தொடர்கள்
கதை
திருமகள் போல வளர்த்தேன் சத்யபாமா ஒப்பிலி

20220705090211787.jpeg

எங்கே போனாள் இந்தப் பெண்? கேட்டுக்கொண்டே வீதியில் இறங்கினார் அவர். அவர் நடந்தால் மக்கள் விலகி வழி விடுவர். அத்தனை அன்பு, மரியாதை. எப்பொழுது சென்றாலும் அனைவரையும் பார்த்து புன்னகைத்து, சில சமயம் நின்று பேசிவிட்டு செல்வார். இன்று யாரையும் ஏறெடுத்து கூட பார்க்கவில்லை.
தன்னிடம் சொல்லாமல் போகமாட்டாளே! எங்கே சென்றாள். தானாக பேசிக்கொண்டே நடந்தார். "எப்பொழுதும் போலத்தானே பேசினேன். வயது வந்த பெண். தாய் இல்லாதவள். திருமணம் என் பொறுப்பு அல்லவா! எப்பொழுது திருமணத்தைப் பற்றி பேசினாலும் ஏதோ சொல்லி நிறுத்தி விடுகிறாள். என் செய்வேன்." வருத்தமும் கலக்கமும் மிக மிக நடையில் தளர்வு வந்தது.


விஷ்ணுசித்தன் அவர் பெயர். சித்தமெல்லம் விஷ்ணு, விஷ்ணுவின் சித்தமெல்லாம் இவர். தாயாரே மகளாக பிறக்க ஆசைப்பட்டு வந்து பிறந்தாளாம். அத்தனை புகழுடையவர். தன் மகள் தெய்வாம்சம் என்று அவருக்கும் தெரியும். ஆனாலும் மகளுக்கு திருமணம் என்று வரும்போது குழப்பமும், தடுமாற்றமும் விஷ்ணுசித்தரையும் விட்டு வைக்கவில்லை.


துளசி மாடத்தில் கிடைத்த பெண். தெய்வக்குழந்தை. அதை அறிந்து கொள்ள நம்பிக்கையும், பக்தியுமே போதும். அவருக்கு மட்டுமன்றி அவரை சார்ந்த அனைவருக்கும் உண்டு அந்த நம்பிக்கை.
தந்தையார் கதை சொல்ல, கண்ணனையே கண்டு, கண்ணனையே உண்டு, கண்ணனையே சுவாசித்து வளர்ந்தாள். திருமணத்தில் ஈடுபாடு இல்லையாம். ஒவ்வொரு முறையும் தட்டிகழித்ததால் பொறுக்காமல் அன்று சற்று கடினமாக பேசிவிட்டார். வெளியே போய் விட்டு வீட்டுக்கு வரும்போது பெண்ணைக் காணவில்லை. மனம் கலங்கியது. சிறு வயதிலிருந்தேகடிந்துகொண்டதே இல்லை. ஒரே ஒரு முறை தவிர. அந்த நிகழ்விற்கு பின் பெண் மேல் பெருமை கூடியதே ஒழிய எந்த நிலையிலும் கோவம் வந்ததில்லை.
இன்று கூட சற்றே குரல் எழுப்பி பேசினாரே அன்றி கோவம் கொள்ளவில்லை.


தேடிக் கொண்டே சென்றார். மனமும் உடலும் கலங்கினாலும் ஆத்மாவிற்கு தெரியுமே. கால்கள் தானாக நந்தவனம் நோக்கிச் சென்றது.


நந்தவனதிற்கு உள்ளே நுழைந்ததுமே தெரிந்து விட்டது அங்கே தான் இருக்கிறாள் என்று. அவர் மகளின் செல்லக் கிளி, அதுவும் கோதை தான், பறந்து இவர் அருகில் வந்தது.

20220705090211787.jpeg


ஒரு பெருமூச்சுடன், "எங்கே இருக்கிறாள் உன் தோழி?" என்று கேட்டுக்கொண்டே நடந்தார்.
கிளி வழிகாட்ட பின் நடந்தார். நடக்கும் பொழுதே தெரிந்து விட்டது எங்கே இருப்பாள் என்று.
துளசியும், மல்லிகையும், முல்லையும் நிறந்த நந்தவனம் அது. அதை பராமரித்து மலர் பறித்து,மாலையாய் கோர்த்து பெருமாளுக்கு சேர்க்கும் வரை அவர் கைங்கர்யம். அவள் சூடிக் கொடுத்து அதைத்தான் பகவான் விரும்புகிறார் என்று தெரிந்தபின் அதையும் தலையாய கடமையாய் செய்வார். அவருக்கு வேண்டியது அவன் திருவுள்ளம் மகிழவேண்டும்.


மெதுவாக மகளை அணுகினார். துளசி மாடத்தின் அருகே, தரையில் கால்கள் மடக்கி தலையை மாடத்தில் சாய்த்து அமர்ந்திருந்த அவளைக் கண்டார். கைகள் தரையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. வாய் எதோ முணுமுணுத்து கொண்டிருந்தது. சோர்ந்து போய் அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டதும் மனம் தளர்ந்து போனது. தாயுமானவர் அல்லவா!


" கோதை" என்று மெதுவாக கூப்பிட்டார். அவளுக்கு ஆண்டாள் என்று தானே நாமகரணம் சூட்டி இருந்தாலும் கோதை என்று அழைப்பதில் தான் ஒரு சந்தோஷம் அவருக்கு.

திடுக்கிட்டு வேகமாக திரும்பினாள். தந்தையைப் பார்த்ததும் எழுந்து நின்றாள். தலை குனிந்தபடியே நின்றாள். கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தால் தந்தை தாங்க மாட்டார் என்று தெரியும்.

" இங்கே என்னம்மா செய்கிறாய்? " அருகில் நெருங்கி தலையை வருடிய படி கேட்டார்.
கண்கள் மேலும் கலங்கின கோதைக்கு.
மெதுவாக, " அம்மாவை தேடி வந்தேன் அப்பா" என்றாள், துளசி மாடத்தை காட்டிக் கொண்டே!
பெருமூச்சுடன் தலையை ஆட்டினார் ஆழ்வார். துளசி மாடத்துக்கு அருகே தான் கிடைத்ததால் துளசி அன்னையே தன் தாயாக மனதில் கொண்டிருந்தாள். இளம் பெண், மனதில் உள்ளதை தாயிடம் தானே சொல்ல முடியும். தாயுமானவராகவே இருந்தாலும் சொல்லாமல் சில விஷயங்கள் புரிவதில்லை தந்தையருக்கு.
" கோதை, நான் சொல்வதை நீ புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு முக்கியமல்லவா. தட்டிக் கழிப்பதில் என்ன பயன்?"
தாயின் அருகாமை கொடுத்த தைரியமோ என்னவோ, தலை நிமிராமல் தந்தையிடம் சொன்னாள்,
" அப்பா, நான் மானிடருக்காக பிறந்தவள் அல்ல. என் உடலும் ஆன்மாவும் கண்ணனுக்கே. மானிடருக்கு என்னை திருமணம் செய்ய முடிவு செய்தால் என் உயிர் துறக்கவும் அஞ்சமாட்டேன்"
"ஶ்ரீதரா! இது என்ன சோதனை. யசோதயாய் நான் உனக்கு தாலாட்டு பாடவில்லையா, உணவுதான் ஊட்ட வில்லையா! ஒரு தாயாய் பாவனை செய்ய முடிந்த எனக்கு, ஒரு தாயாய் வாழத்தெரிய வில்லையா? உன்னை திருமணம் செய்வது என்பது நடக்குமா? பகவானே என் குழந்தையை காப்பாற்று" மனதால் கை கூப்பினார்.
" சரி. அகத்துக்கு போய் பேசலாம் வா"
" இல்லை அப்பா. இங்கே அம்மாவின் முன் பேசிவிடுவோம்"
சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின்
" கோதை, நீ புத்திசாலி பெண். உனக்குப் புரியாதா எது நடக்கக் கூடியதென்று. கண்ணன் சென்ற யுகத்தை சேர்ந்தவனல்லவா! மனதால் குழந்தையாய், நண்பனாய், சேவகனாய், கொண்டாடலாம், காதல் கொள்ளலாம். மணம் முடிக்க முடியுமா? உனக்கு தெரியாதா?"
" எல்லாம்.தெரிந்த நீங்களே அவனை ஒரு யுகத்திற்குள் அடக்கலாமா? வருவானப்பா என்னை மனம் முடிக்க! கோபியர் போல் நானும் நோம்பு நோற்கிறேன். வாரமல் இருப்பானா என்ன?"
கலங்கிய கண்களில் கலங்காத தீர்மானம். ஆழ்வாரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மெதுவாக வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
"நான் என்ன எண்ணுகிறேன். அவள் தெய்வம் என்பதை ஏன் மறந்து போகிறேன். மறுபடியும் மறுபடியும் அறிவுறுத்தி கொண்டபின்னும் ஏன் தடுமாறுகிறேன்!
உலகத்திற்காகவா பயப்படுகிறேன்! "
நான் செய்யவேண்டியது என்ன? "
யோசித்துக்கொண்டே திரும்பினார். துளசி மாடம் அருகே கை கூப்பி நிற்கும் மகளை பார்த்தார். உலகமே பழித்தாலும்
அவள் வழி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்.
" வழி காட்டு மாதவா" என்று கூறிக் கொண்டே வீடு நோக்கி நடந்தார்.
காலம் சென்றது. திருப்பாவையும், திருமொழியும் அரங்கேறியது. தந்தையும், மகளும் கட்டளைக்கு காத்திருந்தனர்.
கள்வனானலும், முறை தெரிந்த கள்வன் அவன். கோதையின் கனவில் வரவில்லை. ஆழ்வாரின் கனவில் வந்தான். ஶ்ரீரங்கம் எழுந்தருளச் செய்தான். அனைவரும் பார்த்திருக்க கோதை நாச்சியார் அவனுடன் கலந்தாள். கண்ணெதிரே மாயமானாள்.
செங்கண்மால் கொண்டுபோவான் என்று நம்பி இருந்தாலும் அந்த தருணம் தந்தையாய் மனம் கலங்கியது. மகள் திருமணம் ஆகி செல்கிறாள், நந்தகோபா் என்ன சொல்வார், யசோதை என்ன சொல்லுவாள். இது போல் பெண் கிடைக்குமா என்று ஆச்சரியப்படு வார்களா? என்னவெல்லாமோ சிந்தனை.
வீடு திரும்பினார். வெறுமைதான். ஆனாலும் அவர் பிறப்பின் மற்றுமொரு கடமை ஆற்றிவிட்ட ஒரு திருப்தி. உள்ளே நுழைந்து தரையில் கால் நீட்டி அமர்ந்தார். கோதை பறந்து அவர் அருகில் வந்தது. தன் முகம் பார்த்து நின்ற கிளியை நோக்கி, "நாளை நீயும் சென்று விடுவாய்" என்றார். அருகே வந்து மடியில் அமர்ந்தது. அவருக்கும் தெரியும், ஆண்டாள் இதை தனக்காகவே விட்டுசென்றாள் என்று. தான் செல்லாமல் அது செல்லாது.
கண்மூடி அமர்ந்தார்


செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட் டிருப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பர் ஆர் இனியே


தன் உள்ளிருந்து கேட்ட மகளின் குரலுக்கு தலை அசைத்துகொண்டே கண் அயர்ந்தார் விஷ்ணுசித்தர்