ஒவ்வொரு நாளும் நாம் நிறைய பேரை புதிது புதிதாய் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மை கடந்து செல்பவர்கள் ஏராளம். ஆனால், எல்லாருமே நம் மனதில் பதிவதில்லை. சிலர் மட்டுமே நம் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். அவ்வாறு உட்கார்ந்த ஒரு சிலரைப் பற்றியது தான் இந்த பதிவு . தொடர்ந்து இதுபோன்ற சில வாழும், வாழ்ந்து மறைந்த அந்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றி...
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வருவது ஒரு பெண்மணி. தற்போது 74 வயதாகும் இவர் போகுமிடமெல்லாம், சேவை என்ற ஒன்றையே தன் மூச்சாகக் கொண்டவர். ஆனால், அதற்காக எந்த ஒரு விளம்பரமும் செய்து கொள்ளாதவர். இந்தப் பெண்மணியை தேடி பொறுப்புக்கள் வரும். குறிப்பாக கல்யாண வீடுகள் மற்றும் துக்க வீடுகளிலிருந்து! கல்யாண வீடுகளில்... இவர் போய் இறங்கியதுமே, முக்கியமான பொருட்கள் உள்ள ஸ்டோர் ரூம் அல்லது லாக்கர் சாவி ஆகியவை தானாகவே இவர் கைக்கு வந்துவிடும். இவர் இரவு அதிரடியாக வேலை பார்ப்பார். மற்ற எல்லோரும் சீட்டுக் கச்சேரி அரட்டை என்று இருக்கும்போது, குறிப்பாக நாளை காலை சடங்குகளுக்கு வேண்டிய விஷயங்களை எடுத்து வைப்பது முதல் ஒவ்வொருவருக்கும் கட்டளை இடுவது போல், யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லிவிடுவார். திருமண சடங்குகள் குறைவின்றி நடக்க, கூடவே இருந்து வழிகாட்டுவார். இதில் என்ன ஆச்சரியம் என்றால்.. கணவனை இழந்து அவர் கைம்பெண் கோலம் பூண்டவர். இது தெரிந்தே அவரிடம் சுற்றமும், நட்பும் அனைத்து பொறுப்புகளையும் கொடுப்பதுதான் அசத்தல். கல்யாண வேலைகளை நன்கு தெரிந்தவர்களும் கூட தங்கள் வீட்டு நிகழ்வுகளில் அவரை முன் நிறுத்துவர். இது அந்த அம்மாள் காட்டும் அளப்பறிய அன்புக்கு அவர்கள் காட்டும் பிரதியுபகாரம்!
இவர் பார்த்த பிரசவங்கள், நான் அறிந்தவரை மட்டுமே 200க்கு மேல் இருக்கும். அந்த குழந்தைகள் இன்று வளர்ந்து திருமணமாகி அவர்களுடைய குழந்தையின் பிரசவங்களையும் இவர் கூட நின்று கவனித்திருக்கிறார். அந்த குழந்தைகளுக்கு வரும் உடல் உபாதைகளுக்கு உடனே கைவைத்தியம் செய்து, குணமாக்கிவிடும் அதிசய மருத்துவரும் கூட. இவ்வளவு இருந்தும் இவரிடம் ஒரு வினோதமான பழக்கம் உண்டு... “பாட்டி” என்று இவரை அழைத்தால் கோபம் வந்துவிடும். நிச்சயமாக நீங்கள் பார்க்கும்போது இந்த வயதிலும் தலைநரைக்காத இவரது அதிசய அமைப்பு, (நல்ல மனது தான் காரணமோ என்னமோ..) நேரில் பார்த்தால் 60 வயது மட்டுமே மதிக்கத்தக்கவர். உண்மையிலேயே 74 வயதாகும் இவர் இன்னும் தனது சேவையை எல்லா பக்கமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
முக்கியமாக துக்க வீடுகளில் அவர்கள் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கும் நிலையில், உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டியவைகளை சொல்லி.. இறந்த உடலை எந்த திசையில் வைக்க வேண்டும், மற்ற சடங்குகள் எப்படி செய்ய வேண்டும் என்பது போன்று எல்லா குறிப்புகளையும் முன்னின்று சொல்வார். அதை செய்வதையும் மேற்பார்வை பார்ப்பார். இறந்தது பெண்ணானால் அதுவும் சுமங்கலிப் பெண் என்றால், அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை தவறாமல் முன்னின்று செய்வார். அந்த வீட்டு துக்கத்தில் சேர்ந்து அவர் அழுவது கண்டு நமக்கு மனது கலங்கிவிடும். அந்த மனம் தான் இவரை இன்னும் இன்னும் நிறைய சேவைகள் செய்யத் தூண்டுகிறது. நிறைய பேரையும் இவரை நோக்கி வரவழைக்கிறது என்று நினைக்கிறேன். தனது முதிய வயதிலும் இன்றும் இளவட்டங்களுக்கு ஈடாக தன் கடமையை செய்வதில் இவருக்கு நிகர் இவரே தான்.
அம்மையார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருடைய புகைப்படமும் பெயரும் தவிர்க்கப்படுகிறது. என்றுமே புகழை விரும்பாத இவர் குடத்திலிட்ட விளக்காக இருக்க விரும்புவது தான் இந்த உலகில் இன்னும் காணக்கிடைக்காத அதிசயம்!
Leave a comment
Upload