“சென்ற புத்தாண்டில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றுனீர்களா?”
S.சதீஷ், டெக்ஸாஸ், அமெரிக்கா.
புத்தாண்டு உறுதிமொழி எல்லாம் எடுக்கற வழக்கம் எனக்கு இல்ல .. ஒரு உறுதிமொழி எடுக்க புத்தாண்டு தான் அவசியமா வேணுமா என்ன? ஒருவேளை என்னை யாராவது தமிழக அமைச்சர் ஆக்குனா, கவர்னர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கிறேன்.. என்ன சிரிக்கிறீங்க? அந்த உறுதிமொழியை அங்கேயும் எவனும் காப்பாத்த மாட்டான்னு தானே சிரிக்கிறீங்க... இதுக்கு தான் சொன்னேன் உறுதிமொழி எடுக்குறதே ஒரு வேஸ்ட் தான்னு.. இப்ப புரியுதா?
A.பத்மா, ஆதம்பாக்கம், சென்னை.
புத்தாண்டு உறுதிமொழியா..? அது எதுவும் ஒரு வாரத்தை கூட தாண்டியதில்லை.. அதனால், கடந்த சில வருடங்களாக புத்தாண்டு உறுதிமொழி எடுப்பதில்லை என்பதே ஒவ்வொரு வருடமும் என்னுடைய புத்தாண்டு உறுதிமொழியாக இருக்கிறது.
அபிராமி ராஜசேகர், கடலூர்.
2020 பிறந்தப்ப இனி காலையில் சீக்கிரம் எழுந்து ஒரு அரைமணி நேரம் யோகா பயிற்சி, தொடர்ந்து ஒரு சின்ன நடைபெயர்ச்சி பண்ணிட்டு, காலை வேலைகளை எப்பவும் போல பண்ணனும்ன்னு ப்ளான் பண்ணி இருந்தேன். சும்மா சொல்லக் கூடாது.. நானும் மொத மூணு மாசம் தினமும் இல்லாட்டி கூட வாரத்துக்கு 3 தடவையாவது முடிஞ்ச வரை ஃபாலோ பண்ணேன்.. நாலாம் மாசம் இந்த பாழாப்போன கொரோனா வந்துச்சு, என் சபதமும் முடிஞ்சிச்சு.. ஊரடங்கால எல்லாரும் ஜாலியா தூங்க நான் மட்டும் வாக்கிங் போகாட்டி கூட பரவால்ல.. வீட்லேயே யோகா செய்வோம்ன்னு ரெண்டு வாரத்துக்கு தொடர்ந்தேன்.. அப்புறம் பார்த்தேன்... உலகமே கொரோனாவால அடங்கி தூங்கும் போது, நமக்கு எதுக்கு இந்த விடியக்கார்த்தால எழுந்திருக்கும் தொல்லைன்னு தோணுச்சு.. அத்தோட விட்டதுதான்.. இப்ப வருஷமே முடிஞ்சு போச்சு..
திலகவதி பத்மநாபன், திருநாகேஸ்வரம்.
புத்தாண்டு உறுதிமொழியா இந்த 2020-க்குள் என் கணவருக்கு ஒரு வொர்க் ஷாப் வைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. ஈஸ்வரன் அருளால் என்னால் அதை நிறைவேற்ற முடிந்தது. மற்றபடி என் மகன் இந்த வருடத்தில் நல்ல வேலைக்கு போக முயற்சிகளை எடுத்து அதை நிறைவேற்றுவேன் என்று நான் எடுத்த உறுதிமொழியும் நல்லபடியாக நிறைவேறியதும் சந்தோஷமே...
க.மாணிக்கம், விழுப்புரம்.
நாங்க உறுதிமொழி எடுக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்.. 2020 ஆரம்பத்துல சீனாவுல உறுதிமொழி எடுத்துக்கிட்டு உலகம் முழுசா தன்னை பரப்பி முடிச்சு இப்ப பத்தாததுக்கு 2.0 மாதிரி 2021 க்கும் புதுசா வேஷம் போட்டுக்கிட்டு பொளந்து கட்டுதே இந்த கொரோனா.. அவனை ஒரு வருஷத்துக்குள்ள ஒழிச்சுக் கட்ட எந்த அரசாங்கமாவது தைரியமா உறுதிமொழி எடுத்துச்சா? எப்ப பார்த்தாலும் “வூட்டுக்குள்ளேயே இரு.. வெளியே வந்துறாதே.. கையை சோப்பு போட்டு கழுவு.. மாஸ்க் போடு..”ன்னு எங்களையும் பயமுறுத்தி, அரசாங்கமும் பம்முது.. இதில என்ன கொடுமைன்னா தடுப்பூசி போட்டாலும் இதை எல்லாம் தொடர்ந்து செய்யனுமாம்.. என்னா ஒரு தலையெழுத்து?!
ஏஇ. செந்தில், சென்னை.
கடந்த வருடம் உடல் எடையை, வயிற்றுத் தொப்பையை குறைக்க உணவு கட்டுப்பாட்டை மூன்று மாதங்களுக்கு கடுமையாக பின்பற்றினேன். உடல் எடையும் நன்றாக குறைந்தது. ஆனால் பக்கவிளைவுகளாக கால், மூட்டு வலி வர... உடல் பலம் குறைந்து சோர்வும் ஏற்பட அந்த முறையை கைவிட்டு நார்மலுக்கு வந்து விட்டேன்.
இந்த வருடம் அந்த ரிஸ்க் எடுக்கப் போவதில்லை சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருக்க ப்ளான் பண்ணி இருக்கிறேன். Atleast டென்ஷன் இல்லாமலாவது இருக்கலாம்.
S.சசிகுமார், ஆதம்பாக்கம்.
ஆங்கில புத்தாண்டை பின்பற்றாத திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாங்கள். தவிர, பகுத்தறிவு வாதியான எங்களுக்கு புத்தாண்டு உறுதிமொழியில் எல்லாம் நம்பிக்கை இல்லை.
தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளா, தை முதல் நாளா என்பதில் குழப்பம் உள்ளது, அது வேறு கதை. ஆனால், ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதில்லை என்பதில் மட்டும் உறுதியாய் உள்ளோம்.
வெ.கணேசன், சென்னை.
என்னது உறுதிமொழியா? நாங்களும் எடுத்தோம் தான்.. ஆனா
இந்த 2020ம் வருஷம் எங்களை அடிச்ச அடில என்ன உறுதிமொழி எடுத்தோம்ங்கிறதையே மறந்து போயிட்டோம். உசுருக்கும், பொழைக்க பணத்துக்கும் ஓடி ஓடி வாழ்க்கையின் எல்லைக்கே (சாரி) இந்த வருஷத்தின் எல்லைக்கே வந்துட்டோம்.. என்ன ஒரு நன்மைன்னா, இனிமே எந்த வருஷம் வந்து எங்கள அடிச்சாலும் அதை தாங்கக் கூடிய சக்தி எங்களுக்கு வந்துருச்சு. அப்டி ஒரு அடி அது..
ந.தசரதன், தாம்பரம்.
2020 உறுதிமொழியா? இந்த வருஷமும் சரி.., என்னோட உறுதிமொழியும் சரி.., கடைசியில் பூஜ்ஜியம் இருப்பது போலவே ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் முடிந்தது.
ச.வினோத் குமார், திருச்சி.
என் உறுதிமொழி கிடக்கட்டுமுங்க.. ஞாபகம் இருக்கா???!!!
“கனவு நாயகனின் (அப்துல்கலாம்) கனவுகள் 2020”.. அவை எல்லாம் நிறைவேறாமலே 2020 முடிகிறது.. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
வி.ஆகாஷ், அண்ணாநகர் - சென்னை.
2020-க்கு எடுத்த அதே உறுதிமொழி தான் இப்ப 2021-க்கும்.. வண்டியை எடுத்து கிட்டு நிறைய ஊர் ஊரா சுத்தனும், விதவிதமா ஹோட்டல்ல சாப்பிடனும்.. வாழ்க்கையை இனி கொண்டாட்டமா கொண்டு போகனும்னு நினைச்சேன்.. எதுவும் நடக்கல.. இனியும் நடக்குமான்னு தெரியல.. ஏன்னா நமக்கு வாய்ச்ச வருஷம் அப்படி..
வருஷம் பொறந்த பிறகு லாக்டவுன் போட்டது 2020ன்னா, லாக்டவுனோடயே வருஷம் பொறந்தா அதுதான் 2021...!!! இதுல எப்படீங்க என்ஜாய் பண்ண முடியும்??
Leave a comment
Upload