தொடர்கள்
ஆன்மீகம்
வேண்டியதை வழங்கிடும் செல்லப்பிராட்டி பரப்பிரம்ம சக்தி ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை! - ஆரூர் சுந்தரசேகர்.

20201130224733750.jpeg

மூன்று சக்திகள் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம்தான், ஆதி பராசக்தி. இவரையே பரப்பிரம்ம சக்தி, பரம் பொருள் என்றெல்லாம் அழைக்கின்றனர். காலப் பிரம்மம் ஆகிய காலத்தின் சக்தி வடிவம் தான் பார்வதி. அர்த்தப் பிரம்மம் ஆகிய ஒளியின் சக்தி வடிவம் லெக்ஷ்மி. நாதப் பிரம்மம் ஆகிய ஒலியின் சக்தி வடிவம் சரஸ்வதி. இந்த மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம்தான் லலித்தை என்கின்ற ஆதிபராசக்தி.

இந்த முப்பெரும் சக்திகளை தனித்தனியாகவும், ஒரு சில இடங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், இந்த மூன்று சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி வட்டத்தில் உள்ள செல்லப்பிராட்டி என்ற சிற்றூரில் ஶ்ரீ அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகை அம்பாளாக அருள் பாலித்து வருகிறார்.

ரிஷ்ய சிருங்க மகா ரிஷி தமது தவ வலிமையால், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்கிற மூன்று சக்திகளையும் ஒருங்கிணைத்து உலகை காக்கும் அன்னையாகிய லலித்தையின் மூல ஒலிக் கோடுகளை கொண்டு உலகை இயக்கும் ஆதார சக்திகளை பன்னிரெண்டு அக்ஷரங்களாக யந்திர வடிவில் பிரதிஷ்டை செய்து கருவறையில் உள்ள கல்லில் பதித்து வழிப்பட்டார். இந்த யந்திரம் தான் இந்த ஆலயத்தின் மூலவர். பிற்காலத்தில் கீழே அம்பாள் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அம்பாள் வீரமும், செல்வமும், கல்வியும் தரும் பார்வதி, லெக்ஷ்மி, சரஸ்வதியாக மூன்று சக்திகளும் ஒரே சக்தியாக விளங்கி இங்கு பரப்பிரம்ம சக்தியாக தம்மை நாடி வந்து வணங்கும் பக்தர்கள் வேண்டியதை அள்ளி வழங்கி அருள் பாலித்து வருகிறார்.

20201130224831938.jpeg

ஸ்தல அமைப்பு:

ஐந்து நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கி ராஜகோபுர வாயில் உள்ள இக்கோயிலில், முன்மண்டபம், மகா மண்டபம், கருவறை மற்றும் ஒரு பிரகாரம் என அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் மூன்று திருவாயில்கள் உள்ளன. பிரகாரத்தில் பலி பீடம். சிம்ம வாகனம் ஆகியவை அமைந்துள்ளது. பிரகாரத்தில் சிவ சக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி உள்ளனர்.

கருவறையில் மூலவரான கற்பலகை, அலங்காரத்துடன் ஒரு பீடத்தின் மேல் தரிசனம் தருகிறது. இதன் வடக்கு முகம் சற்று ஏறியும், தெற்கு முகம் சற்று இறங்கியும் காட்சி தருகிறது. கற்பலகையின் முன் உற்சவர் கோலத்தில் எட்டு திருக்கரங்களுடன் நீண்ட சூலாயுதம் தாங்கி, நாகக் குடையுடன் அமர்ந்த கோலத்தில் ஶ்ரீ லலிதா செல்வாம்பிகை கம்பீரமாகக் காட்சி தருகிறார். மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சூலினி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ எல்லை பிடாரி, ஸ்ரீ சப்த கன்னியர், ஸ்ரீ அம்மச்சார், ஸ்ரீ வனதுர்கா மற்றும் ஸ்ரீ வேடியப்பன் சந்நிதிகள் ஆலயத்தை சுற்றி ஓம் என்ற வடிவில் அமைந்து உள்ளன. இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தில் ரிஷ்ய சிருங்க மகா ரிஷியும் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றார்.

20201130224929335.jpeg

கற்பலகையின் சிறப்பு:

உருவ வழிபாட்டிற்கு முன்னர் ரிஷிகளும், மகான்களும் அட்சரங்கள் வடிவிலோ, சக்கரங்கள் வடிவிலோ வணங்கி வந்தனர். பின்னர் பல கோவில்களில் அம்பாளை சிலை வடிவமாக பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால், இங்கு மூலவராக வணங்கப்படும் அம்பாள் கற்பலகை வடிவில் இருக்கிறார்.

இந்த கற்பலகை நான்கு அடி, அகலமும், ஆறு அடி உயரமும், செவ்வக வடிவம் கொண்டது. கற்பலகையில் பன்னிரெண்டு சதுரக்கட்டங்கள் உள்ளன. இந்தக் கட்டங்களைச் சுற்றி, உலக நாயகியான ஆதிபராசக்தியின் பீசாட்சர மந்திரத்தின் சூட்சும எழுத்துக்கள் உள்ளன. வலது மேல் பக்கத்தில் சூரியனும், இடது மேல் பக்கத்தில், சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக முப்பெரும் தேவியரின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அம்மனின் திருவுருவம் திரிசூலம் வடிவில் உள்ளது. இங்கு உருவ வழிபாடு கருதி கற்பலைகக்கு கீழே மூன்று அடி உயரத்தில் அம்பாள் சிலை வைத்துள்ளனர்.

அம்மனின் திருஉருவம்:

இத்தல அம்பாளுக்கு எட்டுக்கரங்கள், நெற்றியில் பிறைச்சந்திரன், ஐந்துதலை நாகம், சூலம் ஆகியவற்றுடன், இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு தாமரை பீடத்தில் சாந்த சொரூபிணியாக அமர்ந்துள்ளார். வலது திருக்கரம் பக்தர்களை காக்கும் படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது. மற்ற ஆறு கரங்களில் பார்வதிக்குரிய பாசம், அங்குசம், லெக்ஷ்மிக்குரிய சங்கு, சக்கரம், சரஸ்வதிக்குரிய கமண்டலம், அக்ஷயமாலை ஆகியவை உள்ளன.

ஸ்தல வரலாறு:

இந்த ஸ்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இராமாயண காலத்தில் (திரேதாயுகம்) இராமபிரானது அவதாரத்துக்குக் காரணமான புத்திர காமேஷ்டி யாகத்தை, தசரத சக்கரவர்த்திக்கு செய்து கொடுத்த ரிஷ்ய சிருங்கர் என்ற முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம். இராமன் சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக இத்தலத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களும் தச மகா வித்யா யாகங்கள் செய்து வழிப்பட்டு இராவணனை வென்றார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
ஆதிசங்கரர் காஞ்சிபுரம் செல்லும் வழி தெரியாத நிலையில் ஒரு இரவு வேளையில் இத்தலத்தில் தங்கிச் சென்றிருப்பதாகவும் அப்போது அம்பாள் இவருக்கு இங்கே காட்சி கொடுத்திருக்கிறார் என்றும் வரலாறு கூறுகின்றது.

15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சியை ஆட்சி செய்த விஜய நகரப் பேரரசு மன்னர் தீராத நோயால் அவதிப்பட்டு பலவித சிகிச்சை செய்தும் குணமாகாததால் இந்த கோயிலுக்கு வந்து ஶ்ரீ லலிதா செல்வாம்பிகை அம்பாளை வழிபட்டதால் மன்னரின் வியாதி பூரணமாக குணமானது என்று தொல்லியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

செஞ்சியை ஆண்டு வந்த தேசிங்குராஜா போருக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்து அம்பாளை வணங்கிவிட்டு போருக்கு செல்வது வழக்கமாக கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்தல பெருமை:

“புத்திர காமேஷ்டி யாகம் நடத்திய ரிஷ்யசிருங்கர் பிரதிஷ்டை செய்த யந்திரம் இக் கோயிலில் உள்ளதால், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் இராவணனை வெல்ல இராமன் வழிபட்டதால், இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் தீர்க்கவே முடியாத எந்தப் பிரச்னைக்கும் தீர்வு வேண்டி, பிரார்த்தனை செய்து கொண்டால் குறித்த காலத்துக்குள் அம்பாள் அதை நிறைவேற்றி வைப்பார்.

திருமணம் ஆகாதவர்கள் பௌர்ணமி நாட்களில் இந்த அம்பாளுக்கு பன்னிரெண்டு நெய்தீபங்கள் ஏற்றி கல்யாணமாலை சாற்றினால் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் தம்பதிகளாக வந்து அம்பாளை வணங்கி செல்கின்றனர். மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பௌர்ணமி நாட்களில் நடக்கும் யாகத்தில் கலந்து கொண்டால், தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

கோயில் திருவிழாக்கள்:

வாரந்தோரும் வெள்ளிக்கிழமை விரதம், மாதந்தோரும் பெளர்ணமி விரதம் முக்கியமானவை. இங்கு நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்பாளை வழிபடுவது மிகவும்சிறப்பானது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை
மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை
திறந்திருக்கும்

மேலும் விபரங்களுக்கு:
அறங்காவலர்: திரு. இராம கன்னியப்பன் -
அலைபேசி எண் : +91 8056302234 / + 91 9444067172

கோயிலுக்கு செல்லும் வழி:

திண்டிவனத்திலுருந்து 30 கி.மீ. தொலைவிலும், மேல்மலையனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு செல்ல பஸ் வசதி உண்டு.
செல்லப்பிராட்டி கூட்ரோடு நிறுத்தத்தில் இறங்கி அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.
செஞ்சியில் இருந்து ஆட்டோக்களில் செல்லும் வசதியும் உள்ளது.

வேண்டியதை அள்ளி வழங்கிடும் யந்திர வடிவில் இருக்கும் ஶ்ரீ லலிதா செல்வாம்பிகையின் திருப்பாதங்களை பணிவோம்! நற்பலன்களைப் பெறுவோம்!!