“ஆறு மாத காலம் அவகாசம் தருகிறேன். ஒன்றாக ஒரே வீட்டிலேயே தொடர்ந்து வாழுங்கள். உங்களுக்குள் ஏதாவது மனமாற்றம் ஏற்பட்டால் பாருங்கள், இல்லையேல் முறைப்படி விவாகரத்து வழங்கப்படும்” என வழக்கை ஆறுமாத காலத்திற்கு ஒத்திவைத்தார் நீதிமன்ற நடுவர்.
வக்கீலைப் பார்த்து பேசிவிட்டு வண்டியிலேறி வீடு சென்றடைந்தார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் ரவி.
தன் வக்கீலிடம் பேசி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார் கீதா, அதே ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியை.
மணியை பார்த்தார்கள் இருவரும்... அது பன்னிரெண்டைநெருங்கப் பார்த்தது. பள்ளிக்கும் இனி செல்லமுடியாது, லீவு சொல்லிவிட்டு ஓய்வாகப் படுத்த ரவிக்கு, பணியில் சேர்ந்த நாட்கள் நினைவில் வந்தது...
சே! எத்தனை ரம்யமான நாட்கள் அவை. வாழ்க்கையை ஒரு எதிர்பார்ப்போடு அனுபவிக்க காத்திருந்த நாட்கள்! ஆசிரியர் வேலைக்காக சொந்த ஊரை விட்டு நாகப்பட்டினம் வந்து ஒரு சிறிய அறை எடுத்து தங்கி, தனியே சமைத்து சாப்பிட்டு பள்ளிக்குச் செல்வது, மாலை நேரங்களில் ஆலயம் சென்று தொடர்ந்து கடற்கரைக் காற்றில் அமர்ந்துவிட்டு, இரவு டிபன் சாப்பிட்டு அறைக்கு திரும்பினால் மணி பத்தாகியிருக்கும்.
படுத்தால் தூக்கம், விழித்தால் பள்ளி என இருந்த நான், 1996 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோதுதான் கீதாவை சந்தித்து காதலில் விழுந்தேன்.
மயிலாடுதுறை பாராளுமன்றம், மணக்குடி பள்ளி ஒன்றில், இருவருக்கும் ஒரே தேர்தல் சாவடியில் தேர்தல் பணி.
இரவே பூத்திற்கு சென்று தங்கவேண்டிய கட்டாயம்!... கீதாவும் மற்றொரு திருமணமான ஆசிரியையும், சக தேர்தல் பணியாளர்களாக நாகப்பட்டினத்திலிருந்து அதே பள்ளிக்கு வந்துவிட... அவர்களை பள்ளியின் கழிவறையும், சரிந்த கூரையும் ‘பள்ளியில் தங்கவேண்டாம்’ என பயமுறுத்தியது.
அவர்களிடம் சென்று ‘என் கல்லூரி பேராசிரிய நண்பர் அருகிலே மயிலாடுதுறையில் இருக்கிறார் வாருங்கள்’ என அழைத்ததும்,
சிறு தயக்கத்தோடுதான் வந்தார்கள். ஆனால் பேராசிரியரும் அவரின் மனைவியும் அன்பாக பழகிய விதத்தில், இருவரும் சகஜமானார்கள்.
பேச்சின் ஊடே பேராசிரியரும் அவர் மனைவியும் கீதாவிடம், ‘நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது?’ என கேட்டு, ஆரம்பித்து வைக்கவும்... வெட்கத்தில் தலை குனிந்தவள்தான்!.. மறுநாள் தேர்தல் முடியும் வரை நிமிர்ந்து கூட என்னைப் பார்க்கவில்லை.
தேர்தல் பணி முடிந்து ஊர் திரும்புகையில் இரு சக்கர வாகனத்திலேயே என்னுடன் பயணிக்கத் தயாராகிவிட்டாள் கீதா. தரங்கம்பாடியிலுள்ள கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து பேசியதில், இருவரும் ஒருவரை ஒருவர் ஒரளவு புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினோம். அப்போது இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
ஆனால், அது எங்களுக்குள் உருவான காதலை பிரிக்காமல், தவறில்லை என்பது போல, எங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும் பார்க்க வைத்தது. ஒரு நல்ல நாளில் அனைவரின் ஆசியோடும் திருமணம் நடந்து முடிந்தது.
அந்த தேர்தலில் ஆட்சியமைத்த வாஜ்பாய் ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்தது.
காதல் கல்யாண வாழ்க்கையில், இருவரும் கடன் வாங்கி பெரியதாக ஒரு வீட்டைக்கட்டி சரியாக 13 ஆண்டுகள் மட்டும்தான் நீடித்தது எங்கள் இல்வாழ்க்கை.
அன்றிலிருந்து இன்று வரை பேசுவது கூட இல்லை. இருவரும் வாழ்ந்தோம் என்று சொல்லமுடியாது. அத்தனை சண்டை, வாக்குவாதம், பணி மாறுதல், தனித்தனியே ஜாகை... பின் சிலவருடம் சேர்ந்து ஒரே வீட்டில் தனிதனியாக இருத்தல்...
இப்படி வேலை.. வேலை என ஓடி அலைந்ததில், வங்கிக் கணக்கில் இருப்பு எகிறியது. ஆனால், பிள்ளைபேறு என்று ஒன்று இல்லவே இல்லை என்று புரிந்தபோது, வயது அரை சதத்தை நெருங்கிவிட்டது என கவலையோடு நினைக்க வேண்டியிருந்தது.
- இப்படி பலதையும் யோசித்தபடி படுத்திருந்தான் ரவி.
இப்போது ரவி .. ரவி என்ற குரல் வாசலில் கேட்டு எழுந்து சென்று பார்த்தார்.
பணியில் சேர்ந்தபோது தங்கியிருந்த அறைக்கு அடுத்த வீட்டில் இருந்த ஓய்வு பெற்ற கல்லூரி மூத்த பேராசிரியர் கல்யாணம் சார்தான் வீட்டிற்கு வந்திருந்தார். முதுகலைத்தமிழ் படிக்கும் காலத்தில் கீதாவிற்கும் இவர்தான் பேராசிரியராக இருந்தவர்.
‘வாங்க சார்’ என ஆசையாக அவரை இருவரும் வரவேற்க... உள்ளே வந்தவரை ‘இங்கே உட்காருங்கள்’ என இரண்டு பக்கத்தில் உள்ள இரு வேறு நாற்காலிகளையும் ஆளாளுக்கு காண்பித்தனர்.
எந்தப் பக்கம் உட்காருவது என ஒரு கணம் தடுமாறியவர் ஒருவழியாக உட்கார்ந்தார்.
“ ஏம்பா ரவி, இன்னும் கொஞ்சம் அரியர் தொகை என் கணக்கில் ஏறலை, நீ வங்கிப் பக்கம் போனால் கொஞ்சம் கேட்டு வாயேன்.. அங்கே யாரு.. நம்ம ராகவன்தானே வங்கி அதிகாரியாக இருக்கிறது?!” என விசாரித்தவர் கண்களில் குளிர்சாதனப்பெட்டி, டிவி, மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கட்டில் மட்டுமில்லாமல் சமையலறையும் இரண்டு இரண்டாக இருப்பதைக் கண்டவர் ஆச்சரியமாகி “யாராவது இதே வீட்டுல உங்க கூட வாடகைக்கு இருக்காங்களா?” எனக் கேட்டார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருந்தனர்.
“என்ன? பதிலே இல்லை?!” என்றதும் ரவி பேச ஆரம்பித்தார்.
“சார், நாங்கள் பத்து வருடமாக இப்படித்தான் இருக்கின்றோம்”
“என்ன சொல்றீங்க ரவி? ஏன்..?”
என் கூட அவங்களுக்கு வாழப் பிடிக்கலை. வீடு கடன் வாங்கி கட்டியாகிவிட்டது. அடைக்க வேண்டியது நிறைய இருக்கு. எனக்கும் வேறு போக்கிடமில்லை. ஊரில் எனக்கென யாரும் இல்லை... ஆதலால் இங்கேயே நான் தனியாக இருக்கிறேன்” என்றான் ரவி.
“காதலித்துதானே திருமணம் செய்தீர்கள்?”
ரவி மெளனிக்க..கீதா பேசினாள்.
“அதுதான் எல்லாத்துக்கும் காரணமே.. நான் என் வீட்டிற்கும் திரும்பப் போக முடியலை. நிம்மதியே இல்லைங்க சார் வாழ்க்கையில். கடைசியில் என் வாழ்க்கை, வழக்காக மாறி நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு காத்து நிற்கிறது” என புலம்பியபடியே காபி கலந்து வந்து கொடுத்தாள் கீதா.
“நீங்கள் இருவருமே தமிழ் படித்தவர்கள். தமிழை முழுமையாக, ஆர்வமாக படித்தவர்கள். வாழ்வில் தோல்விகள் வரலாம், வாழ்க்கையில் தோற்கமாட்டார்கள். தமிழ் அவர்களை தோற்க விடாது.
உங்களுக்கு சரியாக தமிழ் பாடத்தை நான் அப்போது எடுக்கலையோ என இப்போது வருத்தப்படுகிறேன்” என்றார்.
இருவரும் அவரையே பார்த்தனர்.
“வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை என்ற நற்றிணைப்பாடலும், ‘நாற்றம் சால்நளி பொய்கைஅடை முதிர்முகையிற்குக்
கூற்று ஊழ்போல் குறைபடூஉம் வாழ்நாள்’ - என்ற கலித்தொகை பாடலும் வாழ்க்கை நிலையற்றது என்பதை நமக்கு தெளிவு படுத்துகின்றன.
காற்றைப் போலவே நமது வாழ்நாளும் நிலையானது இல்லை. கழியும் நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடி மறைந்து, இளமை நீங்கி, முதுமை வருவதும் எல்லார்க்கும் நேர்கின்ற ஒரு நிலைமை. இதனை,
‘இளமையும் காமமும் நின்பாணி நில்லா’’ என்ற கலித்தொகைப் பாடலும்,
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு’
- என திருவள்ளுவரும்
வாழ்வு நிலையற்றது என்பதையே உணரச் செய்கிறார்கள்.
உலகத்தில் நிலை இல்லாதது மூன்று என்கிறது சங்கத்தமிழ். இளமை, செல்வம், யாக்கை.
நீர்க்குமிழிபோல் கழிவது இளமை.
கூத்தாட்டத்திற்கு கூடும் கூட்டம் முடிந்ததும் களைவது போல
செல்வம்.
உடம்பு - நேற்றிருந்தார் இன்றில்லை போல வாழ்நாளின் முடிவு உறுதியாக கூற இயலாது.
இதை விட, என் நிலைமையை பாருங்கள்... ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில், மனைவியை இழந்து...பெற்ற ஒரே பெண்ணை மணமுடித்து கொடுத்த பின், ஒரு பெரிய வீட்டில் தனியாக, பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் வாடுகிறேன். உடம்பிற்கு முடியலை என்றாலும் சுடுதண்ணீ வைத்துக்கொடுக்க கூட யாருமில்லாமல் எனது நாதியற்ற நிலைமையை நினைத்தால் இளமை, செல்வம், உடலெல்லாம் நிலையானது மட்டுமல்ல... அதனால் ஒரு பயனும் இல்லை என தோன்றிவிடும்.
வேலை... வேலை என ஓடி உடல் கெட்டு, செல்வம் ஈட்டி, உடலைப் பேணுவதை விட உடலைக்கொண்டு அறத்தோடு வாழ்ந்து... ‘செல்வம் சேர்ப்பதே பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு’ என்பதையே நோக்கமாக வைத்து வாழுங்கள்.
துணையில்லாத வாழ்க்கை என்பது தலைப்பில்லா கதை, சந்தம் இல்லா கவிதை. மணல் காணாத விதை போன்றது. இதுதான் நான் கற்ற வாழ்வியல் பாடம். உங்களுக்கும் இப்போது தேவையான பாடம். சரி...எனக்கு பசிக்குது, நான் போய்தான் சோறு வைக்கணும்” என கிளம்பிப் போகத் தயாரானார்.
“சார், இன்று இங்கேயே சாப்பிட்டு போங்க... மீன் குழம்பு செய்து வச்சிருக்கேன்” என்றள் கீதா.
“சார், உங்களுக்கு பிடித்த உருளைப் பொறியல் நான் செய்திருக்கேன்” என்றார் ரவி.
“பின்னே, நான் எங்க சாப்பிடனும்? நீங்களே ஒரு முடிவாகச் சொல்லுங்கள்” என்று கேட்டார் தமிழாசிரியர்.
“நம்ம வீட்டிலே சாப்பிடுங்க” என்றனர் இருவரும் கோரசாக...
“நீதிமன்றம் மற்றும் சட்டமெல்லாம் நம் வாழ்க்கையை தற்காலிகமாக வேண்டுமானால் மீட்டுத்தரலாம், வாழ்க்கை முழுவதையும் இன்பமாக வாழ... சங்கத்தமிழ் மாத்திரமே நமக்கு வாழ்வியலை கற்றுக்கொடுக்கும்” என்றார் பேராசிரியர் சிரித்தபடி.
இதன் பிறகு அந்த வீட்டில்...பல வருடங்களுக்குப் பிறகு உருளைப்பொறியலும் மீன் குழம்பும் தமது எல்லைகள் தாண்டி உறவாடின.
Leave a comment
Upload