தொடர்கள்
கதை
அழலாமா? - ஆர்னிகா நாசர்

20210002002259818.jpg

நெய்வேலி தலைமை நிர்வாக அலுவலகம்..

ஷிப்ட்டை முடித்துவிட்டு பொறியாளர்கள் முஸ்தபாவும் உத்தண்டராமனும் காருக்கு நடந்து வந்தனர். உத்தண்டராமன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். முஸ்தபா பக்கத்து இருக்கையில் அமர்ந்தான், கார் கிளம்பியது.

“பாய்! உன்கிட்ட ஒண்ணு கேக்கனும் கேக்கனும்னு நினைச்சேன். கேட்டா கோவிச்சிக்க கூடாது. இஸ்லாம் மார்க்க விஷயங்கள் அனைத்தும் பற்றி உனக்குத் தெரியும்தானே?”

“ஓரளவு!”

“எங்க இந்து மதத்துல யாராவது இறந்து போய்ட்டா அழுறோம், ஒப்பாரி வைக்கிறோம், மாரடிச்சுக்கிரோம்... மொத்தத்ல துக்கத்தை மேக்ஸிமம் எவ்ளவு வெளிப்படுத்த முடியுமோ.. அதனை செய்கைகளால் வெளிப்படுத்துறோம். ஆனா உங்க முஸ்லிம்ல யாராவது இறந்து போய்ட்டா அழக்கூடாதாமே... அதாவது பரவாயில்லை... வாய்விட்டு சிரிக்கனுமாமே... உண்மையா?”

நண்பனை செல்லமாக முறைத்தான் முஸ்தபா... “யார் சொன்னா?”

“ப்ரண்ட்ஸுங்க பேசிக்கிரதுதான். நான் கேள்விப்பட்டது உண்மையா, பொய்யா?”

“பத்து சதவீதம் உண்மை. தொண்ணூறு சதவீதம் பொய்!”

“விளங்கிற மாதிரி சொல்லேன் முஸ்தபா!”

“பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறக்கவேண்டும். மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்பட்டு, அவரவர் நன்மை தீமைக்கேற்ப சொர்க்கம்-நரகம் பரிசளிக்கப்படும். இதுதான் எங்க மத நம்பிக்கை. ஆகவே சகமனிதர்கள் மரணத்துக்காக மிகையாய் துக்கிப்பதில்லை!”

“கேட்ட கேள்விக்கு பதில்-அழுவீர்களா, சிரிப்பீர்களா?”

“சிரிப்பதாகக் கூறுவது அபத்தம். நபிகள் நாயகத்தின் பேரன் அலீ இறந்து விட்டதாக நாயகத்தின் மகள் ஜைனபு செய்தி அனுப்புகிறார். முதலில் போகாத அவர், இரண்டாம் அழைப்புக்கு போகிறார். குழந்தை நாயகத்திடம் தரப்படுகிறது. குழந்தையை பார்த்த நாயகத்தின் கண்கள் கண்ணீர் வடித்தன. அருகிலிருந்த நபிதோழர் ‘என்ன... நீங்களுமா அழுகிறீர்கள்? - எனக் கேட்கிறார். அதற்கு நபிகள் நாயகம். ‘இது இரக்கம்... தன் அடியார்களின் உள்ளங்களில் இதனை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். அல்லாஹ் தன் அடியார்களுக்கு கிருபை செய்வதெல்லாம் இதர அடியார்கள் பால் கிருபையுள்ளவர்களுக்கு தான்!” என்கிறார்கள். ஸோ, நெருங்கியவர் மரணத்துக்கு ஆரவாரமில்லாமல் கண்ணீர் வடிப்பதை.. சோகத்தை துக்கத்தை வெளிப்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை உத்தண்டு!”

“பின்னே... எதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது முஸ்தபா?”

“இறந்தவருக்காக உறவினர்கள் வாய்விட்டு அழுதால் இறந்தவர் புதைகுழியில் வேதனை செய்யப்படுகிறார் - என நபிகள் நாயகம் கூறியதாக ஒரு நபிதோழர் கூறியிருக்கிறார். ஆனால், அதனை அன்னை ஆயிஷா அம்மையார் வன்மையாக மறுத்திருக்கிறார். அப்படி நபிகள் நாயகம் சொல்லவில்லை என்றும் மற்றவருடைய குற்றத்துக்காக, எந்தக் குற்றவாளியும் குற்றம் பிடிக்கப்பட மாட்டார் எனத் திருக்குர்ஆன் கூறுவது உங்களுக்கு போதுமான சாட்சியமாகும் என்றும் அன்னை ஆயிஷா அம்மையார் விளக்கியிருக்கிறார். ஒப்பாரியோ, மாரடிப்போ, புலம்பலோ இல்லாமல் அன்பு, இரக்கம், அபிமானம், பந்துத்துவம் காரணமாக யாரும் இறந்தவருக்காக அழுவதை, அதாவது கண்ணீர் வடிப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை!”

“‘ஒரு முஸ்லிம் மரணமடைந்துவிட்டால் அவரது உறவினர்கள் ஒப்பாரி வைக்கின்றனர் என வைத்துக்கொள் முஸ்தபா. ஒப்பாரியால் என்னென்ன தீமை ஏற்படும்?”

“எவருக்காக ஒப்பாரியிடப்படுகிறதோ அவர் ஒப்பாரியிடப் பட்டதை குறித்து புதைகுழியில் வேதனை செய்யப்படுவார் என்கிறது ஒரு நபிமொழி. ஒப்பாரி வைப்பவர்கள் அழகான முறையில் பாடிக்கொண்டும், இறந்தவர்களை அவர்களின் யதார்த்தமான நிலையைக் காட்டிலும் அதிகமாக புகழ்ந்தும் ஒப்பாரி வைப்பதால் அந்த அதிகப்படியான வர்ணனைகளுக்காக இறந்தவர் வேதனை செய்யப்படுவார். துக்க காலங்களில் முகத்திலடித்துக் கொள்பவரும், அஞ்ஞானகாலத்து பேச்சுகளைப் போல் பேசுபவரும் நம்மைச் சேர்ந்தவரல்லர் எனவும் ஒரு நபிமொழி கூறுகிறது.”

“மொத்தத்தில் துக்கத்தை இயல்பாக, உண்மையாக, தத்துவார்த்தமாக ஆன்மிக உணர்வாக வெளிப்படுத்த வேண்டும் என்கிறது உங்க மதம். நல்ல விஷயம்தான் முஸ்தபா. ஆனா கட்டுக்கடங்காத துக்கம் பீரிட்டு எழும்போது அத்துக்கத்தை மிதப்படுத்த முடியுமா?”

“மிதப்படுத்த தகுந்த பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் உத்தண்டு!”

“மரணங்களுக்கு நீங்கள் யாரும் சிரிப்பதில்லை, மௌனமாக அழுகிறீர்கள். ரைட்டோ... இப்ப விஷயத்துக்கு வருவோம். இவ்ளவு நேரமும் நான் மரணத்தை பேசிக் கொணடிருந்ததற்கு தகுந்த காரணமிருக்கிறது. எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியரின் தந்தை பிளாக் 21-ல் இறந்துவிட்டார். அந்த துக்கத்தை நாம் அட்டன்ட் பண்ணப் போகிறோம் முஸ்தபா. இந்துக்கள் உறவினர் மரணத்தில் என்ன வகை உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கண்கூடாய் பார்!”

“சரி!” கார் அவசர பந்தல் போடப்பட்ட வீட்டின் முன்போய் நின்றது.
தாரை தப்பட்டம் அடித்துக் கொண்டிருந்தனர். பாடை கட்டிக் கொண்டிருந்தனர். இறந்தவர் உடலை ஒரு மரசேரில் உட்கார வைத்திருந்தனர். வாய்கட்டு போடப்பட்டிருந்தது. நெற்றியில் ஒற்றை ரூபாய் நாணயம். இறந்தவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும், துக்கத்துக்கு வந்தோர் யாரும் அழவில்லை. சிரித்து கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தனர். சிலர் மறைவில் நின்று குடித்துக்கொண்டிருந்தனர்.

ஊழியரின் தோளை ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான் உத்தண்டராமன்.

“என்னை எதுக்கு சார் தட்டிக்குடுக்கறீங்க? நான் அழல... படுத்த படுக்கையா இருந்தார் அப்பா பத்துவருஷமா... எப்படா மண்டையை போடுவார்னு ஆறு வருஷமா காத்திருந்தோம். கடைசில கடவுள் இன்னைக்கி காலைல கண்ணைத் தொறந்திட்டான். எங்கப்பன் கடைசி மூச்சை விட்டாரு. இது துக்க சாவு இல்ல சார். கல்யாண சாவு. இன்னைக்கி மாதிரி சந்தோஷமா நான் என்னைக்கும் இருந்ததில்லை. கான்டிராக்ட் லேபராய் இருந்து ரெகுலரா ஆனப்பக் கூட எனக்கு இத்தினி சந்தோஷமில்லை” கவுண்டமணி போல் சிரித்தார் அந்த ஊழியர்.
ஊழியர் சிரிப்பதை பார்த்து ஊழியரின் மனைவி மக்கள் சிரித்தனர்.
“கிழம் போறேன்னா போச்சு... எமனை கெஞ்சிக் கெதற வச்சிருச்சில்ல...”
பிணம் குளிப்பாட்டப்பட்டு பாடை ஏற்றப்பட்டது. ஊழியர் தீச்சட்டி ஏந்தி நடக்க பத்துக்கு மேற்பட்ட குடிபோதை இளைஞர்கள் குத்தாட்டம் போட்டனர். இறுதி ஊர்வலம் கிளம்பியது. ராக்கட் பட்டாசு சரசர்ரென்று வெடித்தனர். அவை வானத்துக்கு சீறிப் பாய்ந்து தாறுமாறாய் வெடித்தன. ரோஜா இதழ்களை தரையில் தூவியபடி ஊர்வலம் போனது. உத்தண்டராமனும் முஸ்தபாவும் காருக்கு நடந்தனர்.

“என்ன முஸ்தபா... கல்யாணச்சாவு கொண்டாட்டத்தை பார்த்தியா?”

“பார்த்தேன்!”

‘‘இதை பற்றி உன் அபிப்ராயம் என்ன?”

“இன்னைக்கி நடந்தததை மதத்தோடு பொருத்தி பார்க்கக் கூடாது உத்தண்டு. ஒரு ஆணோ ஒரு பெண்ணோ இறந்துட்டா ஏன் அழுறோம்? சம்பாதிக்கும் குடும்பத்தலைவன் இறந்துவிட்டால், இனி சோத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்கிற பயத்தில் மனைவியும் குழந்தைகளும் அழுகின்றனர். நெருங்கிய சொந்தம் இறந்துவிட்டால், தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்கிற பழமொழிக்கேற்ப மற்ற சொந்தங்கள் அழுகின்றன. இளம் கணவன் இறந்துவிட்டால், இனி தனக்கு செக்ஸ் கிடைக்காதென இளம் மனைவி அழுகிறாள். நெருங்கியவர் மரணத்துக்கு அழாவிட்டால், நாலுபேர் இழிவாக பேசுவர் என்பதற்காக சிலர் போலி கண்ணீர் வடிக்கின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக அழுகின்றனர். சாவு வீட்டில் ஒப்பாரி வைப்பதும் தாரை தப்பட்டம் அடிப்பதும், ஆடுவதும் ஒரு வகை கண்காட்சி. இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை...”

ஆமோதித்தான் உத்தண்டராமன்.

“எந்த மதத்தின் கொள்கைகள் சிறந்தது என நாம் வழக்காடு மன்றம் நடத்தவில்லை அவரவர் மதம் அவரவருக்கு!”

ஆமோதித்தான் உத்தண்டராமன்.

“ஆமாமா!”

“ஆனா ஒரே ஒரு விஷயம்...”

“சொல்லு...”

“உலகத்தில் நொடிக்கு நொடி மரணங்களும் பிறப்புகளும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. யாருடைய மரணத்துக்காகவும் உலகம் தனது சுழற்சியை நிறுத்தப் போவதில்லை. ஒரு நல்ல மனிதன் இந்துவானாலும் சரி.. கிறிஸ்டியன் ஆனாலும் சரி.. முஸ்லிம் ஆனாலும் சரி அவன் இறந்துவிட்டால் சகமனிதர்கள் அவனுக்காக மெய்யான கண்ணீர் வடிக்கின்றனர். அந்த கண்ணீர் இறந்த மனிதனின் நன்நடத்தைக்கான சான்றிதழ். அந்தக் கண்ணீரை எந்த மதமும் தவறு என தடுக்கப் போவதில்லை. போலித்தனமான துக்கத்தை எந்த மதமும் ஆதரிக்க போவதும் இல்ல உத்தண்டு!”

“யூ ஆர் கரக்ட் முஸ்தபா!”

“இன்னைக்கி நிகழ்வுகளிலிருந்து எனக்கும் உனக்கும் சிலபல படிப்பினைகள் கிடைத்தன உத்தண்டு!”

“என்ன படிப்பினை?”

“ஒன்று-இவன் எப்படா சாவான் என சொந்தபந்தம் ஏங்கும் அளவுக்கு படுத்தபடுக்கையாய் நீண்டகாலம் இருக்கக்கூடாது. நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் போதே தூக்கத்தில் அமைதியாக உயிர் பிரிய வேண்டும். விபத்து - கொலை - தற்கொலைகளில் நம் உயிர் பிரியக்கூடாது!”

“இரண்டாவது படிப்பினை?”

“நாம் இறந்தோம் என்றால் நமது சொந்தபந்தமும் உடன் பணி புரிவோரும் ‘நல்லதொரு ஆத்மா மரித்துவிட்டது!’ –எனக்கூறி நமக்காக இரண்டு சொட்டுக்கண்ணீர் விடவேண்டும். இதுவரை நல்லவனாகவே வாழ்ந்து வந்திருக்கிறோம் என நம்புகிறேன். மேலும் நாம் நன்மைகளை நோக்கி நகர ஆண்டவன் அருள்புரிவானாக!” - காரை நிறுத்தி முஸ்தபாவை இறக்கிவிட்டான் உத்தண்டராமன்.

பின் தன்னுடைய வீட்டுக்கு வந்து தீட்டு நீங்க குளித்தான்.

தோட்டத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தான் அவன் மகன். இறந்த சிட்டுக்குருவியை அதனில் இட்டு மூடினான். இறந்த சிட்டுக்குருவிக்காக அவனது கண்கள் கண்ணீர் சொரிந்தன. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காக்கை, குருவி எங்கள் சாதி எனும் மனிதாபிமான துக்கம் இது!