அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழா கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் திருவிழா.
கோயில் வளாகத்தில் ஆறு தினங்கள் தங்கி விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் தினமும் முருகன் பாடல்களைப் பாடியும், கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்தும் விரதத்தைக் கடைப்பிடிப்பர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் நவம்பர் 7ஆம் தேதி அன்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.15 மணி முதல் 6 மணி வரை இந்திய நேரப்படி சூரசம்ஹாரம் நடைபெறும்.
முருகப் பெருமானை வழிபடக் கூடிய மிக அற்புதமான விரதங்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுசரிக்கப்படுகின்றது. முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்ட ஐந்து நாட்களையும் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. ஆறாவது நாள் சூரசம்ஹாரமும், ஏழாவது நாள் முருகன் - தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாளான நேற்று 02.11.2024 அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலை பூஜைக்கு எழுந்தருளினார். கந்த சஷ்டி காலை மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகத் தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்நாடு, வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு விரதத்தை தொடங்கி இருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.சூரசம்ஹார நிகழ்வையொட்டி தேவையான பாதுகாப்புப் பணிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவையும் தமிழக அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வுகளைக் காண நேரில் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணிய காயத்ரி:
"ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"
முருகப் பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி, அவரை வழிபட்டால் முருகனின் அருள் கிட்டும்!!
Leave a comment
Upload