மாபெரும் படைப்பான கல்கியின் பொன்னியின் செல்வனை PS என்று இரண்டெழுத்தில் சுருக்கமால் " பராக் பராக் கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஒரு அனுபவ பயணம் " என்ற நீண்ட ஒரு தலைப்போடு நடந்தது அந்த அறிமுக நிகழ்ச்சி.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட முன்னோட்டங்கள் மக்களின் மத்தியில் பலவிதமான பாராட்டுகளும் விமர்சனங்களும் பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ஆச்சரியத்தை நம் முன் கொண்டு வரப்போகின்றனர் கல்கி குழுமத்தினர்.
பல கோடி ரூபாய் செலவில் பல ஜாம்பவான்கள் இணைந்து பல வருடங்கள் போட்ட உழைப்பை மிஞ்சும் அளவுக்கு ஒரு கச்சிதமான சிறிய குழுவை வைத்து அவர்களோடு மூத்த பத்திரிகையாளர் திரு காலச்சக்கரம் நரசிம்மன் அவர்களை முன்னிறுத்தி அசத்தியிருக்கின்றனர்.
இத்தனை வருடங்கள் ஏன் அவர்களுக்கு இது தோன்றவில்லை அல்லது ஏன் அதனை முனைப்படுத்தி செயல்படுத்தவில்லை என்று தெரியவில்லை இருந்தாலும் வரவேண்டிய நேரத்துக்கு சரியான தருணத்தில் சிறப்பாக வந்திருக்கிறது பராக் பராக் .
இப்போதே சொல்லி விடுகிறேன் இவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியடையும் ஏன் தெரியுமா அதற்கு காரணம் இரண்டு விஷயங்கள்.
முதல் காரணம் எத்தனையோ கதாபாத்திரங்கள் நம்மை கவர்ந்தாலும் அதன் கதை முழுக்க நம்மை இழுத்து செல்வது வந்தியத்தேவன் தான் , இவர்களின் முயற்சியும் வந்தியத்தேவனை சுற்றித்தான்.
இரண்டாவது காரணம் அதில் வந்தியத்தேவனாக யாரோ ஒருவரை காண்பித்து உங்களின் கற்பனை கதாபாத்திரத்தை அவர்கள் சிதைக்க விரும்பவில்லை. இங்கே நீங்கள் தான் வந்தியத்தேவனாக வலம் வரப்போகிறீர்கள். அதாவது நீங்கள் உங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் வந்தியத்தேவனோடு .
விஷயத்திற்கு வருகிறேன்.
கல்கி குழுமம் இந்த டிஜிட்டல் உலகில் அடுத்த அவதாரம் எடுத்திருக்கிறது. அனைவரும் போல் அவர்களும் தங்களை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் அவர்களின் குணம் சுவை தரம் மாறாமல் கல்கி அவர்கள் உருவாக்கிய அந்த மாபெரும் படைப்பினை அதனை உருவாக்க கல்கி அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் சென்று வலம் வந்த வந்தியத்தேவன் பாதையில் காலச்சக்கரம் நரசிம்மன் அவர்கள் மூலமாக நம்மையும் அழைத்து செல்கிறார்கள். முதலில் இது 15 எபிசோடுகள் யூடுப் தளத்தில் வெளியிடப் போகிறார்கள். அதன் முன்னோட்டம் நான்கு டீசர்கள் வெளியிடப்பட்டது. அந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சிகளாக இருந்தது. உண்மையில் VFX இல்லாமலேயே பிரமிப்பாக இருந்தது.
கல்கி குழுமம் நமக்கு இதன் மூலம் இரண்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளனர்
முதல் வாய்ப்பு 55 இடங்களுக்கு தேடி தேடி சென்று வந்தியத்தேவன் போன தடங்களை மிக அருமையாக படம்பிடித்துள்ளனர் அதனை நம் கண்களுக்கு கட்சியாக மிக விரைவில் வெளியிடப் போகிறார்கள்.
இரண்டாவது வாய்ப்பு பாரி டிராவல்ஸ் உடன் சேர்ந்து 3 நாட்கள், 6 நாட்கள், 9 நாட்கள் என அந்த இடங்களுக்கு நம்மை அழைத்து செல்லப் போகிறார்கள். அதனால் தான் சொன்னேன் நாமே வந்தியத்தேவனாக அந்த அந்த இடங்களுக்கு சென்று அனுபவிக்கப் போகிறோம்.
அந்த காலத்தில் நாமெல்லாம் பொன்னியின் செல்வனை ஒரு முறைக்கு பலமுறை படித்தோம் இந்த காலத்து குழந்தைகளுக்கு அந்த எண்ணங்கள் இல்லையே,
வாய்ப்புகள் இல்லையே என்ற ஏக்கம் இனி தீரும். ஆம். நம் டிஜிட்டல் குழந்தைகள் அந்த உண்மையான இடங்களை காணும் வாய்ப்பும் நம்மோடு பயணித்து அதனை உணரும் பாக்கியத்தையும் கல்கி குழுமம் உருவாக்கியுள்ளனர்.
மிக சிறிய சிறந்த குழுவை வைத்து மிக குறைந்த நாட்களில் அவர்கள் இதனை சாதித்திருப்பது தான் அதிசயம்.
வீராணம் ஏரியில் துவங்கும் வந்தியத்தேவனின் நம் பயணம், காட்டுமன்னார்கோவில், உடையார்கோவில், கடம்பூர், திருக்கோவிலுார் நாகப்பட்டினம் கோடியக்கரை மாமல்லபுரம் என 10 மாவட்டங்கள் , 55 இடங்களுக்கு பயணிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு , www.kalkionline.com என்ற இணையதளத்திலும் , 73059 15554 என்ற என்னிலும் @kalkionline என்ற ட்விட்டர் பக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம்
இவர்களின் பயண ஏற்பாட்டிற்கான செலவுகள் எவ்வளவு ஆகும் என்று இன்னும் வெளியிடப்படவில்லை. வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.
10ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுகளை 1950ல் எழுத தொடங்கி 1955ல் புத்தகமாக வெளிவந்த கதை இப்போது 2022ல் நாம் அனைவரும் நேரில் சென்று பார்க்க போகிறோம் என்பதை நினைக்கும்போதே அந்த பரவசமும் பிரமிப்பும் பற்றிக்கொள்கிறது.
பஸ்சில் அழைத்து சென்று அந்த அந்த ஊரில் குதிரை ஏற்பாடு செய்து அந்த இடங்களை நாமும் குதிரையில் சென்று பார்க்கும் ஆச்சரிய நிகழ்வு கூட நடக்கலாம். கற்பனை செய்து பாருங்கள்
வரவிருக்கும் திரைப்படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் அது வெளியிடப்படும் நேரத்தில் கல்கி குழுமத்தின் இந்த முயற்சியும் நடப்பதால் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.
மிகவும் சிரத்தையாக உருவாகியிருக்கும் குழுவிற்கு பாராட்டுகள்.
அறிமுக விழாவிற்கு அழைப்பு விடுத்த கல்கி குழுமத்தின் COO, RVS அவர்களுக்கு நன்றி
ஒரு புது அனுபவத்திற்கு தயாராகுவோம் .
Leave a comment
Upload