“இதுதான், நாம சர்வீஸ்ல இருக்கும்போது சேர்ந்து, கொண்டாடப் போற கடைசி நியூ-இயர். ஏன்னா, நாம மூணு பேருமே, 2021, முடியும்போது வேலையிலிருந்து ரிட்டயர் ஆயிருப்போம். அதனால, இந்த டிசம்பர்-31ஆம் தேதி, மூணு பேரும், ஆஃபீஸுக்கு லீவு போட்டுட்டு, கிளம்பி, ‘குற்றாலம்’ போறோம். நான் என்னோட காரை எடுத்துட்டு வரேன்” என்றான், எங்களில் சீனியரான ‘வைத்தி’.
“குற்றாலத்திலே, எனக்கு தெரிஞ்ச, லாட்ஜ்ல, ரூம் புக் பண்ணிடறேன். வரவிருக்கும் நியூ-இயரை, குற்றாலத்திலே, தைலக்குளியலோட வரவேற்போம்,” என்றான், இன்னமும் திருமணம் செய்துகொள்ள...பெண் கிடைக்காமல் தவிக்கும் ‘பஞ்சு’.
“இஷ்டத்துக்கு சாப்பிடறோம், அருவியிலே ஆட்டம் போடறோம். அன்னிக்கு நைட், அங்கேயே ஹால்ட் அடிச்சிட்டு, அடுத்தநாள் காலையிலே மறுபடியும் ஒரு குளியலை போட்டுட்டு, மத்தியானம் கிளம்பி வீட்டுக்கு வந்திடுவோம்,” என்றேன் நான்.
நல்ல வேளையாக ‘பொங்கல் முடிந்துதான் வருவேன்’ என்று சொல்லிவிட்டு, மகன் வீட்டுக்கு, என் மனைவி ருக்மிணி போன வாரம்தான் கிளம்பிப் போயிருந்தாள். அதன் பிறகு, ‘ரிங்-மாஸ்டர் இல்லாத சிங்கமாக’ நான் என் வீட்டில் வலம் வருவதோடு, சுயம்பாகம், நண்பர்களுடன் சீட்டாட்டம், என ஒருவித பரம சுக வாழ்வில் லயித்திருந்தேன்.
இப்போது, ‘பாச்சிலராக’ மறு அவதாரமெடுத்து, நண்பர்களுடன், குற்றாலத்தில் கும்மாளம் அடிக்கப் போவதை நினைத்தாலே சிந்தை இனித்தது.
கிளம்பவேண்டிய நாளன்று, விடியற்காலையில், பஞ்சு ஃபோன் செய்தான். “நேற்றே, காரை சர்வீஸுக்கு விட்டிருந்தேன். இன்னிக்கு மதியம்தான் கிடைக்குமாம். அதனால, ராகுகாலம் முடிஞ்சதும், மதியம் மூணு மணிக்கு மேல் கிளம்பலாம்” என்றான்.
சூடான லெமன் டீயுடன், டிவியின் முன்னால் நாட்டு நடப்பை அறிய அமர்ந்தேன்.
யாரோ “வாக்கு-வரதராஜன்” என்ற ஜோதிட சிஹாமணி, பிறக்கவிருக்கும் புத்தாண்டு பலன்களை பற்றிய தனது ‘கணிப்புகளை’ அளந்துவிட்டுக் கொண்டிருந்தார்.
‘கன்னிராசியின், உத்திர நட்ஷத்திர நேயர்களே’ என்று அவர் அழைத்ததும், அட நம்மைத்தான் என்று உற்று கவனித்தேன்.
“புதுவருடத்தின், துவக்கநாளின் முன்பாதியில், எதிர்பாராமல், உங்கள் பணம் விரயமாகும். அன்று பின்பாதியில், உங்களுக்கு வரவிருந்த ஆபத்து விலகும்” என்று, ஜோதிடப் பலன்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
மதியம் பன்னிரெண்டு மணிக்கு, வீட்டு வாசலில் வந்து நின்ற கார் ஒலியெழுப்பியது. ‘பஞ்சுவும், வைத்தியும், மூணு மணிக்குத்தானே வரேன்னானுங்க’ என்றபடியே, நிலைக்கதவை திறந்தேன்....
அப்படியே தூக்கிவாரிப் போட்டது! காரணம், என் தர்மபத்தினி ருக்மிணி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
“காம்பவுண்ட் கதவை திறங்க” என்று அவள் அலறியதும், கலக்கத்துடன் கதவைத் திறந்து, குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன்.
“என்ன அப்படியே கடப்பாறையை முழுங்கின மாதிரி நிக்கறீங்க?. காரோட டிக்கியிலே, பையெல்லாம் இருக்கு, எடுத்துகிட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டு, உள்ளே போனாள் ருக்கு.
“அப்பா எப்படியிருக்கீங்க? சர்ப்பிரைஸா இருக்கட்டும்னு, உங்களுக்கு முன்கூட்டியே சொல்லாம, நாங்க எல்லோரும் ‘நியூ-இயரை’ உங்களோட கொண்டாட வந்திட்டோம்…” என்றபடியே என் மருமகள், என் பேரக்குழந்தைகளுடன் வீட்டினுள்ளே போனாள்.
“என்னப்பா, திருதிருன்னு முழிக்கிறே? எனக்கு மூன்று நாள்தான் லீவு. அம்மாவை இங்கே கொண்டு வந்து விட்டுட்டு, அப்படியே, நியூ-இயரை கொண்டாடிட்டு, நாளை மறுநாள், மத்தியானம் நாங்க கிளம்பிடுவோம்” என்று சொல்லி, என் குற்றாலக் கனவை குழி தோண்டி புதைத்துவிட்டு, மாடிக்குப் போனான், என் மகன்.
“பொதுவா நான் ஊர்ல இல்லாட்டி..பன்னி, குட்டி போட்ட இடம் மாதிரி வீட்டை அலங்கோலமா மாத்தியிருப்பீங்க. இன்னிக்கு என்னடான்னா, பெருக்கித்தள்ளி, கிச்சனை கழுவி, சுத்தமாக்கி வைச்சிருக்கீங்களே?. வீட்லேதான் இருந்தீங்களா? இல்லே, உங்க விடியாமூஞ்சி ஃபிரெண்டுகளோட, எங்கேயாவது ஊர்சுத்தப் போயிருந்தீங்களா?” என்று, என்னைக் குடைந்தாள், என் மனையாள்.
“ருக்கு… நாளைக்கு குற்றாலத்திலே ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அது முடிஞ்சதும், வந்துடுறேன். இப்பவே ஆஃபீஸிலிருந்து நிறையபேர் கிளம்பிப் போயாச்சு” என்று, ‘நூல் விட்டுப்’ பார்த்தேன்.
“நியூ-இயரன்னிக்கு அப்படியென்ன பொல்லாத மீட்டிங்?. உங்க ஆஃபீசுக்கு, ஃபோன் போட்டு, நானே கேட்கிறேன்” என்று ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தை’ கையிலெடுக்கப் போனாள்.
“இரும்மா…! அவசரப்படாதே. நானே, ஃபோன் பண்ணி வரமுடியாதுன்னு சொல்லிடறேன். இதுக்குப்போய், நீ ஏன் டென்ஷன் ஆகறே?” என்று அவளை சமாதானப்படுத்தினேன்.
“டேய் பஞ்சு சாரிடா!.. எதிர்பாராம, ஊர்லயிருந்து, என் மொத்த குடும்பமுமே, வந்துட்டாங்க. அதனால, நான் குற்றாலத்துக்கு வரமுடியாதுடா. என் மனைவி வேற, பூச்சாண்டி காட்டறாடா” என்று சொல்லி அவர்களை மட்டும் குற்றாலம் கிளம்பச் சொன்னேன்.
மாடி அறையிலிருந்து, என் மகன் கூப்பிடவும், ஓடிப்போய் ஆஜரானேன்... “இந்த ஏ.சி, கூலிங்கே ஆகமாட்டேங்கிறதே?. யாராவது சர்வீஸ்மேனை வரச்சொல்லி, பார்க்க மாட்டியா? தெரிஞ்சவன் இருக்கானா? இல்லே, நானே டோல்-ஃபிரீ சர்வீஸ் சென்டருக்கு கால் பண்ணட்டுமா?” என மிரட்டினான்.
உடனே வரேனென்ற சர்வீஸ்மேன், மாலை ஆறு மணிக்குத்தான் வந்தான்.
“ரொம்ப நேரம் ஏ.சியை போட்டிருந்தீங்களா?” என்றான். அருகே நின்ற என் மனைவியோ, “உங்களைத்தான் கேட்கிறார். ஏ.சியை போட்டுட்டு, எங்கேயாவது, வாய் பார்க்க போயிட்டீங்களா?” என்று குறுக்கு கேள்வி கேட்டாள்.
“ருக்கு… நீ ஊருக்கு போன பிறகு, இந்த ரூமுக்கே நான் வரலே. சத்தியமா இந்த ஏ.சியை நான் யூஸ்பண்ணவே இல்லை’ என்றேன்.
சர்வீஸ்மேனோ, “யூஸ் பண்ணாம விட்டதாலத்தான் கேஸ் லீக்காகிப் போய், மெஷினே கெட்டு போச்சு” என்று பழியை என்மீது திருப்பிவிட்டு, “சரி பண்ண எட்டாயிரம் ரூபாய்” ஆகுமென்றான்.
“நாளைக்கு, பஜார்லே கடையெல்லாம் இருக்காது. நீங்க சரின்னு சொன்னா, இன்னிக்கே ஸ்பேர்-பார்ட்ஸெல்லாம் வாங்கிடுவேன்” என்றான்.
குற்றாலச் செலவுக்காக, நான் ஏ.டி.எம்மில் எடுத்து வைத்திருந்த ரூபாய் நாலாயிரத்தை எடுத்து, அவனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, “நாளைக்கு வேலையை முடிச்சதும், மீதிப் பணத்தை தரேன்” என்று தன் சாதூர்யத்தைக் காட்டினாள், என் சகதர்மிணி.
‘குற்றாலக் கும்மாளம்’ நழுவிப் போன கவலையோடு, புது வருடத்தின் முதல் நாளன்று காலையில் கண்விழித்தேன்.
திடீரென்று, நான் படித்த ஆசிரியரிடமிருந்து, எனக்கு ஃபோன்கால் வந்ததும், ‘ஹாப்பி நியூ-இயர் சார்’ என்றேன்.
அவரோ, ”வருஷக் கடைசியிலேதான், இந்த இயர் Happyயா, Sarrowவான்னு தெரியும். ஒவ்வொரு இயர் ஆரம்பிக்கும் போதும், ‘வீ ஆர் ஸ்டெப்பிங்-டுவோர்ட்ஸ் கிரேவ் யார்டுனு, புரிஞ்சுக்க” என்றார். கூடவே “வேற ஒருத்தருக்கு ஃபோன் பண்ணும்போது, தெரியாம உன் நம்பர்லே என்விரல் பட்டிருக்கும், ஃபோனை வை” என்று புத்தாண்டு ஆசீர்வாதம் வழங்கினார்.
“ஸ்பீக்கர் போட்டு பேசியதால், கேட்டுக்கொண்டிருந்த என் மருமகளோ, “அப்பா, இந்த மாதிரி ஆட்களிடம் பேசினீங்கனா, உங்களுக்கு நெகட்டிவ்-எனர்ஜிதான் கிடைக்கும்” என்று அறிவுரை வழங்கிவிட்டு, ‘பாஸிட்டிவ்-எனர்ஜியை’ தன் ஃபோன்-கான்டாக்டில் இருப்பவர்களுக்கு தூவிவிடச் சென்றாள்.
கையில் காஃபியுடன் வந்த என் மகனோ, “ஏம்பா, இந்த டீவி வாங்கி ஐந்து வருஷம் இருக்குமா? சவுண்டு, எஃபக்டிவா இல்லையே” என்றான்.
என் மனைவியோ, “இதுல படமும் கிளாரிட்டியா இல்லே, அதனால, நீ கடைக்குப் போய், உன் வீட்டிலே இருக்கிற மாதிரி, பெரிய டிவியா வாங்கிண்டு வா” என்றாள். தாய் சொல்லை தட்டாத தனையனும், என் டெபிட் கார்டுடன், டிவி வாங்க கிளம்பினான்.
அதற்குள், என் மருமகளோ, “ஆறாவது தெருவில, மூன்றாவது வீடு. காம்பவுண்ட்ல பச்சை பெயின்ட் அடிச்சிருக்கும்” என்று, அலைபேசி மூலமாக யாருக்கோ, வீட்டு அடையாளத்தை சொன்னாள்.
“யாரும்மா” என்றேன்? “அப்பா, நம்ப வாஷிங்மெஷின்ல, ஒரு செட் துணியை தோய்க்கப் போட்டேன். அது துணியெல்லாம் தோய்க்குது. ஆனா கடைசியிலே பிழியறதுக்கு, ஸ்பின்னர் இருக்குமில்லே, அது ஒர்க் பண்ணலே” என்று சொன்னாள்.
வாஷிங் மெஷினை சரிசெய்ய வந்தவன் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள், என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“உள்ளுக்குள்ளே இருக்கிற ‘பேரிங்’ உடைஞ்சு போச்சு. அதோட, ஸ்பின்னிங் யூனிட்டையும் மாத்திட்டா அடுத்த ஐஞ்சு வருஷத்துக்கு கவலை இருக்காது. செலவு மொத்தம் ஆறாயிரம் ஆகும் மேடம்” என்றான்.
என் மனைவியிடம், ‘ஒர்க்-ஆர்டரை’ பெற்றுக்கொண்டு, ஏ.சி. மற்றும் வாஷிங்மெஷின், சர்வீஸ்காரர்கள், என் வீட்டுப் பொருட்களை வைத்துக்கொண்டு, ஆங்கிலப் புத்தாண்டில், போகிப் பண்டிகை கொண்டாடினார்கள்.
குற்றாலத்திலிருந்த, பஞ்சுவிடமிருந்து எனக்கு கால் வந்தது. ஏதோ மனசிலே, “திரிகூடராசப்பக் கவிராயர்” என நினைத்துக் கொண்டு, திருக்குற்றாலக் குறவஞ்சியை பாடுவது போல, நீர்வீழ்ச்சியின் ரம்மியமான சூழலை, எனக்கு, நேரடி வர்ணனை பண்ணிக் கொண்டிருந்தான் ‘பஞ்சு’.
“நீ இல்லாம, முழுசா எஞ்சாய் பண்ணமுடியலேடா. அதனால, நானும் வைத்தியும், இன்னிக்கு மதியமே கிளம்பிவறோம்” என்றான் பஞ்சு. அதே சமயத்தில்
என் டெபிட் கார்டுடன், டி.வி. ஷோரூமுக்கு போயிருந்த என் மகனோ, ரூபாய் எழுபத்தைந்தாயிரம், கொடுத்து, புது கலர்-டீவியை, கையோடு வாங்கி வந்து, ஹாலில் மாட்டிக் கொண்டிருந்தான்.
தின்னத் தெரியாமலும், தின்ன முடியாமலும், மருமகள் தயாரித்த, ‘ஹோம்-மேடு பீஸ்ஸாவை’ முழுங்கிவிட்டு, உடல் சோர்வினால், சற்று படுத்தேன். அன்று மதியத்துக்குள்ளே, எதிர்பாராத செலவு, ரூபாய் ஒரு லட்சத்தை தாண்டியிருந்தது.
அசந்து தூங்கியவன், மாலை ஐந்து மணிக்குத்தான் எழுந்தேன். எட்டு மணிபோல, பஞ்சுதான் ஃபோன் பேசினான்.
“நாங்க வீட்டுக்கு வந்துட்டோம்பா. நல்லவேளை நீ வராதது ஒரு விதத்தில நல்லதாப்போச்சு” என்றான் பஞ்சு. “ஏண்டா” என்றேன்.
“மதுரை தாண்டி நாங்க வரும்போது, முந்திகிட்டு போறேன்னு, ஒரு கார்க்காரன், நம்ப வண்டியில மோதிட்டான். நல்ல வேளை, யாருக்கும் பலமா அடிபடலை. ஆனா வண்டிக்குதான் சேதாரம் ஜாஸ்தி” என்றான்.
நேற்று, ‘வாக்கு வரதராஜன்’ கன்னிராசிக்கு சொன்ன ஜோதிட பலன்கள், எனக்கு ஞாபகம் வந்தது. நடந்த நிகழ்வுகளை கோர்வையாக்கி பார்த்தேன். ஜோஸியம் “உண்மைதான்” என்ற எண்ணம் வலுத்தது.
அறிவுக்களஞ்சியமான என் மனைவியிடம், “ருக்கு… ஜோஸியம் உண்மையா-பொய்யா” என்று கேட்டேன்.
“சத்தியமா பொய்தான்” என பளிச்சென்று பதில் சொன்னாள். “ஏன் அப்படி சொல்லறே?” என்றேன்.
“எங்க அப்பா, நம்ப ரெண்டு பேரோட ஜாதகத்தையும், ஐந்து ஜோஸியர்களிடம் காட்டினாராம். எல்லா ஜோஸியரும் பொருத்தம் சூப்பர்னாங்களாம். இப்போ பாருங்கோ, உங்களை கட்டிண்டு, முப்பத்திமூணு வருஷமா, நான் பூலோகத்திலே படற அவஸ்தையை. என்னைப் பொறுத்தவரை ஜோஸியம் பொய்” என்றாள்.
என் சகதர்மிணி அப்படி சொல்லிட்டாலும் எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு. பிளீஸ்… நீங்க சொல்லுங்க… ஜோசியம் உண்மையா-பொய்யா...?!
Leave a comment
Upload