தொடர்கள்
தொடர்கள்
குறுந்தொகை துளிகள் - 1 - மரியா சிவானந்தம்

20210001184840449.jpg

என் தனிமைக்குத் துணையாக வா...

வணக்கம்

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரு பெரு காப்பியங்களை தொடராக எழுதி ‘விகடகவி’ வாசகர்களுக்கு இலக்கிய விருந்து சமைத்த மரியா சிவானந்தம் இப்போது குறுந்தொகை துளிகளுடன் உங்களைச் சந்திக்கிறார். தமிழ் இலக்கியம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்துத் தொடுக்கும் அவரது இனிய பணி தொடர்கிறது, உங்கள் ஆதரவுடன்...

இனி குறுந்தொகை...

பதினெண்மேற்கணக்கைச் சேர்ந்த எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகையும் ஒன்று. குறைந்த அளவாக நான்கு அடியும், அதிகமாக எட்டு அடியும் கொண்ட இந்நூல் ஓர் அகநூல். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், மற்றும் பாணர் முதலான 206 புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டிருக்கிறது.

குறுந்தொகை ஓர் அகநூலாக இருந்த போதும், மக்களின் வாழ்க்கை நெறியை படம் பிடித்துக் காட்டுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்குரிய பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.

இன்று நாம் காணும் பாடல் நெய்தல் திணைக்குரிய பாடல்...

நெய்தல் எனப்படும் நிலம் - கடலும், கடல் சார்ந்த பகுதியாகும். இந்த நிலத்துக்குரிய ஒழுக்கம் தலைவன், தலைவி இருவரும் பிரிந்திருக்கும் காலத்தில், பிரிவின் துன்பம் தாங்காமல் வருந்தும் நிலையில் இருப்பது.

காதலனைப் பிரிந்து வாழும் காதலி, தன் தோழியிடம், ‘இங்கு என் வீட்டில் அப்பா, அம்மா யாரும் இல்லை, அவன் வர தகுந்த நேரம் இதுதான். போய் அவனிடம் சொல்லி, அவனை உடனே வீட்டுக்கு வரச் சொல். இது போன்ற தனிமை அமைவது கடினம்’ என்று தூது சொல்லி அனுப்பும் பாடல்.

தலைவி தன் தோழியிடம் “தோழி! என் தந்தை சுறா மீனால் தாக்கப்பட்டு, இவ்வளவு நாள் காயத்துடன் இருந்தார். இப்போது அவர் புண் ஆறி, கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டார். என் தாயோ, உப்பை விற்று விட்டு அதற்கு பதிலாக வெண்ணெய் வாங்கி வர, உப்பை விளைவிக்கும் உப்பளம் சென்றுள்ளாள். எனவே வீட்டில் யாரும் இல்லை. இருவரும் நெடுந்தொலைவு சென்றுள்ளதால், திருப்பி வர நெடு நேரமாகும். எனவே ‘நீர் இப்போது வந்தால், என் தலைவியைப் பார்ப்பது எளிதாகும்’ என்று அவனிடம் சொல். இது என் விருப்பம்’ என்று கூறுகிறாள். கூடவே ‘நெடுதொலைவு என்றும் பாராமல், விரைவாக சென்று இதைச் சொல்ல வருந்தாத தோழியை நான் பெற்றுள்ளது எத்தனை நன்று” என்று தோழியை புகழ்ந்து, தோழியின் மனதை குளிர்வித்தும் அனுப்புகிறாள் தலைவி.

சுறா மீன் தாக்கியதால் தந்தை நீண்ட நாட்களாக வீட்டில் இருந்திருக்க வேண்டும். தாயும் உடன் இருக்க, ‘வீட்டுக் காவலில் இருந்த பெண், தந்தை தாய் வெளியே சென்று திரும்பி வர நேரமாகும் என்பதை உணர்கிறாள். அந்த தனிமைக்கு இனிமை சேர்க்க தன் காதலன் வர வேண்டும் என்ற தவிப்புடன் தோழியை தூது அனுப்பி வைக்கும் அழகான பாடல் இது.. பாடலின் ஆசிரியர் கல்லாடனார் என்னும் சங்க காலப் புலவர்.

இதோ அந்த பாடல்...

சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் இதனால்
பனியிரும் மரப்பிற் சேர்ப்பற்
கினி வரி னெளியள் என்னும் தூதே.(கல்லாடனார் )

(குறுந்தொகை -269 )

- தொடரும்