கடந்த ஒரு வருடமாகவே… உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூன்றாவது உலக போர் போல் ருத்ர தாண்டவம் ஆடி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ்பிறழ்வு ஏற்பட்டு, வேகமாக பரவி வருகிறது எனும் அச்சம் உலக நாடுகள் முழுமையையும் பீதியுடன் முடக்கி உள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் தங்கள் வான் வழி போக்குவரத்தை நிறுத்திவிட்டது. கொரோனா வைரஸ்பிறழ்வு கண்டு அச்சமடைந்திருக்கும் பல நாடுகள் இன்று லாக் டவுனையும் அறிவித்து விட்டது. இந்த லாக் டவுன் மூலமு ம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.
பிரிட்டனிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் இந்தியாவிற்குள் வருவதை தடை செய்துள்ளது, இந்திய அரசு.
கொரோனா புதிய வைரஸ் பிறழ்வு இந்தியாவில்...குறிப்பாக தமிழ்நாட்டில் மீண்டும் வீரியத்துடன் செயல்படுமோ என தமிழக மக்கள் இடையே ஒரு பதற்றம் உண்டாகி இருக்கிறது. இதுகுறித்து சித்த மருத்துவர் வீர பாபுவுடன் விகடகவிக்காக ஒரு பிரத்யேக பேட்டி கேட்டதும், உடனே பேச ஆரம்பித்தார்.
இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை சாத்தியமா?
இந்தியாவில் இப்போதைக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வாய்ப்பில்லை என்று தான் சொல்வேன்.
கடந்த 8 மாதமாக கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு தமிழகம் பற்றி உங்கள் பார்வை என்ன?
2012 ஆகஸ்டு முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் தான் தமிழகத்தில் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்பு இந்த வருடம் டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமிகள் எங்கு சென்றது என்று தெரியவில்லை. டெங்கு கிருமிகளை கொரோனா வைரஸ் அழித்துவிட்டதாக நினைக்கிறேன், இது ஆச்சரியமான விஷயம். நமது மருத்துவர்கள் ஆரம்பத்தில் கொரோனா வைரஸுடன் தீவிரமாக போராடி, தற்போது அதனை சிறந்த வைத்திய முறையால் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். இதில் சித்த வைத்தியர்களின் பங்கு பெரும் பகுதி உண்டு.
கொரோனா வைரஸ் பிறழ்வு தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும்?
தமிழகத்தைப் பொருத்தவரை வரும் பிப்ரவரி மாதம் இறுதிவரை கொரோனா வைரஸ்னுடைய தாக்கம் இருக்கும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொரோனா வைரஸ் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. ஜூலை, ஆகஸ்ட்டில் குளிர் பிரதேச நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஒழிய தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இருக்காது. தமிழகத்தைப் பொருத்தவரை வரும் பிப்ரவரி மாதத்துடன் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் முடிவுக்கு வர நிச்சயமாக வாய்ப்பு உள்ளது.
கொரோனா தடுப்பூசி பற்றி தங்கள் கருத்து என்ன?
கொரோனா தடுப்பூசி எந்த அளவு பயன்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. கொரோனா தடுப்பூசி எனக்கு தெளிவான நம்பிக்கையினை தரவில்லை.. மேலும், வைரஸ் மீண்டும் தாக்காது என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.
கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்பட்டு இன்னும் 10 ஆண்டுகளுக்கு உலக மக்களை அச்சுறுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது சரியா?
இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்குள் எந்த ரூபத்தில் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்பட்டு வந்தாலும், சித்தா மற்றும் ஆங்கில மருத்துவ துணையுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளித்து ஓர் உயிர் இழப்பு கூட நிகழாமல் காப்பாற்ற முடியும்.
சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் காட்டிற்குச் சென்று, சிறப்பு மூலிகைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக கொண்டு வந்ததாக வந்த தகவல் உண்மையா?
நான் ஜவஹர் மருத்துவமனையில் அரசு சார்பாக வைத்தியம் பார்த்தபோது, கிட்டத்தட்ட 5396 பேருக்கு கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரு உயிரிழப்பு கூட இன்றி குணப்படுத்தி அனுப்பினேன். முழு லாக்டவுன் கால கட்டத்தில், என்னால் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. நான் என்னுடைய தனிப்பட்ட முறையில் ஆஸ்பத்திரி தொடங்கிய பின், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினால், 80% நுரையீரல் பாதிப்புடன் வந்தவர்களை, லாக் டவுன் நீங்கிய பின் நான் காட்டிற்கு சென்று சேகரித்த அரிய மூலிகைகள் மூலம் மருந்து தயாரித்து, இதுநாள் வரை எந்த உயிரிழப்பு இன்றியும் தொடர் சிகிச்சை அளித்து பரிபூரணமாக அவர்களை குணமாக்கி அனுப்பி வைக்கிறேன்.
உங்களுடைய சித்த மூலிகை மருந்தின் சிறப்பம்சம் என்ன?
கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல், தூக்கமின்மை, பசியின்மை, மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு சிறப்பு சித்த வைத்திய சிகிச்சை மற்றும் ஆங்கில மருத்துவத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் குனப்படுத்துகிறேன். எட்டு நாட்கள் தொடர் கொரோனா நோயிலிருப்பவர்களை கூட இரண்டே நாட்களில் பரிபூரணமாக குணப்படுத்தி, நோய் தொற்றிலிருந்து விடுவித்துக் கொண்டிருப்பது தான் எனது மருத்துவத்தின் சிறப்பு.
இங்கிலாந்தில் இருந்து வரும் பிறழ்வு கொரோனா நோய் வைரஸ்க்காக தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஊரடங்கு தேவையா?
கொரோனா எந்த ரூபத்தில் வந்தாலும், பூரணமாக குணப்படுத்த முடியும். நம்முடைய மருத்துவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா சிகிச்சை அளிப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தமிழ்நாட்டிற்கு மீண்டுமொரு லாக் டவுன் தேவை இருக்காது என்பது என் கருத்து!
டாக்டர் வீரபாபு மூலிகை தேநீர் என்று அனைத்து மருந்து கடைகளிலும் விற்கிறார்கள், இதனை தற்போது எப்படி குடிக்க வேண்டும்?
டாக்டர் வீர்பாபு மூலிகை தேநீர் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. மூலிகை தேநீரை, காலை உணவு உண்ட பின் அல்லது மாலை என வாரத்திற்கு இரு முறை அருந்தினால் போதுமானது. கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து, மூலிகை தேநீர் நம்மை பாதுகாக்கும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பிறழ்வு நோய்த்தடுப்பு குறித்து தாங்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
தமிழக மக்கள் வரும் பிப்ரவரி மாதம் இறுதிவரை கண்டிப்பாக முக கவசம் அணிவதும், சமூக இடைவெளி விட்டு அமர்வதும், அடிக்கடி தங்கள் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதும் மிக மிக முக்கியமானது. அதனால் எப்பேர்பட்ட கொரோனா வைரசும் நம்மை தாக்குவதில் இருந்து தப்பிக்கலாம்.
இந்தியாவில் நிறைய பேர் முககவசம் கூட அணியாமல் சுற்றுகிறார்கள். ஆனாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகளவில் பரவுவது ஏன்?
அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டதும், நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாது. முதல் நான்கு நாட்கள் மருத்துவர்கள் தொலைபேசியில் கூறும் மருந்துகளை உண்ண வேண்டும். அடுத்த நான்கு நாட்களில் மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் உள்ளானவர்கள், இந்த எட்டு நாட்களுக்குள் நோயின் தீவிரம் அதிகமாகி மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளியாக சேரும் போது, அதிளவில் நுரையீரல் மற்றும் இதர உறுப்புக்கள் பாதிப்புள்ளாகி அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்தியாவில் நோய் வந்தவுடன் நேரடியாக அரசு மருத்துவமனையோ அல்லது தனியார் மருத்துவரையோ நேரடியாக சந்திக்க முடியும் என்பதால் நம் நாட்டு மக்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து பெரும்பாலும் தப்பித்து விடுகின்றனர் என்பது நான் அறிந்த தகவல்.
தமிழ்நாட்டைப் போல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
அமெரிக்கா மற்றும் லண்டன் அரசுகள் ஒரே இடத்தில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை அமைத்து என்னிடம் கொடுத்தால், ஒரு உயிர் கூட இழப்பின்றி கொரோனா நோயாளிகளை காப்பாற்றி என்னால் மீட்டெடுக்க முடியும் என்று உறுதி கூறுகிறேன். சித்தா மற்றும் ஆங்கில மருத்துவருடன் ஒருங்கிணைந்த சிகிச்சையால், கொரோனாவை என்னால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்று கூறுகிறேன். அமெரிக்கா அல்லது லண்டன் அரசுகள் என்னை அழைத்தால், என்னால் அங்கு சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை நிச்சயம் காப்பாற்ற முடியும் என்று உறுதியாக...ஏன் சாவலாகவே இதை கூறுகிறேன். என்னை அமெரிக்கா அல்லது லண்டனில் வைத்தியம் பார்க்க கூப்பிடச் சொல்லுங்க சார்.. நான் தயாராக இருக்கிறேன்..!
சார்.. இறுதியாக ஒரு கேள்வி. தமிழகத்தை விட்டு எப்போது கொரோனா வைரஸ் முற்றிலுமாகப் போகும்? கொரோனா வைரஸ் பிறழ்வு பார்த்து பயப்படனுமா?
பிப்ரவரி மாத இறுதி வரை கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், அதன்பின் படிப்படியாக கொரோனா வைரஸ் தாக்கதிலிருந்து தமிழகம் விடுபடும் என்பது என் கணிப்பு. மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது, மத்திய அரசின் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முறை வழிகாட்டுதலை பின்பற்றுவது முக்கியமானது. மேற்கண்ட பாதுகாப்பு முறைகளை நாம் கையாண்டலே கொரோனா வைரஸ் பிறழ்வு பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. மற்றபடி, விகடகவி வாசகர்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Leave a comment
Upload