்யூப் சானலின் சந்தாதாரர்களை பத்து லட்சமா பெருக்கு. இன்னும் பல சலுகைகளை அள்ளித் தருவோம்!”

“உன் பேரத்துக்கு அடிபணிய மாட்டேன். நீ எந்திரிச்சு போகலாம்..”

“குளத்தோடு கோவிச்சிக்கிட்டு டேஷ் கழுவாம போய்டாதே. ஒரே வருஷத்ல நீ வீடு, கார் பெரிய ஸ்டுடியோ கட்டி வாழ்க்கைல செட்டில் ஆய்டலாம்!”

“என் குரல் நீதியின் குரல். ஒரு நாளும் அதனை சொற்ப லாபத்துக்கு விற்க மாட்டேன்!”

“உன்னை முடக்கி போட எங்களுக்கு ரொம்ப நேரமாகாது!”

“நான் காட்டுயானை அல்ல கும்கி யானை வைத்து பிடிக்க. நான் ஒரு கரப்பான் பூச்சி. உலகமே அழிந்தாலும் நான் உயிர் வாழ்வேன்!”

“உனது பொலிடிகல் சோர்ஸ்களை நொடியில் துண்டிப்போம்!”

“தைரியமிருந்தா தாராளமா செய்யுங்க ஐ எம் லீஸ்ட் பாதர்டு!”

“ஒரு விடியோவுக்கு 20000 ரூபாய் என உயர்த்தினால் ஒத்துக் கொள்வாயா?”

“மாட்டேன்…”

‘வேற இதை கொடுங்க நான் ஒத்துக்கிறேன்னு சொல்லு. தரம்…”

“கிளம்புறியா?”

வந்தவர் பதட்டப்பட்டார். தனியே ஒதுங்கினார். கைபேசி எடுத்து யாருக்கோ தொலைபேசினார். “பய ரொம்ப பிடிவாதமா இருக்கான். நம்ம டீலிங்குக்கு ஒத்துவர மாட்டேன் என்கிறான். போட்டுத்தள்ளி விட்டு வரவா?”

“சேச்சே… அதெல்லாம் வேணாம்… நீ கிளம்பி வந்திரு!”

கட்சி பிரமுகர் “நீ தேற மாட்ட.. போய்யா என் டுபுக்கு!”

அவர் கிளம்பி போனவுடன் கணேசனின் உதவியாளன் ஓடிவந்தான். “நீங்க ரெண்டு பேரும் பேசினதை முழுசும் கேட்டேன். அண்ணே உங்கள என்னம்மோ நினைச்சிட்டேன். இவ்ளவு நேர்மையானவரா இருக்கீங்கன்றது உலக ஆச்சரியமான விஷயம்…”

“நேர்மையாவது புண்ணாக்காவது… சென்னைல நீ ஒரு ஆட்டோகாரன்கிட்ட ஒரு ஏரியாவுக்கு போகனும் எவ்வளவு கேக்றீங்கன்னு கேப்ப.. அவன் 250ரூபாய் சொல்வான் நீ 200ரூ தரேன்னு சொல்வ. அவன் சாலிட்டா மாட்டேன்னு நின்னுடுவான். சும்மா நிக்றதுக்கு அவன் நீ தர்ற 200ரூயை வாங்கிக்கிட்டு நீ சொல்ற எடத்ல உன்னை இறக்கி விடலாமில்ல? செய்ய மாட்டான்.. ஏன்னா இப்டி பத்து பேரம் பேசுறவங்களுக்கு மசிஞ்சா மொத்தத்ல ஐநூறு ரூபா நஷ்டமாய்டும்னு மனக்கணக்கு போடுவான் ஆட்டோக்காரன். அது மாதிரி..”

“அது மாதிரி?”

“அது மாதிரிதான் நானும். போனவாரம் ஒரு மாநிலகட்சி வருஷம் இரண்டுகோடி தரேன்னு பேரம் பேசுனாங்க. நான் மசியல. எல்லா பொருளுக்கும் ஒரு விலை உண்டு. எனக்கும் ஒரு விலை இருக்கு. என் விலை வருஷத்துக்கு ஐந்து கோடின்னு நிர்ணயிச்சு வச்சிருக்கேன். பேரம் ஐந்துகோடிக்கு வந்து நிக்றவரைக்கும் நேர்மை நியாயம் நீதின்னு பீலா விடுவேன்”

“இரண்டு ஸைடும் பேரம் பேச வராம போய்ட்டா?”

“அதெப்படி வராம போய்டுவாங்க? அவங்ககிட்ட பணம் இருக்கு. என்கிட்ட பொருள் இருக்கு. என்கிட்ட இருக்ற பொருளை வாங்கினா அவங்க பணம் பல மடங்கா பெருகும். வருவாங்க.. தூண்டிலை போட்டுட்டு தூண்டிலை ஆட்டி ஆட்டி பார்க்கக் கூடாது. உரிய நேரம் காத்திருந்தால் தூண்டிலில் திமிங்கலம் கூட சிக்கும்…” சிரித்தான் நவீன குத்தூசி கணேசன்.

-ஒரு வாரத்துக்கு பின்…

கட்சி தலைவர் நேரடியாக பேசினார். “உனக்கும் வேணாம் எங்களுக்கு வேணாம். உனக்கு வருஷம் நாலுகோடி கொடுத்துடுரோம்.. உன் யூட்யூப் சானல் தவிர மத்த எல்லா ஆக்டிவிட்டீஸ்லயும் நீ எங்களுக்கு முழுமையாக உதவனும்!”

“ஓகே டன்.. அசத்திரலாம் தலைவரே!” ஜனநாயகம் தலைவிரி கோலத்தில் முகத்தில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதது..