தொடர்கள்
கவர் ஸ்டோரி
மலையேறலாம் வாங்க !! 1 - ப. ஒப்பிலி

2024100200474378.jpeg

மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களும், இயற்கை ஆர்வலர்களும் இதுநாள் வரை காத்திருந்ததற்கு சரியான ஒரு வாய்ப்பு தமிழக வனத்துறையால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள கிழக்கு தொடர்ச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நாற்பத்தி ஓரு இடங்களில் ஆர்வலர்களை வனத்துறை நவம்பர் ஒன்று முதல் ட்ரெக்கிங் அழைத்துச்செல்கிறது .

20241002010517958.jpeg

நீலகிரியில் லாங்வுட் சோலைக்காடுகள், கோவை டாப்சிலிப்பில் பண்டாரவரை உச்சி, பெருமாள் முடி, வெள்ளியங்கிரி, மற்றும் பரளியார், கன்யாகுமரியில் இஞ்சி கடவு, நெல்லையில் காரையார், தென்காசியில் செண்பகாதேவி அருவி, ஸ்ரீவில்லிப்புத்தூரில் செண்பகத்தோப்பு, தேனியில் குரங்கணி , கிருஷ்ணகிரியில் புத்திராயன் உச்சி, மற்றும் திருவள்ளூர் குடியம் பாறை மேடுகள் ஆகியவை முக்கிய மலையேற்ற பகுதிகளாக வனத்துறை அறிவித்துள்ளது.

இந்த மலை ஏற்ற பகுதிகளை மூன்று விதமாகப் பிரித்துள்ளனர் - எளிதான ஒன்று, மிதமான ஒன்று, கடினமான ஒன்று.

20241002010546771.jpeg

லாங்வுட் - எளிதானது, அவலாஞ்சி - கடினம், பண்டாரவரை - கடினம். பெருமாள் முடி எளிமையானது, வெள்ளியங்கிரி கடினம், பரளியாரு எளிது, இஞ்சிக்கடவு மிதமானது, காரையாரு மிதமானது, செண்பகாதேவி எளிதானது செண்பகத் தோப்பு மிதமானது குரங்கணி மிதமானது, புத்தி ராயன் உச்சி கடினமானது, சன்னியாசி மலை மற்றும் குடியம் குகைகள் எளிதானவை என வனத்துறை பிரித்துள்ளது.

முதல் மலையேற்றம் நவம்பர் 1 அன்று கோவை பரளியார் வனப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மொத்தமாக 17 ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஐந்து பேர் பெண்கள். இந்த குழு 8 கிலோமீட்டர் நடந்து சென்று வெற்றிகரமாக முதல் மலையேற்ற நிகழ்ச்சியை முடித்துள்ளது.

மலையேற்றம் ஆரம்பித்த முதல் நாளன்று, பதினாறு குழுவினர் வெவ்வேறு மலைப்பகுதிகளுக்கு ட்ரெக்கிங் சென்று வந்துள்ளனர் என்கிறார் தமிழ் நாடு வில்டர்ன்ஸ் எஸ்பிரியன்ஸ் கார்பொரேஷன் தலைவர் விஸ்மிஜு விஸ்வநாதன்.

இந்த மலையேற்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட இடங்கள் சில சுற்றுலா தளங்களிலும் மற்றவை வனப்பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தளங்கள் பதினான்கு மாவட்டங்களில் உள்ள பதினெட்டு வன கோட்டங்களில் அமைந்துள்ளது, என்கிறார் அவர்.

இந்த மலையேற்ற நிகழ்ச்சிகள் வனத்துறையால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை பாதைகளில் சென்று வர ஏதுவாக உள்ளது. இந்த பாதைகள் வனத்துறையால் அங்கீகாரம் செய்யப்பட்டவைகளாகும். இந்த இயற்கை சுற்றுலாக்களுக்கு அந்தந்த வனப்பகுதியின் சுமக்கும் திறனை மனதில்கொண்டே சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு உள்ளது, என்கிறார் விஸ்வநாதன்.

இந்த மலையேற்ற நிகழ்வுகளுக்கு முன்னூறு பேர் வழிகாட்டிகளாக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி வனத்துறையால் வழங்கப் பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் கடை பிடிக்க வேண்டிய முறைகள், முதல் உதவி, பங்கேற்பவர்களை இன்முகத்துடன் வரவேற்றல், சுத்தமான பழக்க வழக்கங்கள், வனத்தில் உள்ள பல்லுயிரினம் குறித்த தகவல்கள், மற்றும் பங்கேற்பவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து பயிற்சிகள் இந்த வழிகாட்டிகளுக்கு தரப்பட்டுள்ளன.

மேலும் இந்த வழிகாட்டிகளுக்கு தேவையான சீருடைகள், டார்ச்லைட், விசில், ட்ரெக்கிங் ஷூஸ், பேக்-பேக், தொப்பிகள், முதலுதவி பெட்டிகள், வெந்நீர் குடுவைகள், கம்புகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மற்றும் காம்பஸ் ஆகியவை கொடுக்கப் பட்டுள்ளன. இந்த வழிகாட்டிகள் அனைவரும் வன பகுதிக்கு ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்தே தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வழிகாட்டிகளை வன பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் தேர்வு செய்வதால் அந்த பகுதியின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புஉள்ளது. இது தவிர கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு சரியானதொரு வேலை வாய்ப்பையும் வனத்துறை இதன் மூலம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்கிறார் அவர்.

இந்த மலையேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் இந்த கார்பொரேஷனின் இணையத்தளத்தில் பதிவு செய்துகொண்டு, உரிய கட்டணங்களை செலுத்தி இந்த பயணங்களில் பங்குகொள்ளலாம் என வனத்துறை கூறியுள்ளது.

வன ஆர்வலர்கள் பலரும் இந்த புதிய திட்டத்தை வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறும் பொழுது சில வருடங்களுக்கு முன் வனத்துறையின் முன் அனுமதி இல்லாமல் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பேர் கொண்ட குழு ஒன்று தேனீ குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயணம் மேற்கொண்டது. இந்த குழு திரும்பி வரும் பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேர்ந்தது.

தற்போது மலையேற்ற நிகழ்ச்சிகளை வனத்துறையே நடத்தும்பொழுது இம்மாதிரியான விபத்துகளின்றி வெற்றிகரமாக செயல்படுத்தலாம் என அவர்கள் கூறினர்.

டிரெக் தமிழ்நாடு வலைதளத்திற்கு இங்கே கிளிக்கவும்

கட்டணங்களுக்கு இங்கே கிளிக்கவும்.