ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
“இந்த உலகில் நாம் யாருமே பாவியாக இருக்க விரும்பவில்லை. ஆனால், நாம் நமக்காக தான் எல்லாம் செய்கிறோம், நாம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். பாவம் செய்ய யாருமே விரும்ப வில்லை. ஆனாலும் பாவிகள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.. அது ஏன்?” என்று அர்ஜுனன் கேட்கிறான்.
‘அதுதாண்டா அப்பா ஆசை’ என்று பகவான் கிருஷ்ணர் பதில் சொன்னார்.
“ஆசையினால் ஒன்றை அடைய முயல்கிறோம். எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்பதால், தர்ம - அதர்மங்களை புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேறி விட்டால், அத்தோடு திருப்தி உண்டாகிறதா என்றால் இல்லை.. அக்னியில் நெய்யை விட்டால் அது மேலும் பெரிதாக வளர்வது போல, ஒரு ஆசை பல ஆசைகளை உண்டாக்குகிறது.
சரி... ஆசை நிறைவேறா விட்டால் நல்லது என்று எடுத்துக் கொள்ளலாமா என்றால் அப்படியும் இல்லை... நிறைவேறாவிட்டால், நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் இருந்த ரப்பர் பந்து போல் நிறைவேறாத ஆசை, கோபமாக திரும்பி வந்து நம்மை பாவத்தில் தள்ளுகிறது” - ஆசைக்கு அடுத்தபடி இந்த குரோதத்தை தான், பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.
பாவம் செய்யாமல் இருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பது மட்டும்தான். அதை எப்படி செய்வது? நாம் காரியம் செய்யாமல் இருக்க முடியாது. உடம்பு காரியம் பண்ணாத போது கூட, மனது தொடர்ந்து செயலில் ஈடுபட்டுக் கொண்டே தான் இருக்கிறது. எதையாவது எண்ணிக்கொண்டே இருப்பதுதான் மனசின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றில், நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இடம் பெறுகின்றன. மனசின் மூலம் இப்போது நாம் நம்முடைய சொந்த ஆசை, அபிலாஷைகளை தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் ஆபத்தில் கொண்டுபோய் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் இனி காரியமே இல்லாமல் சும்மா இருந்து விடலாமா என்று பார்த்தால், மனுஷ்ய சுவாமிகளும் நம்மை அப்படி இருக்க விடமாட்டேன் என்கிறது.
சிந்தையை அடக்கி சும்மா இருப்பது அரிது என்று தாயுமானவர் சொல்லியிருக்கிறார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் சும்மா இருக்க மாட்டேன் என்கிறது. நேராக நிறுத்த முடியவில்லை, காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு மோட்சமே இல்லையா? இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லையா என்றால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
நமது சொந்தக் காரியங்களில் மட்டுமே கவனம் கொள்ளாமல், மற்றவர்களுக்கு பலன் தரக்கூடிய காரியங்களிலும் நாம் இறங்க வேண்டும். அப்படிப்பட்ட காரியங்களில் கவனம் செலுத்தும்போது, பாவம் குறைகிறது, புண்ணியம் ஏறுகிறது. இன்னும் சொல்லப்போனால் நாம் எந்தவித ஆசையும் இல்லாமல், காரியம் - பரோபகாரம் செய்ய பழக வேண்டும். ஆசை இல்லாமல் செய்வதுதான், புண்ணிய காரியம். நாம் இப்போது பல விதங்களில் பாவம் செய்கிறோம்... வாயால் புரளி பேசுவது, மனதினால் கெட்ட நினைவுகள் கொள்வது, பணத்தினால் செய்கிற பாவம் போன்றவை அவற்றில் அடங்கும்.
நாம் புண்ணியம் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். புண்ணியம் செய்ய வேண்டும் என்றால் பாவ செயல்களை விட்டுவிட்டு, பகவான் பெயரை சொல்லி நமது நேரத்தை செலவிடலாம். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளியே போகும்போதும், வேலை செய்யும் போதும் நாம் பகவான் நாமத்தை ஜெபித்துக் கொண்டே அந்த வேலைகளை செய்யலாம். மனசு என்பது கடவுளின் இடம். அதை நாம் குப்பைத்தொட்டி போலாக்கி இருக்கிறோம். அதனை சுத்தப்படுத்தி, அதற்குள் பகவானை அமர வைத்து, நாமும் அமைதியாக அமர்ந்து விட வேண்டும். தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். நம்மிடமுள்ள செல்வத்தை கொண்டு பகவானுக்கான காரியங்களில் ஈடுபட்டும், தர்ம காரியங்கள் செய்தும் புண்ணியம் சேர்க்க வேண்டும்.
பாவத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று இப்போது நாம் தவறில் ஈடுபடுவது, இரண்டாவது நாளைக்கு இதே தவற்றினை அடுத்தவர் செய்யத் தூண்டுவது. இது நம்மை பாதிக்கிறது. நாம் பாவத்தை குறைக்க வேண்டும்.
‘என்னிடம் சரணடைந்து விடு. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்’ என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். அதனால் நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்று சுற்றினாலும் அத்தனையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டுப்படும் கறுப்பு வாசனை. அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாகும். நடுவே, அவசரமும், ஆத்திரமும் வேண்டாம். அப்படி செய்வதால், சுற்று சிக்கலாகி முடிச்சு விழுந்துவிடும். பொறுமையாக பகவானை நம்பி நாம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் அவன் நமக்கு கை கொடுப்பான்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய சுகத்திலிருந்து நம் மனதை, பகவானிடம் திருப்ப தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப் பட்டவன் இந்திரிய சுகங்களுக்காக செய்கிற பாவங்களிலிருந்து அவனை மீட்பதற்காக தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். கோபத்தினால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். பரமாத்மாவை சேர்ந்திருப்பதால் நிரந்தரமான ஆனந்தம் கிட்டும்.
Leave a comment
Upload