எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட உண்மைநிலை…
எழுத்துக்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள்….
தூரிகைக்கு ஒட்டாத வண்ணங்கள்…
ஆம்.., மறக்க முடியாத நினைவுகளுடன் 2020..
உண்மைதான்…. எப்போதும் போன்ற புத்தாண்டு எதிர்பார்ப்புக்களுடனும்… கொண்டாட்டங்களுடனும்…புது வருட ஆரவாரங்களுடனும்தான் 2020 பிறந்தது.
அண்ணாச்சிக்கடை முதல்…. பெரிய பெரிய மால்களில் அமைந்த கடைகள் வரை கொடுத்த “அடித்து நொறுக்கப்பட்ட… அதிரடி ஆஃபர்களுடன்…” மிகப் பெரிய விளம்பரங்களுடன் வந்த வீட்டு உபயோகப் பொருட்கள் முதல்….
“இப்போ போனா… எப்பவும் இல்ல….”, “போனா வராது… பொழுதானா தாங்காது…” எங்கிற ரேஞ்சுக்கு வீடுகள், மனைகள், கார்கள் வாங்கும் விளம்பரங்கள் வரை வழக்கமான எல்லா நடைமுறைகளுடனும்தான் 2020 ஜனவரி ஒன்றாம் தேதி விடிந்தது…
கைக்குள் அடங்காத சில ஆடம்பரப் பொருட்களை தவணையில் வாங்கிய பலருக்கு அப்போது தெரியாது…. இந்த வருடம் பல வகையில் யோசிக்க வைக்கப்போகிறது…. வாழ்க்கையைப் புரட்டிப் போடப்போகிறது என்று.
கொரோனா வைரஸ் வடிவத்தில் வந்த கொடுமையான காட்டுத்தீ…. பலரை வாழ்க்கையின் விளிம்புக்குத் தள்ளியது. சிலரை மேலுலகத்துக்கு அனுப்பியது. வேலை போனால் என்ன ஆகும் என்ற சூழ்நிலையைக் கனவிலும் யோசிக்காத அப்பாவிகளுக்கு…. அந்தக் கொடும் தண்டனையைக் கொடுத்தது. சம்பளத்தைக் கணக்கிட்டு செலவழித்து வந்தவர்களுக்கு பாதி சம்பளம் என்ற சோதனையைக் கொடுத்து தூக்கமில்லாமல் செய்தது.
தப்பிப்பிழைத்தவர்கள் சிலரே...
சரி…இப்போதுமட்டும் என்ன…? கொரோனா பயம் போய்விட்டதா…? வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதா…? இல்லையே…போதாக்குறைக்கு அம்பி, ரெமோ, அந்நியன்…. என்று அதே வைரஸ், பல வடிவங்களில் ஒரு நாட்டுக்கு ஒரு முகமூடி என்று உலா வருவதாக வேறு கேள்விப் படுகிறோமே…. ஏதோ சீன் மாறிவிட்டது போல எழுதுவது கொஞ்சம் ஓவராக இல்லையா…? என்று கேட்பது புரிகிறது.
உண்மைதான்…. நாம் எஸ்பிபியைப் பறிகொடுத்ததை மறக்கமுடியுமா…? எத்தனையோ பேர்…. தெரிந்தும் தெரியாமலும்….
ஹும்…. ஆனாலும், மாற்றம் ஒன்றுதானே மாறாதது.
இதோ… 2021 பிறந்திருக்கிறது…எதுவுமே தெரியாத குழந்தையாய்.. புது ரோஜாவாய்…..
போன வருடத்தின் கசப்பான நினைவுகளால், இந்த வருடத்தை வரவேற்க வேண்டாமே…
சில நேரங்களில், தவறு செய்தவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததாலேயே… தவறு செய்யாதவனும் தண்டனை அனுபவிப்பான்… அது போல…. 2020 ஐத் தொடர்ந்து வருவதாலேயே… பல கலாய்க்கும் மீம்ஸ்களுக்கு கதாநாயகனாகனாகவும்…
“ ம்…தோடா….அது போயிடுச்சு….இப்ப நீ என்ன பண்ணப்போற…?” என்று கேட்டு முளையிலேயே அதனைக் கிள்ள வேண்டாமே….
சரியோ…. தவறோ… ஆரம்பிக்கும்போதே முடிவினையும்…விளைவுகளையும் பேசாமல், பயணத்தைத் தொடருவோம்.
நம்பிக்கை என்பதுதான் எல்லோரையும் பிணைத்திருக்கும் கயிறு. தொழிலதிபருக்கும் அதுதான்… தொழிலாளிக்கும் அதுதான்….
சென்ற வருடத்தில்…. வெளிநாட்டை நம்பியிருந்த பல விஷயங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நிலை ஏற்பட்டதும் கொரோனாவால்தான். அதற்கு பாமரர்களுக்கும் புரியக்கூடிய, சிறிய… ஆனால், சிறப்பான எடுத்துக்காட்டு… போலீசாரே தையல்காரர்களாக மாறி, அவர்களுக்குத் தேவையான முகக் கவசத்தை தைத்துக் கொண்டது…
மருத்துவமனைகளே கிருமிநாசினிகளை தயாரித்து பயன்படுத்திக்கொண்டது….
அப்போதைய தேவை எதுவோ.. அதை தயாரித்து விற்க கடைக்காரார்கள் முனைந்தது என்று பலவற்றைச் சொல்லலாம். இணையத்தின் பயன்பாடு பல்வேறு வகைகளில் பெருகியது.
2021 ஒளித்து வைத்திருப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. மூடிய கைக்குள் இருப்பது என்ன… என்று ஆர்வமாய் யோசிக்கும் குழந்தையிடம்… கைகளைத் திறந்து காட்டிவிட்டால்… அந்த ஆர்வம் குறைந்துவிடுமல்லவா…?
நல்லதே நடக்கவேண்டும்…. நானிலம் செழிக்கவேண்டும்…
உடல்நலம் வளரவேண்டும்… ஊக்கம் மேலோங்க வேண்டும்…
கொடுமைகள் மறையவேண்டும்…. குடும்பமாய் வாழவேண்டும்…
நன்மைகள் பெருக வேண்டும்.. பழைய நிலை திரும்பவேண்டும்..
என்று இறைவனை வணங்கி… நம்பிக்கையுடன், பிறந்திருக்கும் புத்தாண்டை வரவேற்போம்…. நேர்மறை எண்ணங்கள் பெருகும்போது…. நல்ல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்.
பிறந்திருக்கும் புத்தாண்டு “புதுசு கண்ணா புதுசு….”
பழைய பாடத்தை நினைவில் வைப்போம்… புதிதாய் பயணிப்போம்…புதிதாய் சவால்கள் வந்தால் நிச்சயம் ஒரு கை பார்ப்போம்…!!!
விகடகவி வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Leave a comment
Upload