ஒடிசா மாநிலம், பார்கர் மாவட்டம், பாலுபாலி பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான் (64). ஓய்வுபெற்ற எஸ்பிஐ வங்கி ஊழியர். இவரது மகள் ஜோதிபிரபா, பிலாஸ்பூரில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார். இவரது மகன் ஜெய்ஜித், தற்போது புவனேஸ்வரில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.
ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான ஜெய்கிஷோர் பிரதானுக்கு சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. தனது கனவை மெய்ப்பிக்கும் வகையில், தனது மகள் ஜோதிபிரபாவை பல் மருத்துவர் படிப்பு படிக்க வைத்து வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜெய்கிஷோர் பிரதான் வங்கி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, தனது சிறுவயது கனவான மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகளிடம் ஜெய்கிஷோர் பிரதான் தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சாலை விபத்தில் ஜெய்கிஷோர் கால்களை இழந்துள்ளார்.
பி.எஸ்சி இயற்பியல் படிப்பை முடித்திருக்கும் ஜெய்கிஷோர் பிரதான், அடுத்த கட்டமாக மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வுக்கு தயாரானார். அதன்படி, சமீபத்தில் வெளியான ‘நீட்’ தேர்வு முடிவில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், அவருக்கு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான ‘ஸீட்’ கிடைத்தது.
இதனையடுத்து தனது 64-வது வயதில் வீர் சுரேந்திர சாய் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் (விம்சார்) மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மாணவராக கவுன்சிலிங் மூலம் ஜெய்கிஷோர் பிரதான் தேர்வாகியிருக்கிறார். .
இது குறித்து ஜெய்கிஷோர் பிரதான் கூறுகையில், ‘‘நீட் தேர்வுக்காக தினசரி 10 முதல் 12 மணி நேரம் படித்து வந்ததால், தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவு. மருத்துவர் படிப்பையும் நிச்சயம் வெற்றிகரமாகவே முடிப்பேன்!’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த் விடாமுயற்சி மாற்றுத் திறணாளி தன் லட்சியத்தில் வெற்றி பெறட்டும் என விகடகவி வாழ்த்துகிறது.
Leave a comment
Upload