தொடர்கள்
பொது
" கடந்து போன 2020..... அப்படி..! பிறந்த 2021.. எப்படி?" - ஸ்வேதா அப்புதாஸ்.

கடந்த வருடம் 2020 பிறந்த போது, ஆன்மிகம்..ஜோதிடம் என்று எல்லோரும் சொன்னது, அருமையான வருடம் என்று! எல்லாவற்றையும் கேட்ட மக்கள், உண்மையில் சூப்பரான வருடம் என்று தான் ஜனவரி மாதத்தினை நினைத்தனர். அந்த மாதம் நல்லபடியாக விடைபெற்றுக் கொண்டிருந்த போதுதாம் விபரீதம் முளைத்தது!

20201130214846907.jpg

எங்கோ சீனாவில் ஒரு வைரஸ் உருவாகியுள்ளதாம் என்ற பேச்சு பிப்ரவரி மாதம் அடிபட... அதற்குள் கேரளாவில் அந்த கொரோனா வைரஸ் நுழைந்தே விட்டது. அதிர்ச்சித் தகவல்கள் மேலும் வரத் தொடங்க... மார்ச் மாதம் கோவிட் வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க, மத்திய அரசு நாடு மூவதிலும் லாக் டவுனை அறிவித்தது..... நாம் எல்லாம் வீட்டுக்குள் முடங்க...அவ்வளவு ஏன், உலகமே வீடுகள் எனும் கூட்டுக்குள் முடங்கிப் போனது...

20201130215201596.jpg
நமக்கு தொற்று வராது என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டு..... நமக்கு தெரிந்த முகங்கள்.... பிரபலங்கள்.. உறவுகள் பலர் இறந்து போனது, கடந்த வருடத்தின் அழியா கருப்புக் கரை... சைலன்ட் கில்லர் போல உலக மனித வாழக்கையை சின்னாபின்னமாக்கி விட்டது இந்த கொரோனா!...

20201130215648875.jpg
உலக அரங்கில் அரசியல்வாதிகள் தான் இந்த தொற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, அரசியல் சதுரங்கத்தை சமூக இடைவெளி கூட இல்லாமல் நடத்திக் கொண்டிருந்த போது... வேடிக்கை பார்த்த நமக்கு வேதனை தான் மிச்சம்...!

2020113022035319.jpg

நம் தமிழக அரசியல் களத்தில்... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இவர்களின் தேர்தல் விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது.
லாக் டவுன் செய்த அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், பள்ளிக்கூடங்கள் தான் திறக்கமுடியவில்லை....

என்ன ஆச்சு..?

கொரோனா தொற்று, குழந்தைகளுக்கு அதிகமாக பரவி ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்.. அப்படியே ஒரு வருடம் மறைந்து விட்டது.... அடுத்த புது வருடம் பிறந்துள்ளது.... கொரோனா மறைந்ததா என்றால் புதிய உருவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்ற பயம் உலகை ஆட்கொண்டுள்ளது...

20201130220708543.jpg
இந்நிலையில்...கடந்து போன வருடம் எப்படி இருந்தது..... புதிய 2021 ஆம் வருடம் எப்படி இருக்கும் என்பது பற்றி முக்கிய பிரமுகர்களிடம் கேட்டோம்.....

ஊட்டி இந்து நகர், லூர்து அன்னை ஆலய பங்கு குரு பெனடிக்ட் அவர்கள்:

20201130220836395.jpg
“கடந்த 2020 ஆம் வருடம், பல புதிய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது... கொரோனா என்ற தொற்று, நம்மை முடக்கிப் போட்டிருந்தாலும் வேதனை, துக்கம், இரக்கம்... என்பதை உணரச் செய்துள்ளது. கடவுளிடம் அதிகமாக நெருங்க வைத்து விட்டது... நான் அதிக நேரம் ஜெபிப்பதில் நேரத்தை செலவிட்டேன்... ஏழைகளின் மேல் பரிவு ஏற்பட்டது இந்த கொரோனவால் தான்.

அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதார - நகராட்சி பணியாளர்களின் மேல் அதிக மதிப்பு கூடியது. நிறைய குடும்பங்கள் ஒன்றாக பல மாதங்கள் கூடி வாழ்ந்ததை கண்ணால் பார்க்க முடிந்தது. குருவாகிய எங்களுக்கு மக்கள் வருகை இல்லாமல் ஆலயங்கள் வெறிச்சோடி இருந்ததை பார்த்து கண்கள் கலங்கின.

20201130221115800.jpg

நாங்கள் குருக்கள் மட்டும் திருப்பலி நடத்தியதில் ஒரு வெறுமை இருந்தது.... பின்னர் தளர்வுகள் அறிவித்த பின்... ஒழுக்கத்துடன் ஆலய வழிபாடு நடக்கிறது. அதே சமயம், குழந்தைகளும், வயோதிகர்களும் இல்லாத ஆலயத்தில் ஒரு வெறுமை இருக்கத்தான் செய்கிறது. பொருளாதார சீரழிவை பார்க்க முடிகிறது. அரசியல் எண்ணங்களை கணிக்க முடிகிறது..... இப்படி கடந்த வருடம் கடந்து போய், புது வருடம் பிறந்துள்ளது கூட ஆச்சிரியமாக தான் உள்ளது... பாரம்பரிய கிறிஸ்துமஸ்... நியூ இயர் இரவு திருப்பலிகள் இல்லை என்பது வேதனை அளித்தாலும், அரசின் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி ஆகவேண்டும்...

இந்த புது வருடம் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று தான் நினைக்கிறேன். மக்கள் ஒவ்வொருவரும் நேசியுங்கள்.. சமூக இடைவெளி தேவை, ஆனால் அது உள்ளத்தால் இருக்கக்கூடாது.. மற்றவர்களை மதித்து நடக்கவேண்டும்... மீண்டும் ஒரு தொற்று உருவாகியுள்ளது என்கிறார்கள்... இறைவன் நம்மை காப்பார். நாட்டின் விவசாயிகள் காப்பாற்ற படவேண்டும், அவர்கள் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதை மறக்கக்கூடாது.... தொடர்ந்து ஜெபிப்போம்.. நல்லவை இந்த வருடத்தில் நடக்கட்டும்”.... என்று முடித்தார்.

நீலகிரி மாவட்ட துணை ஆட்சியாளர் மோனிகா ராணா ஐ.ஏ.எஸ். கூறும் போது...

20201130222043562.jpg
“கடந்த 2020 கற்று கொடுத்த படங்கள் ஏராளம்.. அதில் எந்த புது வருடமும் எந்த உத்திரவாதத்தையும் அளிப்பது இல்லை. அதே போல, எந்த வாக்குறுதிகளையும் கொடுப்பது இல்லை என்பது தான் உண்மை. அதே வேளையில், புது வருடத்தில் ஏற்படும் வளர்ச்சிகள், முன்னேற்றங்கள், உடல்நலம் மற்றும் செழிப்பை தான் பார்க்கமுடியும்.

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது பல சாவல்களை தாண்டி வரக்கூடிய காலம். நம் முன் இருக்கும் சவால்களை எதிர் கொள்ள நாம் உயர்ந்து, நிமிர்ந்து நின்று எதிர் கொள்ள பழகிக் கொள்வது தான் நல்லது. அதில் இருந்து விடுபடுவோமோ என்பது சொல்லமுடியாத ஒன்று.

20201130222656431.jpg
2020 ஆம் வருடத்தில் இருந்து 2021 புதிய வருடத்தினுள் நுழைந்துள்ளோம். இத்தருணத்தில் நம் தேச பிதா மஹாத்மா காந்தியின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றது. ‘நீங்கள் நினைக்கும் மாற்றம் உலக அளவில் மாறுவதை பாருங்கள்’ என்பதுதான் காந்தியின் வாசகம். இந்த கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர, நாம் ஒவ்வொருவரும் தனி ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, எதாவது தொற்று அறிகுறி இருந்தால் தனிமை படுத்திக்கொள்வதெல்லாம் கடமையாக செய்யவேண்டும்.

20201130222946514.jpg
நம்மை உயர்த்திக் கொள்ள நிறைய கற்றுக் கொள்ள வேண்டும், அப்பொழுது தான் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும். நம் நம்பிக்கை, பிராத்தனைகள், வாழ்த்துக்கள் எல்லாமே நம் அர்ப்பணிப்பு , நம்பிக்கை வாயிலாக தான்.. கொரோனா மட்டுமல்ல அனைத்து தீய சக்திகளையும் இந்த சமுதாயத்திலிருந்து தூக்கிப் போட நம்மால் இயலும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...” என்று முடித்தார்.

இயற்கை ஆர்வலர் சிவதாஸ் நம்மிடம் பேசினார்...

20201130223104972.jpg
“புது வருடம் எப்படியுள்ளது என்று பார்க்கும் போது டிசம்பர் 31 ஆம் தேதி 2020 ஆம் வருடத்தின் கடைசி நாள், ஊட்டி மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்துள்ளது. இது பெரிய இயற்கை மாற்றம்...

20201130223231136.jpg

இந்த நாட்களில் பெரிய அளவில் உரை பனி கொட்டிக் கிடக்கும்.. கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பிறப்பை கொண்டாட ஆலயத்திற்கு கடும் குளிரில் மக்கள் சென்று இரவு வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்... அந்த குளிர் இரவு வழிபாடு இல்லாமல் போய் விட்டது. சாலை ஓரங்களில் நெருப்பு முட்டி குளிர் காய்ந்த காலங்கள் காணாமல் போய்விட்டதா?!.. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் தொடர்கிறது... காரணம் இயற்கைக்கு புறம்பாக நாம் சென்றதின் விளைவு தான்...

20201130230229495.jpg

புதிய மாற்றம் நிகழும். அதை எதிர் கொள்ள, புதிய மன திடம், சக்தி தேவை. 2021 புத்தாண்டு துவங்கி விட்டது, பல சவால்களை சந்திக்கும் நேரம் என்று தான் நான் நினைக்கிறேன். காரணம் - இயற்கை மாறிவிட்டது...கால நிலை மாற்றத்தை யாராலும் மாற்ற முடியாது...

20201130230628664.jpg

அதிக மழை சேதம், அடிக்கடி புயல்... அதற்கு ஒரு பெயர் வேறு... கடந்த வருடம், பனி பொழிவு முழுவதுமாக இல்லை. நீலகிரி உயிர்சூழல் மண்டலம் பாதிக்கப்படுவது உறுதி. உறை பனி தாக்கம் இருந்தால் தான் பூச்சிகள், கிருமிகள் அழியும். காட்டில் இயற்கையாக விதைகள் மறு உற்பத்தியாகும். காடுகள் வளர இது உதவும். தற்போது அது தடைபட்டுவிட்டது. இதனால் பாதிப்பு தான் அதிகம். மூலிகை செடிகளின் வளர்ச்சி பாதிப்பு... என்று நிறைய பிரச்சனைகளை சந்திக்க நாம் நம்மை தயார் படுத்திக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை - இந்த புது வருடத்தில்” என்று முடித்தார் வருத்தத்துடன்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலம் கூறும் போது...

20201130231947269.jpg
“2020 ஆம் வருடம் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்தோம். மாணவர்களின் கல்வி முழுமையாக கேள்விக்குறியாகி விட்டது. ஆன் லைன் வகுப்பு எல்லாம் ஒத்து வராது. குறிப்பாக கணித பாடத்திற்கு மிகவும் கஷ்டமான வேலை. இந்த கல்வி ஆண்டை, ஸீரோ ஆண்டாக அறிவிக்க இருக்கிறார் அமைச்சர். அது முடியாது என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்...

20201130232106320.jpg

அதனால் தான் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பொங்கலுக்கு பின் சிறப்பு வகுப்புகளை நடத்தி, பயிற்சி கொடுக்க ஆசிரியர்கள் தயார்... அரசு தான் முடிவு செய்ய வேண்டும். புது வருடம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் பிரார்த்தனை.... இந்த இருண்ட கஷ்டமான காலம் மறைந்து, ஒளிமயமான காலம் பிறக்கவேண்டும்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

நீலகிரி ஹோட்டல் சங்க செயலர் சந்திரசேகரை தொடர்பு கொண்டு பேசினோம்...

20201130232214824.jpg
“இந்த வருடம் நியூ இயர் இரவு விருந்து நிகழ்ச்சி எதுவுமே இல்லை... கேம்ப் ஃபையர் கூட இல்லை, ஒரு விதத்தில் நல்லது தான். இரண்டாவது கொரோனா தாக்கம் வருகிறது என்று கூறுகிறார்கள், எச்சரிக்கை அவசியம். கடந்த வருடம் ஊட்டி சீசன் முழுவதும் அப்செட். இந்த புதிய வருடத்தில் இயல்பு நிலை வந்தால் நல்லது. தளர்வுகள் அறிவித்த பின், சுற்றுலாக்கள் கூட்டம் சற்று வந்தது. ஆனால் டிசம்பர் 31 ஆம் தேதி குறைந்து விட்டது. வெளியூரில் இருந்து வருபவர்கள் மாஸ்க் போடுவது இல்லை, சொன்னால் கோபப்படுகிறார்கள். அவருக்கும், அனைவருக்கும் தானே நல்லது...

2020113023231340.jpg

அரசின் அறிவுரைகளை பின்பற்றினாலே, தொற்றை பின்னுக்கு தள்ளி நன்றாக இருக்கலாம்... ரொம்பவே நார்மலாக தான் இருக்கிறது இன்றைய நிலை.. ஆனால் இரண்டாம் அலையை யோசித்தால், பயமாக இருக்கிறது. எங்க ஹோட்டல் பிசினெஸ், சுற்றுலா கைடுகள், வியாபாரிகள், குதிரை சவாரி தொழிலாளிகள் என்று ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் சிறப்பாக அமைய வேண்டும். மற்ற ஒரு 2020 வேண்டாம் என்று தான் தோன்றுகிறது” என்று முடித்தார்.

கடந்த வருடம் வழக்கமான உற்சாகத்துடன் தான் புத்தாண்டு பிறந்தது. யாருக்கும் தெரியாமல், நம்மை தன் வசம் இழுத்து வைத்து கொண்டது கொரோனா என்ற வைரஸ். எத்தனையோ நல்ல ஒழுக்க விஷயங்களை கற்றுக் கொடுத்த கொரோனா, பல குடும்பங்களை ஆழந்த சோகத்தில் தள்ளி விட்டது... நன்றாக என்னிடம் பேசின நண்பன், கொரோனா தொற்றில் இறந்து போனார் என்ற அதிர்ச்சித் தகவல் பலர் வாழ்விலும் அரங்கேறியது. இப்படி பலருக்கும் நிறைய கவலைகளுடன் முடிந்ததாக 2020 ஆம் வருடம், என்றும் நினைவில் இருக்கலாம்!

20201130232717285.jpg

எனினும், புதிய 2021 ஆம் வருடம் நல்ல மாற்றத்தையும், நிம்மதியையும் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனும் ஆதர்ச கனவுடன் புதிய வருடத்தில் பயணிக்க நம்மை தயார் படுத்திக் கொண்டு, புதிய தெம்புடன் நாம் முன்னேறுவோம்! நம்பிக்கையே நம்மை இன்னலின்றி வாழச் செய்யும்!