நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் சாமியை வணங்கி விட்டு பிரகாரத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து சாமி பிரசாதத்தை சாப்பிட நான்கு தோழிகளும் அமர்ந்தனர்.
ஹாசினி ஆரம்பித்தாள்: எங்க வீட்டுல நேத்து ஒரே சண்டை..
ரம்யா: என்ன ஆச்சு..? உங்க அப்பா அம்மா சண்டை போட்டுக்கிட்டாங்களா..?
ஹாசினி: இல்லப்பா.. எங்கம்மாவுக்கும், அவங்க பெரிய அக்கா.. அதான் நுங்கம்பாக்கத்துல இருக்காங்களே சுமித்ரா பெரியம்மா அவங்களுக்கும் சண்டை.. நேத்து அவங்க குடும்பமா வந்திருந்தாங்க...
அவங்க பொண்ணு சுஷ்மாக்கு மேட்ரிமோனியல்ல வரன் பார்க்கப் போறதா சொன்னாங்க... உடனே எங்கம்மா, “எந்த சாதி இருந்தாலும் பரவாயில்லைன்னு போடு.. இந்த காலத்துல யார் சாதி பார்க்கிறா?”ன்னு சொன்னாங்களா...உடனே பெரியம்மாக்கு செம கோபம் வந்துருச்சு..
“அது எப்படி நீ எந்த சாதின்னாலும் ஓகேன்னு சொல்ற..? சாதி பார்க்காம பொண்ண கொடுக்க சொல்றியா?? அப்படியா வக்கத்து போய்ட்டோம்.. இல்ல நம்ம சாதியில தான் மாப்பிள்ளை கிடைக்காதா?”ன்னு கோவமா பெரியம்மா கேட்க... அம்மா பதிலுக்கு, “எந்த சாதியா இருந்தாலும் என்ன..? நல்லா படிச்ச, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல குடும்பத்திலிருந்து வந்த பையனா இருந்தா, ஏன் சாதி பாக்கனும்..? உனக்கு எதுக்கு இவ்வளவு சுய சாதி வெறி.. படிச்ச குடும்பமான நாமளே இப்படி நடந்துக்கிட்டா, இந்த சமுதாயம் திருந்துறது எப்போ..? நீ காலேஜ் படிக்கிறப்ப வெறும் வாயால பெரிய புரட்சிக்காரி மாதிரி பேசுவியே..! ‘சாதி பாக்க மாட்டேன். இந்த சமுதாயம் திருந்தனும்’ன்னு. அது வெறும் பேச்சு தானா?ன்னு கோவமா திருப்பி கேட்டாங்க.. எங்க பெரியப்பா வேற... “இவ சொல்றது நியாயம் தான்.. ஏன் சுமித்ரா, சாதி வேற்றுமை இல்லாம மாப்பிள்ளை பார்க்க கூடாதா என்ன..?”ன்னு கேட்டப்ப... பெரியம்மா பயங்கரமா கோச்சிக்கிட்டு, எங்கம்மாகிட்ட “இதோ பாரு...உன் பொண்ண கல்யாணம் பண்றப்ப வேணா, நீ எப்படி வேணாலும் கொடுத்துக்க.. என் பொண்ணு விஷயத்துல தலையிடாதே..!”ன்னு சொல்லிட்டு, பெரியப்பாவ கூட்டிக்கிட்டு கோவமா போய்ட்டாங்க..
ஸ்ருதி: ஏய்.. உங்கம்மா நிஜமாகவே முற்போக்கு சிந்தனையாளர் தான்ப்பா.. Great..!
ஹாசினி: ஆமாம்டி.. சுஷ்மா அக்காக்கு கூட ஓகே தான்... ‘நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பையனா இருந்தா சாதியை வச்சு வரனை தடை பண்ண வேண்டாம்’ன்னு தான் சொன்னா.. ஆனா அவ பேச்சை யாரு காது கொடுத்து கேட்டா..?
ரம்யா: சாதிங்கிறது நம்ம இந்திய சமுதாயத்தை பிடிச்ச ஒரு சாக்கடை. அந்த சாக்கடையை சுத்தம் பண்ணாலே தானாகவே மத்த சாக்கடைங்களான அரசியல், பொது சமூகம் போன்றவை சுத்தமாகிடும். கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டிவில சாதிகள் குறித்து, நீயா நானா நிகழ்ச்சி நடந்தது.. பார்த்தீங்களா..?
ஸ்ருதி: எது..?
சாதி பெருமை பேசும் இளைஞர்கள் VS படித்த இளைஞர்கள் என்ற தலைப்பில் நடந்ததே அதானே.. பார்த்தேன் பார்த்தேன்..
எஸ்தர்: “பார்த்தேன்” இல்ல.. பார்த்தோம்.. அன்னைக்கு ஸ்ருதி வீட்ல தான் தங்கி இருந்தேன்..
ஸ்ருதி: ஹாஹா.. செம டாபிக்.. அந்த Topicலேயே அசிங்கப்படுத்தி இருக்கானுங்க.. படித்த இளைஞர்களுக்கு எதிரணியா படித்தும் அறிவில்லாத “சாதி பெருமை புடிச்ச தத்திங்க”ன்னு சில இளஞர்களை மறைமுகமா சொல்லி இருந்தாங்க.. அத கூட புரிஞ்சுக்காம லூசு மாதிரி நிறைய பேர் சுயசாதி பெருமை பேசுறதா சொல்லிக்கிட்டு அங்க போய் அசிங்கப்பட்டு வந்தாங்க...
எஸ்தர்: ஆமா.. அதுல ஒருத்தன் ராஜ நடை நடக்கிறேன்ன்னு சொல்லி செம காமெடி பண்ணான்.. (எல்லாரும் சிரிக்கிறார்கள்)
ரம்யா: எஸ்தர்.. நீ கிறிஸ்ட்டியனா இருந்தாலும் உங்க சமுதாயத்துல கூட சாதிகள் அப்படியே தொடருது தானே..
எஸ்தர்: ஆமாம் டி.. சாதிக்கு ஒரு சர்ச் கட்டி வச்சிருக்காங்க..
ஸ்ருதி: நம்மள போல பல பேர் சாதிகளை ஒழிக்கனும்ன்னு விரும்புறோம்... சாதிகளே வேண்டாம்னா அப்ப இட ஒதுக்கீடு முறை போய்டுமே..???!!! அதுக்கு என்ன தீர்வு?
ரம்யா: இல்ல.. அப்படி ஆகிவிடக் கூடாது. சாதி இட ஒதுக்கீடுகளை கண்டிப்பாக நிறுத்தக் கூடாது. ஏன்னா கடந்த ஆயிரம் வருடங்களாக நம் இந்திய சமூகத்தில் தம்மை மேல்சாதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பிரிவினர் மற்ற சாதியினரை பல விதங்களில் ஒதுக்கி கொடுமைப்படுத்தி... அவர்களை மனிதர்களாக கூட நடத்தாமல் மன ரீதியாக, உடல் ரீதியாக சித்திரவதை பண்ணியதற்கு பரிகாரம் தான் இந்த தாழ்த்தப்பட்ட ...ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடுகள் சிஸ்டம்! இது வெறும் வறுமை ஒழிப்பு திட்டமல்ல. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அனைவரும் முன்னேறத் தக்க வகையில் சகல முன்னேற்றங்களும் நடந்து முடிந்தாலே ஒழிய...இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் வரக் கூடாது.. அதற்காக தான் அதை சமூக நீதி என்று சொல்கிறார்கள். இன்றைக்கு கூட தென்தமிழகத்தில் சாதி வெறியில் பல கொடுமைகள் நடக்கின்றன.
ஸ்ருதி: அப்ப சாதி அடையாளத்தை வைத்து இட ஒதுக்கீடுகளை நீண்ட நெடுங்காலமாக கொடுத்துக் கொண்டே இருந்தால் சாதி பிரிவுகள் எப்படி நம் சமுதாயத்தை விட்டு ஒழியும்?
ரம்யா: ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க..
டாக்டர் சூரஜ் யெங்டே (வயது 30) ன்னு அமெரிக்க வாழ் மராட்டிய தலித்.. அவர் சொல்றார் “நான் ஹார்வார்டில் படித்து பட்டம் பெற்றிருந்தாலும், அமெரிக்காவிலேயே வாழ்ந்தாலும், டாக்டரேட் பட்டம் பெற்று இருந்தாலும் இந்தியாவில் என் சொந்த ஊரில் நான் தலித் மட்டுமே.. வேறெந்த பெருமைக்குரிய அடையாளங்களும் என் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த சாதி அடையாளத்தை மாற்ற முடியாது என்ற உண்மை என் இதயத்தை நொறுக்கி விட்டது.. இப்பவும் நான் ஒரு தீண்டத்தகாதவன் தான்” என மனவேதனையுடன் சொல்கிறார்.
“வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், படிக்கிற ஆர்வம் இருந்ததால் நான் தப்பித்தேன்.. சொல்லப்போனால் ஹார்வார்டு படிப்பை எனக்கு சாத்தியம் ஆக்கியது மும்பை பல்கலைக்கழகத்தில் எனக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைத்த படிப்பு.. இட ஒதுக்கீடு இல்லை என்றால் இந்த உயரத்தை அடைந்திருக்கவே முடியாது” என்கிறார்.
ஹாசினி: ஓ... ஆனா அமெரிக்கா ஐரோப்பான்னு வெளிநாட்டில் வாழும் இந்திய சமூகத்திற்கு உள்ளேயே கூட சிலர் சாதி வேறுபாடுகள் பார்க்கிறாங்கன்னு சொல்றாங்களே...
ஸ்ருதி: எனக்கு ஒரு ஜோக் தான் ஞாபகம் வருது..
சலூன் கடையில முடி வெட்ட வந்த கத்திரிக்கோலு கிட்ட முடி சொல்லுச்சாம் “பாத்து வெட்டு.. நான் உசந்த சாதி முடி..”
அதுக்கு கத்திரிக்கோல் “எனக்கு எல்லா முடியும் ஒன்னுதான்.. மூடிட்டு உக்காருடா வெண்ணெய்”ன்னு பதில் சொன்னுச்சாம் .. (சிரிக்கிறார்கள்)
அதுபோல அமெரிக்காவுல வாழுற இந்திய சமூகத்தில் அவங்களுக்குள்ள சாதி பாகுபாடுகள் இருந்தாலும், வெளிநாட்டுக்காரனுக்கு இவனுங்க எல்லாருமே ஒன்னுதான். “யூ ப்ளடி கருப்பன்ஸ்.. தள்ளி உட்காருங்கடா”ன்னு தான் அ அவன் சொல்வான்..
ஹாசினி: அது Racism.. நிறவெறி பாகுபாடுகளில் நாடு, நிறம் , கலாச்சாரம்ன்னு வேறுபடறதுலயாவது ஒரு லாஜிக் இருக்கு.. ஆனா “நீ பின்பற்றுகிற கலாச்சாரத்தை தான் நானும் பின்பற்றுகிறேன், நீ கும்பிடும் கடவுளை தான் நானும் கும்பிடுகிறேன், உன் உடலின் நிறத்தில் தான் நானும் இருக்கிறேன், நீ பேசும் மொழியை தான் நானும் பேசுகிறேன், உன் வாழ்க்கைத் தரத்தில் தான் நானும் வாழ்கிறேன். இருந்தும் எதை வைத்து கீழ்சாதி என்று உன் காலுக்கடியில் என்னை மிதிக்கிறாய்”ன்னு கேட்டா இதுக்கு என்ன பதில் கொடுப்பாங்க நம்மாளுங்க?
ஸ்ருதி: ஒன்னும் பதில் கொடுக்க தெரியாது.. எங்க பூட்டன் பாட்டன் அப்பன்ன்னு மிதிச்சான், அதையே தான் நானும் செய்றேன்னும்பாங்க பகுத்தறிவு இல்லாத மனிதர்கள்..
ஹாசினி: அப்ப சாதிகளை ஒழிக்கவே முடியாதா??
ரம்யா: எனக்கு என்ன தோணுதுன்னா.. “நான் எந்த சாதியும் இல்ல”ன்னு சொல்லி தானாக விரும்பி வருபவர்களை கொண்டு “சாதியற்றவர்”ன்னு புதிதாக ஒரு பிரிவை, அரசாங்கமே உண்டு பண்ணி அதை சட்டபூர்வமாக்கி சாதிகள் பட்டியலில் அதையும் ஒரு பிரிவாக சேர்க்க வேண்டும். இந்த சாதி அடையாளங்களில் நம்பிக்கை இல்லாத முற்படுத்தப்பட்ட பிரிவினர், ஒடுக்கப்பட்ட ஆனால் பொருளாதார ரீதியில் முன்னேறிய மக்கள், இவர்கள் விரும்பி வந்தால் அவர்களையும், மற்றும் தங்கள் மீது உயர் சாதி மக்களால் அநியாயமாக திணிக்கப்பட்ட இந்த சாதி அடையாளத்தை, இனி தாமோ தம் வருங்கால சந்ததியினரோ சுமக்க விரும்பவில்லை என்று சொல்லி வருபவர்களையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
ஹாசினி: சூப்பர்.. “சாதியற்றவர்” என்கிற அந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் “உயர் கல்வி, அரசு வேலை” போன்றவைகளில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கனும். இந்த சாதியற்றவர்கள் சதவீதத்தின் எண்ணிக்கை கூட கூட.. ஒரு நாள் கண்டிப்பாக சாதி வேற்றுமைகள் நாளடைவில் மறைந்து, நம் சமுதாயம் தூய்மை ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்ப வேணா இட ஒதுக்கீடுகள் முறையை எடுக்கலாம்.
எஸ்தர்: கேட்க நல்லா இருக்கு.. நிஜமா நடந்தா இன்னும் நல்லா இருக்கும்..
ரம்யா: நடக்கும். அதுக்கு முன்ன நம்மளை போல இளம் தலைமுறையினர் சுய சாதியை மனதிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.
அறிவியல் ரீதியாக மனிதர்கள் பரிணாம வளர்ச்சியில் குரங்குகளின் வழி வந்தவன் என்பதை இன்னும் ஒப்புக்கோள்ளாமல் உசந்த சாதி, தாழ்ந்த சாதி என சமுதாயத்தை படு அபத்தமாக கூறுப்போட்டுக் கொண்டிருக்கும் இந்த மூளையற்ற சாதியவாதிகள் என்று திருந்துகிறார்களோ அன்றைக்கு தான் நமக்கு விடிவுகாலம்.
ஸ்ருதி: மாற்றம் நம்மிலிருந்து தொடங்கினால், இது சாத்தியமே.. நாம் உருவாக்குவோம் புதிய சமுதாயத்தை..
“எஸ்..” என்றபடி நால்வரும் கைகளை உயர்த்தி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக அடித்துக் கொள்ளும்போது, ஹாசினியின் வாட்ஸ்அப்பிற்கு புது தகவல் வந்ததாக வெளிச்சம் மொபைலில் மின்னியது.. எடுத்து படித்த ஹாசினி... “ஹைய்யா.. பெரியம்மா, சுஷ்மா அக்காக்கு எந்த சாதி என்றாலும் ஓகே சொல்லி, ஃபேமிலி க்ரூப்ல போட்டு இருக்காங்க.. அம்மா கிட்ட சாரி கூட, கேட்டு இருக்காங்க.. பெரியப்பா சமாதானம் பண்ணி ஒத்துக்க வச்சிட்டார்..
ரம்யா: அப்படி போடு அரிவாள... - என்றபடி தோழிகள் நால்வரும் மகிழ்ச்சியில் சிரித்தனர்.
Leave a comment
Upload