தொடர்கள்
அனுபவம்
உழந்தும் உழவே தலை.. - சரோஜா குமார்.. - மரியா சிவானந்தம்  

20201131211005139.jpg

‘மஹிளா கிசான் 'என்னும் நிகழ்ச்சி புது தில்லியில் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து 100 பெண் விவசாயிகள் அங்கே கூடி இருக்கிறார்கள். அப்போது, அந்த மேடையில் கம்பீரமாக ஏறுகிறார் அப்பெண்மணி

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

என்று தன் கணீர் குரலில் திருத்தாண்டக பாடலுடன் தன் உரையைத் துவக்குகிறார்.

அவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், பள்ளிப்பட்டியை அடுத்த லிங்கமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சரோஜா தேவி குமார். இயற்கை வேளாண்மை பற்றிய ஒரு சொற்பொழிவை தமிழில் நடத்துகிறார். மொழி பெயர்ப்பாளர் அதை இந்தியில் மொழி பெயர்க்கிறார். அவரது பேச்சில் மயங்கி அரங்கமே கைத்தட்டுகிறது.

சரோஜா குமார் 53 வயது நிரம்பிய இளைஞி, இக்கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, ஒரு வேளாண் புரட்சியை நிகழ்த்தி உள்ளார். சமீபத்தில் ‘நம்மாழ்வார் விருது’ பெற்ற . அவரை ‘விகடகவி’ வாசகருக்கு அறிமுகப்படுத்த தொடர்பு கொண்டோம்.

20201131211259754.jpg

மனம் திறந்த உற்சாக உரையாடலின் ஒரு பகுதி இதோ...

“பரம்பரையாக விவசாயக் குடும்பத்தைத் சார்ந்தவர் நான். எனவே இயற்கையாகவே எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். விருதுநகர் கல்லூரியில் BA-வில் கோல்ட் மெடல், பின்னர் MA படித்தேன். வேளாண்மை எனக்கு மிகவும் பிடித்தது. எனினும் தற்கால விவசாய முறைகள் எனக்கு அலுப்பைத் தந்தது. 2012-இல் நம்மாழ்வாரின் ‘இயற்கை வேளாண்மை’ பற்றிய பயிற்சியில் நான் சேர்ந்த பின்பு என் அணுகுமுறையும், வேளாண்மை குறித்த என் கண்ணோட்டமும் மாறியது.

என் தாத்தா காலத்தில் பாக்கெட் விதைகள் இல்லை, ட்ராக்டர் இல்லை, பூச்சிக்கொல்லி என்று பெயரில் உணவை விஷமாக்கியதில்லை. இயற்கை உரங்களே பயிர்களுக்கு இட்டனர், செயற்கை உரங்களைப் பற்றி அறிந்தவர் இல்லை. ஆனால் அடுத்த தலைமுறையில் எல்லாமே மாறி விட்டது. விவசாய உற்பத்தி என்பது ‘உணவுத் தேவைக்கு’ என்பது மாறி, “சந்தையின் தேவைக்கு” என்று துவங்கிய போதே, வேளாண்மை வணிக மயமாகி விட்டது. பதப்படுத்தப்பட்ட விதைகள், ட்ராக்டர், ரசாயன உரங்கள், இவற்றை பயன்படுத்தி இந்த தலைமுறையில் விவசாயம் லாபத்தை பெருக்கும் தொழிலாக மாறி விட்டது. உழவு என்பது தொழில் அல்ல, அது வாழ்வியல். மனிதர்கள், சூழ்நிலை, காலநிலை, பருவமழை என்னும் இயற்கை காரணிகளை ஒட்டி நடத்தும் வாழ்வியல்” என்று குறையாத உற்சாகத்துடன் பேசினார் சரோஜா.

நம்மாழ்வாரின் பட்டறையில் பயிற்சி பெற்ற சரோஜா தன் வறண்ட நிலத்தில் ‘மர வேளாண்மை’ தொடங்கினார். சாலையோரங்களில் வளர்ந்து செழிக்கும் மரங்களான ‘புளி, கொடுக்காப்புளி, நாவல் போன்ற மரங்கள் யாரும் தண்ணீர் பாய்ச்சாமலே வளர்ந்து கனி கொடுகின்றன. அத்தகைய மரங்களைத் தோட்டமாக்கினார். வறண்டு கிடந்த பூமியில் எழுந்த தோட்டத்துக்கு ‘நந்தவனத் தோட்டம்’ என்று பெயர் சூட்டினார். அங்கு அத்தி, நாவல், இலுப்பை, தென்னை, பனை, ஆமணக்கு, மாதுளை, பப்பாளி, கருவேப்பிலை, முள்சீத்தா, சப்போட்டா, கொய்யா, நோனி, வாழை என பயிரிட்டார். குறைந்த தண்ணீர், குறைந்த மனித உழைப்பு போதும் இவ்வகை மரங்களுக்கு. எனவே இவர் பல ஆண்டு பயிர்களான மரங்களை நட்டார். இப்போது இங்கு பழங்கள் காய்த்து குலுங்குகிறது. தன் தேவைக்கு பிறகு இவற்றை தன் ஊரில் உள்ளவர்களுக்கும், தனது தொடர்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் விற்கிறார்...

‘பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்’ என்ற பழமொழி இருக்கிறதே என்று கேட்டேன். “பழமொழி உண்மைதான். நீங்கள் சொல்வது ஒரு பயிர் சாகுபடி, குறுகிய கால சாகுபடிகளுக்கு பொருந்தும். ஆனால் நான் இப்போது மாதம் ஒருமுறை மட்டும் தண்ணீர் விடுகிறேன். இந்த மண்ணுக்கான மரங்களை நடுகிறேன். இந்த பூமியும், நீரும் மனிதருக்கானது மட்டுமல்ல, பறவைகள், மிருகங்கள் என பல்லுயிர்க்கானது. இந்த இயற்கைக் சூழலில் நுண்ணுயிர்கள் வளரவும், மண்வளம் பாதுகாக்கப்படவும் நான் இந்த உணவுக்காட்டை அமைத்துள்ளேன்” என்கிறார்.

“என் நேரத்தை விவசாயிகளுக்கு, குறிப்பாக பெண் விவசாயிகளுக்கு பயிற்சி தர செலவிடுகிறேன்” என்று அவர் சொல்கிறார். தவிர நாபார்டு (NABARD) உதவியுடன் இவர் நடத்தும் ‘கரூர் முருங்கை மற்றும் காய்கறி விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்’ உழவுத்தொழில் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

தான் உற்பத்தி செய்யும் பொருட்களை, சந்தைப்படுத்த இவர் ‘நவீன பண்டமாற்ற முறையை’ கடைபிடிக்கிறார். தன் தோட்டத்தில் விளையும் பொருட்களை இவர் தன் உபயோகம் போக பிற விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார். தன் தோட்டத்தில் விளைந்த மிளகாயை விற்று பதிலுக்கு ‘அரிசி’ வாங்குகிறார். இது ‘நமக்கான நல்ல உணவை நாமே விளைவிக்கும் தற்சார்பு’ என்கிறார். எக்காரணத்தை முன்னிட்டும் தான் உற்பத்தி செய்யும் பொருட்களை பெரு முதலாளிகளுக்கு விற்பதில்லை என்பதில் உறுதியாய் நிற்கிறார். முகநூல் பக்கங்கள், வாட்சப் குழுக்களில் இவர் பொருட்கள் பற்றிய தகவல்களை மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

முருங்கைக்காய்கள் காய்த்துத் தொங்கும் அரவக்குறிச்சியில் காய்ப்பு காலங்களில் விலை மிக குறைந்து, ‘பறிக்கும் கூலி’ கூட கட்டாமல் போவதைக் கண்டவர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதை செயல் படுத்திய போது, ‘முருங்கை எண்ணெய்’ உற்பத்தி ஆனது. இந்த எண்ணெய் தோல் மருத்துவத்துக்கு பயன்படுவது மட்டுமன்றி, நோய் எதிர்ப்பாற்றலையும் ஏற்படுத்துகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது. அளவற்ற மருத்துவ பலன்களைக் கொடுக்கும் இந்த மூலிகை எண்ணையினை சமையல் எண்ணெயாகவும் உபயோகிக்கலாம், மேனிக்கும் உபயோகிக்கலாம்.

“இயற்கையை நோக்கி நாம் ஓரடி வைக்கையில், அது ஓராயிரம் அடி எடுத்து நம்முன் நிற்கிறது” என்று சொல்லும் சரோஜா... இந்திய குழந்தைகள், கர்ப்பிணிகள், ரத்த சோகையால் துன்புறுவது குறித்து கவலை கொள்கிறார். “அங்கன்வாடியிலும், கிராம சுகாதார மையங்களிலும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கென அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. அது நம் முருங்கைக் கீரையில் அதிகமாக இருக்கிறதே. அதை பதப்படுத்தி முருங்கைப் பொடியாக்கித் தருகிறோம்” என்கிறார். பதப்படுத்தும் ரசாயனங்கள் சேர்க்காத பொடி வகைகள், எண்ணெய் வகைகள் மற்றும் பழச்சாறு வகைகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

“மதிப்பு கூட்டப்பட்ட விவசாயம், சுற்றுசூழல் பாதுகாப்பு, உழவில்லா வேளாண்மை, நுண்ணுயிர் பெருக்கம், இயற்கை உணவுகள்” என்று இயற்கை சார்ந்த செய்திகளைப் பற்றி விரிவாக பேசும் சரோஜா... ‘பெண்கள் பங்களிப்பில்’ வேளாண்மை செழிக்கும், கிராமப் பொருளாதாரம் உயரும் என்கிறார்.

‘நஞ்சற்ற நல்ல உணவு’ அனைவருக்கும் கிடைக்க தொடர்ந்து உழைக்கிறார். வாரி வழங்கும் இயற்கையின் வள்ளன்மை வற்றாது. பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் ‘முருங்கை உணவுத் திருவிழா’ நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்...

அவரது விருப்பங்கள் நிறைவேற வாழ்த்தி விடை பெற்றோம்!

இறுதியில் அவர் சொன்னது...

“மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்...”

உண்மைதான்.