தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஹாங்காங்கில்...மேஜர் முகுந்த் வரதராஜனின் சகோதரியுடன் ஒரு சந்திப்பு !! - ராம்

20241022174634326.jpeg

பத்து வருடங்களுக்கு மேலாக ஹாங்காங்கில் இருந்தும், சினிமா வருவதற்கு முன்பாக முகுந்த் வரதராஜனின் சகோதரி நித்யா வரதராஜனை சந்திக்காது போனதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் அந்த சந்திப்பு துவங்கியது.

ஐயோ அதெல்லாம் வேண்டாம் நாங்கள் ரொம்ப எளிய மனிதர்கள் என்று மறுத்தார் நித்யா.

சமீபத்திய மீடியா அட்டென்ஷன் மற்றும் அமரன் திரைப்படத்தை சுற்றிய சில சர்ச்சைகள் அவரை சோர்வடைய வைத்திருந்தாலும், தம்பி முகுந்தைப் பற்றி பேசுகையில் ஒரு பெருமிதம் கலந்த வலி தெரிந்தது கண்களில்.

சந்திப்புக்கு முன் அமரன் சார்ந்த காட்சிகளைப் பற்றி பேசுவதில்லை என்ற முடிவுடன் தான் சென்றேன். ஆனால் சில விஷயங்களை பேச வேண்டியிருந்தது.

20241022175006666.jpeg

கே: சினிமாவைப் பற்றி பேசப் போவதில்லை. இருந்தாலும் சம்பிரதாயமான கேள்வி. ஹாங்காங்கில் படம் ரிலீசான அன்று போய் பார்த்தீர்களா ??

நித்யா : இல்லை எனக்கு அந்த தைரியம் வரவில்லை. பார்த்தால் உடைந்து போய் விடுவேன் அதனால் போகவில்லை. இன்று வரை பார்க்கும் தைரியம் வரவில்லை. அதில் வரும் விஷயங்களை அப்பா, அம்மா அக்கா சொல்லத்தான்அறிகிறேன்.

கே: மேஜர் முகுந்தைப் பற்றி சொல்லுங்களேன்.

நித்யா : சின்ன வயதிலிருந்தே இராணுவம் தான் என்று முடிவெடுத்து விட்டான். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை அதிகம்.

ஒரு முறை நன்றாக நினைவிருக்கிறது. நண்பன் ஒருவனின் மோட்டார் பைக் கீழே விழுந்து ஒரு பக்கமாக திரும்பி விட்டது. நல்ல அடி வேறு அவனுக்கு. அந்த பைக்கிலேயே உட்கார வைத்து ஒரு பக்கமாகவே ஒரு மாதிரியாக ஓட்டிக் கொண்டு போய் வைத்தியம் பார்த்துக் கொண்டு வந்தான். அத்தனை உதவி மனப்பான்மை. நம்ப மாட்டீர்கள் எப்போதும் நண்பர்கள் புடை சூழத்தான் வருவான். அவன் கூட்டமாக வருகிறான் என்றால் யாருக்கோ உதவி செய்து விட்டு வந்திருக்கிறான் என்று அர்த்தம். எங்களுக்கு ரொம்ப செல்லம்.

கே : சின்ன வயதிலிருந்தே அவருக்கு இராணுவ ஆசையா ??

நித்யா : அது எனக்கும் இருந்தது. எப்படியாவது விமான படையில் சேர்ந்து விடுவது என்று எனக்கும் ஆசை இருந்தது. ஆனால் முகுந்தின் உழைப்பு இராணுவ தயாரிப்புக்கு அபரிமிதமாக இருந்தது. சொல்லப் போனால் நன்றாக படிக்கும் முகுந்த் 60-70 மார்க்குக்கு மேல் வாங்காமல் பார்த்துக் கொள்வான். ஒரு வேளை நிறைய மார்க் வாங்கி விட்டால் வேறு ஏதாவது வேலைக்கு போகச் சொல்வார்கள் என்று பயந்து தான் ஓரள்வு சுமாராக படிப்பான்.அத்தனை தீர்மானம். தினமும் பல கி.மீட்டர்கள் ஓடுவான். இராணுவத்தில் சேருவதை ஒரு தவமாக எடுத்துக் கொண்டிருந்தான்.

கே: தன்னுடைய இராணுவ அனுபவங்களை சொல்லியிருக்கிறாரா மேஜர்.

நித்யா : நிறைய. ஆரம்பத்தில் இராணுவ பயிற்சி பற்றி நிறையப் பேசுவோம். ஒரு கட்டத்தில் விடுமுறையில் வரும்போது இந்த அனுபவங்களை பகிர்வதிலிருந்து விலகி இருக்க விரும்பி, அதை சொல்வதை தவிர்க்க ஆரம்பித்தான்.

20241022185655989.jpeg

(2013ல் முதுகில் குண்டடிபட்டிருந்த போது விமானநிலையத்தில் சந்தித்த போது எடுத்த படம்)

கே: பயிற்சியின் போது குண்டு பாய்ந்த போது அந்த செய்தி எப்படி இருந்தது ??

நித்யா : பயிற்சியின் போது குண்டு பாய்ந்தது உண்மைதான். அது ஒரு விபத்து. அதைப் பற்றி சினிமாவில் சொன்னதாக கேள்விப் பட்டேன். தன்னால் இன்னொருவருக்கு வேலை போய் விடும் என்று அந்த விஷயத்தை முகுந்த் மறைத்தது உண்மை.

20241022175128475.jpeg

கே: சினிமா பற்றி கேட்க வேண்டாம் என்றிருந்தேன். சினிமாவில் உங்கள் பங்கு ஏதாவது ??

நித்யா: அமரன் சினிமா, முகுந்தின் வாழ்க்கையை சுற்றியும் தியாகத்தைப் பற்றியுமானது. அதை படமாக்குவதற்கு முன் அப்பா அம்மாவிடம் முழு அனுபவத்தை கதையை கேட்டார்கள். அதை முன்னெடுத்து சென்றது அதிக ஈடுபாடு காட்டியது இந்து மட்டுமே.

இன்னொரு விஷயம். அப்பா ரொம்ப வெகுளி. முகுந்த் எங்களுக்கு ஹீரோ என்று யார் சொல்லிக் கொண்டு வந்தாலும் அவர்களை ஆதரிப்பார். அது போலவே முகுந்த் பெயரில் வரும் எந்த பணமும் நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. ஏதேனும் நிகழ்ச்சியில் மேஜர் முகுந்த் குடும்பத்திற்கு நிதியுதவி என்று சொன்னால் அதை அங்கேயே நன்கொடையாக கொடுத்து விட்டு தான் வருவார் அப்பா. ஆனால் அந்த நன்கொடை மேட்டரை யாரும் சொல்ல மாட்டார்கள்.

படம் பற்றி பேசும் போது நோ அப்ஜக்‌ஷன் சர்டிஃபிகேட் கேட்டார்கள். முகுந்ந்த் மனைவி இந்து தான் இந்த பிராஜக்டை எடுத்து செய்தார். சொல்லப் போனால் சிவகார்த்திகேயன் வாட்சப்பில் ஒரு முறை பேசினார். படம் எடுப்பதற்கு முன்பு. அவ்வளவு தான் எங்களுக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம். சினிமாவில் சில காட்சிகள் பற்றி பேசுகிறார்கள். ஒரு குடும்பமாக திரைப்படம் என்பது கொஞ்சம் கற்பனையும் கலந்த படைப்பு என்பதை புரிந்து கொண்டோம்.

கே: மேஜர் முகுந்த் பணிபுரிந்த கேம்புக்கு போயிருக்கிறீர்களா ???

நித்யா: முகுந்தின் தியாகத்திற்கு சில வாரங்கள் முன்பு அங்கு போவதைப் பற்றி பேசினோம். விரைவில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

மும்பையில் தான் அடிக்கடி சந்திப்போம். ஒரு முறை ஏதோ ஒரு மார்க்கெட் ஏரியாவுக்கு சென்ற போது கூட நீங்கள் இங்கு பார்க்கும் நிலை வேறு நான் இந்த இடத்தைப் பார்க்கும் கோணம் வேறு என்று சொல்வான்.

கே: மேஜர் முகுந்த் ரஜினி ரசிகரா ??

நித்யா : பயங்கர ரசிகன். அவனுக்கு. ரஜினி என்றால் மிக மிக பிடிக்கும். அது மட்டுமல்ல அன்பே சிவம் படத்திற்கும் ஏக ரசிகன். அடிக்கடி அதைப் பற்றி பேசுவான்.

அப்படி ஒரு சினிமா ரசிகரின் நிஜ வாழ்க்கையை வைத்தே ஒரு வெற்றிப் படம் வெளிவரும் என்பதை பாவம் மேஜர் அறிந்திருக்கவில்லை. பேச்சு திசைமாறியது.

2024102218483055.jpeg

கே: மேஜர் முகுந்த் கல்யாணத்தில் நடந்த போராட்டங்களைப் பற்றி…..

நித்யா : அது ஒரு டிவி சீரியல் போல சொல்லக் கூடிய விஷயம். நம்ப மாட்டீர்கள் பல முறை முகுந்த் எனக்கு இந்த கல்யாணமே நடக்காது வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு எதிர்ப்பு இந்து வீட்டில். எங்கள் வீட்டில் அந்த பிரச்சினையே இல்லை. அப்பா அம்மா எங்கள் எண்ணத்திற்கு எப்போதும் எதிராக இருந்தது இல்லை.

இன்று முகுந்தின் தியாகத்தை நாடே கொண்டாடும் போது அவர்களும் கொண்டாடுகிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி. இப்போது தான் முகுந்தின் படம் கூட பெரிதாக வைத்து பெருமைப்படுகிறார்கள். சந்தோஷம். சொல்லப்போனால் எங்கள் வீட்டில் கூட முகுந்த் படத்தை பெரிதாக நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை. நினைவு வாட்டும் என்பது தான் காரணம்.

இந்து எப்போதும் முகுந்த் மீது உயிரையே வைத்திருக்கிறார். மறு கல்யாணத்திற்கு அவர்கள் வீட்டில் முயன்ற போது கூட திட்டவட்டமாக இந்து மறுத்தது விட்டார். அது போலவே நமது இந்திய இராணுவமும் முகுந்திற்காக சிரத்தை எடுத்துக் கொண்டு இந்துவை நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள்.

சினிமாவில் சில விஷயங்களை மாற்றிக் காட்டியிருக்கிறார்கள் மறைத்திருக்கிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள். என்ன செய்வது. திரை மொழிக்காக சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கலாம். அது பற்றி சொல்லி என்ன பயன். என் காது படவே முகுந்த் இராணுவத்திற்கு எதற்கு போகணும் தேவையில்லாத வேலை என்று பேசியவர்கள் கூட இன்று முகுந்த் எங்கள் சொந்தக்காரன், என்று பெருமையுடன் சமூக ஊடகத்தில் பகிரும் போது எங்களுக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது.

ஆனால் முகுந்த் இல்லை என்று நினைக்கும் போது வரும் சோகம் அழுத்துகிறது. இதிலிருந்து மீள முடியவில்லை.

20241022184903902.jpeg

கே: மேஜரிடம் பேச விட்டுப் போன விஷயங்கள் என்ன ??

நித்யா : ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும் அவன் தன் சாதனைகளை ஆர்வத்தோடு சொல்வான். ஆனால் எனக்கு கவனம் முழுவதும் அவனுக்கு சுவையான உணவு வகைகளை தயாரிப்பதிலேயே இருக்கும். இப்போது அவன் சொல்வதை நிறைய கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.

இன்னொரு விஷயம் எங்களுக்கு ஏதேனும் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மெனக்கெடுவான். ஆனால் அவன் பணம் செலவு பண்ணுவது எனக்கு கஷ்டமாக இருக்கும். வேண்டாம் என்று மறுப்பேன். இப்பொழுது தோன்றுகிறது. ஒரு வேளை அதை வாங்கிக் கொடுக்க சொல்லியிருந்தால் அவனை மேலும் சந்தோஷப்படுத்தியிருக்கலாமோ என்று….

20241022184939985.jpeg

கே: உங்கள் இருவரின் திருமணத்திற்கு முன்பும், பின்பும் மேஜருடன் மறக்க முடியாத நினைவுகள் என்ன?

நித்யா : அந்த காலத்தில் எங்களிடம் கேஜட்டுகள் எதுவும் இல்லை. டெக்னாலஜி இல்லாத நாட்கள் சுகமானவை. மூவரும் விடுமுறைகளை ஒன்றாகவே கழிப்போம். நானும் முகுந்தும் சேர்ந்து அக்காவை கலாய்ப்போம். திருமணத்திற்கு அப்புறம் கூட பேசி வைத்துக் கொண்டு பிராங்க் செய்வது எங்கள் பொழுது போக்கு. திருமணமாகி நாங்கள் பெற்றோர்களான போதும் ஒன்றாக கூடி குழந்தைத்தனமாக விளையாடுவது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அப்படி ஒரு தருணத்தில் பதிவு செய்தது தான் ஊஞ்சல் வீடியோ… ஒவ்வொரு விநாடியும் அவனை மிஸ் பண்றோம்……

கே: மேஜர் முகுந்த் உங்களை மாற்றிய அல்லது இம்ப்ரஸ் செய்த தருணம் ???

நித்யா: ஒரு விஷயம் சொல்லணும். முகுந்த் சாதாரணமானவன் இல்லை. அசாத்திய ஆள். எங்க அப்பாவின் சுசுகி பைக் ஓட்ட எனக்கு பிடிக்கும். அவனை பின்னால் வைத்துக் கொண்டு எனக்கு ஓட்ட ஆசை. மற்ற ஆண்கள் போல ஒரு பெண் பைக் ஓட்ட நான் உட்கார வேண்டுமா என்றெல்லாம் அவன் யோசிக்கவே மாட்டான். சந்தோஷமாக உற்சாகமாக வருவான். ஒரு நாள் பைக் ஓட்டும் போது ஒரு காரில் இடித்து விட்டேன். அன்றிலிருந்து எனக்கு பைக் ஓட்ட பயம் வந்து விட்டது. இனி பைக் ஓட்ட மாட்டேன் என்று சொன்னேன்.

முகுந்த் சொன்னான் இந்த பயத்துக்கு நீ அடி பணிந்து போனால், இனி பயத்தை நீ வெல்லவே முடியாது. துணிந்து நில். துணிந்து செல் என்று ஊக்கப்படுத்தினான். ஏராள உற்சாகம். சொல்ல முடியாத அசாத்திய துணிவு. அது தான் முகுந்த்.

நான் கேட்ட வரையில் சினிமாவிலும் அவனை அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் சினிமா பார்க்காமலேயே சொல்கிறேன்.அவன் அதெற்கெல்லாம் மேலே. சினிமா அவர்களின் வரையறைக்குள் என்ன செய்ய வேண்டுமோ திரைமொழியில் செய்திருக்கிறார்கள். அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள் என்று தான் என்னிடம் எல்லோரும் சொல்கிறார்கள்.

கே: மேஜர் முகுந்தின் தியாகச் செய்தி வந்த அன்று……

நித்யா: எனக்கும் என் அம்மாவிற்கும் அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. தினமும் கோவிலுக்கு செல்லும் அம்மாவிற்கும் எனக்கும் அன்று எந்த காரணமும் இல்லாமல் ஒரு சண்டை. ஏதோ சச்சரவு. இரண்டு பேரும் கோபித்துக் கொண்டு அன்று பூராவும் பேசிக் கொள்ளவேயில்லை. இரவு அந்த கொடுமையான செய்தி வந்த போது நிலைகுலைந்து போனோம். அது தான் இண்டியூஷனாக இருந்திருக்குமோ என்று இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது.

அம்மா இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை அன்னிக்கு கோவிலுக்கு போயிருந்தால் இந்த கெட்ட செய்தி நடந்திருக்காதோ.

அந்த நாளை நினைத்தால் இன்றும் என் மனதில் ஆறாத வலி இருந்து கொண்டே இருக்கிறது. தூக்கம் வர விடாத நிகழ்வு.

மேஜர் முகுந்த் சகோதரிகளுடன் சின்ன வயது போட்டோக்கள் இருக்கிறதா என்று கேட்ட போது கிடைத்த படங்கள் இன்ஸ்டண்டாக கண்களில் கண்ணீரை வரவழைப்பவை.

20241022185028345.jpeg

20241022185108906.jpeg

எத்தனை சந்தோஷத்துடன், குதூகலமாக வளைய வந்த குழந்தை. தேசத்திற்காகவே இராணுவக் கனவுகளோடு வளர்ந்த குழந்தை ! நெகிழ வைத்து விட்டார் மேஜர் முகுந்த் வரதராஜன்.

மேஜர் முகுந்த் வரதராஜனுக்கான வீர வணக்கத்தை நித்யா வரதராஜனுக்கு செய்தோம்.