தொடர்கள்
கதை
மனம் சக்தி தனக்கே கருவியாக்கு... சத்யபாமா ஒப்பிலி

202491122021108.jpeg
"இந்த தடவை கொலுவுக்கு அம்பாள் மட்டும் தான். மகளிர் மட்டும் கொலு, புன்னகைக்கு நடுவில் தீர்மானமாக தன் கணவனிடம் சொன்னாள் திவ்யா.
"ஏம்மா ஆண்கடவுள்கள் என்ன பாவம் செஞ்சாங்களோ" அவனும் புன்னகைத்துக் கொண்டே கேட்டான்.
" என்னதான் இது துர்கா பூஜை ஆனாலும், எல்லா கொலுவிலும், தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம், கிருஷ்ணன் சிலைகள், பிள்ளையார் வித விதமாக.. இப்படித்தான் போறது. இந்த வருடம் நம் வீட்டில் ஆண்கள் கிடையாது. தீர்மானமாக கூறினாள் திவ்யா.

ஐந்து படிகளுக்கும் வைக்க அம்பாள் பொம்மைகள் இருக்கா உன்கிட்ட?
"இருக்கும். இல்லைனா வாங்கலாம். ஆனால் அவள் மட்டும் தான் என்றாள் மறுபடியும்.
ஆனந்தனுக்கு தெரியும். அவளை மாற்ற முடியாதென்று.
"பொம்மை எடுக்க நான் வரலாம் தானே" என்று கேட்ட அவனை,
பொருட்படுத்தாது,
"பெட்டியை எடுத்துக் குடுங்க!" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

ஐந்து படி அடுக்கி வைத்து அதன் மேல் ஒரு பளிச்சென்று ஒரு வெள்ளை துணியை விரித்தாள். இதற்காகவே வாங்கிய புதிய சிகப்பு நிற பட்டுப் புடவையை எடுத்து படிக்கு நடுவில் அழகாக மடித்து போட்டு, அங்கங்கே பின் சொறுகினாள். ஜரிகை ரிப்பனை படிகளில் தோரணமாகக் கட்டினாள். அதற்குள் அவள் கணவன் 5 / 6 பெட்டிகளை களம் இறக்க, தரையில் அமர்ந்து முதல் பெட்டியைப் பிரித்தாள். செய்தித் தாள்களால் எல்லா பொம்மைகளும் சுற்றி வைக்கப் பட்டிருந்தன. முதல் பொம்மையைப் பிரித்தாள். கையில் மோதகத்துடன் அழகாக அமர்ந்திருந்தார் கருமை நிறப் பிள்ளையார்.
"மன்னித்து விடவும் " என்று சொல்லி அவரைப் பெட்டிக்குள்ளேயே திருப்பி வைத்தாள்.
மறுபடியும் மற்றொரு பொம்மையைப் பிரிக்கும் போது, சிம்ம வாகனத்துடன் துர்கை வந்தாள். அது சற்று பெரிய பொம்மை. பேப்பர் மேஷ் னால் ஆன பொம்மை. கனமாக இருக்காது. முகம் குழந்தையாக இருக்கும். சிங்கத்தின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும், சூது வாது தெரியாத குழந்தையாக இருப்பாள் அந்த துர்கா. நடு மையமாக அந்த பொம்மையை வைத்தாள்.
இரெண்டு படி துர்காவும், இரெண்டு படி லக்ஷ்மியும், கடைசி படி சரஸ்வதியும் வைப்பதாக முடிவு செய்தாள்.
எல்லா பெட்டியும் பிரித்து போடப் பட்டது. ஆண்கள் அனைவரும் ஒரு சில பெட்டிக்குள் திருப்பி அனுப்பப்பட்டனர். பெண் கடவுள்களே அவளிடம் 15 பொம்மைகள் இருக்கும் போல தோன்றியது.
காளிகாம்பாள், கோமதி அம்மன், மீனாக்ஷி அம்மன், விசாலாக்ஷி, காமாக்ஷி, என்று அழகாக ஒன்றொன்றாய் அடுக்கினாள்.
ஒவ்வொரு பொம்மையும் துடைத்து வைக்கும் போது, கண் மூடி வேண்டிக் கொண்டாள்.
அடுத்த இரெண்டு படி கட்டுகள் வரும் போது அஷ்டலட்சுமியும், ஆண்டாள் மட்டும் தான் அவள் கண்ணில் பட்டது. வேறு யார் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, அனைவரும் அவர்கள் பதியுடனே தான் இருப்பது புரிந்தது. சீதா கல்யாணம், ராதா, பாமா, ருக்மணி யாரும் தனியாக இல்லை. இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதும் கடினமாகத் தான் இருக்கும். நடுவில் கலசத்தை வைத்து, அடுத்த படியில் அஷ்ட லக்ஷ் மியையும், ஆண்டாளையும் வைத்தாள்.
" கண்ணகி சிலைதான் இங்குண்டு, சீதைக்கு தனியாய் சிலை ஏது?" என்ற பாட்டு அவளுக்கு நினைவில் வந்தது.
"இந்த மூணாவது படியையும், ரெண்டாவது படியையும் ரொப்ப கடவுள்கள் வேண்டும் என்றாள் சிந்தித்துக் கொண்டே.
நிறைய தான் இருக்கே. அத அப்படி அப்படி வெய்க்கவேண்டியது தானே!
அம்பாள் வைச்சாச்சு, லட்சுமி திருப்பி திருப்பி ஒரே மாதிரி தான் இருக்கா!
சரஸ்வதியும் அப்படித்தான். ஒரே மாதிரி தானே பொம்மை இருக்கு!
" இப்போ உனக்கென்ன பிரச்சனை? வேற ஏதோ உன் மனசுல ஓடுது திவ்யா!
துர்கை தனியாக இருந்தால் அழகு, ராதாவோ, சீதையோ ஜோடியாக இருந்தால் தான் அழகு. பெண்கள் மட்டும்ன்னு அவங்கள பிரிக்காதே.. கொலு முழுமையா இருக்காது!
இதெல்லாம் உனக்கும் தெரியும். ஆனா ஏதோ யோசிக்கற!"
எல்லாவற்றையும் பாதியில் வைத்து விட்டு எழுந்து ஹாலில் வந்து சோபா வில் அமர்ந்து கொண்டாள். ஆனந்தனும் அருகில் வந்து அமர்ந்தான்.
"என்னாச்சு திவ்யா"?
"தெரியல ஆனந்த் . எதையும் வெறும் அழகுணர்ச்சியோட மட்டும் பாக்கவே முடியல! சக்தி, சக்தி ன்னு மனசு அடிச்சுக்குது"
தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.
"கொஞ்சம் வெளில வா திவ்யா.. நீயும் பயந்து எல்லாரையும் பயமுடுத்தறன்னு தோணுது."
அந்த குழந்தைக்கு 3 வயசு. இன்னொரு குழந்தைக்கு 5 , 25 வயசு பொண்ணு. நேத்திக்கு படிச்சேன் 60 வயசாம் அவங்களுக்கு.
அவள் எதைப்பற்றி பேசுகிறாள் என்று அவனுக்குப் புரியும்.
"இது யாருக்கோ நடக்கறது இல்ல ஆனந்த். நம்ம பக்கத்துக்கு வீட்டுக்கு நடக்கலாம். எனக்கு நடக்கலாம். அமைதியா, நளினமா, அழகா இருக்கற கடவுளை பாத்தா எனக்கு பட படன்னு வருது. பரித்யங்கரா தேவி, மாகாளி பாத்தா என்னவோ பண்ணுது உடம்பு. நானே சிங்கத்துல உக்காந்துக்கற மாதிரி இருக்கு. கையில் சூலத்தோட, கண் சிவப்பா, நாக்கு நீட்டிண்டு இருக்கற உக்கிரமான தேவி எனக்கு ரொம்ப அழகா தெரியறா. அவளை அப்படியே உள்ளுக்குள்ள வார்த்துக்கணும் போல தோணுது. பாக்கற குழந்தைகள் கிட்ட இவதான் அழகு இவ தான் அழகுன்னு கத்தணும் போல இருக்கு. எங்கேயோ அவ காணாம போய்ட்டா இப்போ. காவல் தெய்வமா, கால்ல சலங்கையோட, கையில் தீ சட்டியோட, இன்னொரு கையில சூலத்தோட அவ வரணும் ராத்திரி. எல்லா பெண்களுக்கும் உள்ள போய் ஜம்ம்னு உக்காரணும்.
இதுவரை கண் மூடி கேட்டுக்கொண்டிருந்தவன், மெதுவாக கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். சமீப காலமாகவே அவள் இப்படி மாறி இருந்தாள். ஏதோ ஒன்று அவளை சங்கடப் படுத்திக்கொண்டே இருக்கின்றது.
"உனக்கு இத மாதிரி ஏதாவது நடந்திருக்கா" என்று அவளிடமே கேட்டும் இருக்கிறான்.
" இத கடக்காத பொண்ணுங்களே கிடையாது. எல்லாம் தாண்டி தான் வரோம். " அலட்சியமாகவே பதில் சொல்லுவாள்.
சமீபகாலமாக அடிக்கடி கண்ணில் படும் சில செய்திகள் அவளை சற்று கடினமாகவே பாதித்திருக்கிறது,
"சரி. வா. வேலையை முடிக்கலாம். வேறு என்ன பொம்மை வேணும்னு சொல்லு. வாங்கிண்டு வரலாம்,"
ஆரம்பத்தில் இருந்த வேகம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது அவளுக்கு.
அன்பும், காதலும், தோழமையும், பாசமும் இல்லாமல் வெறும் கோபத்தை மட்டுமே வளர்கிறோமோ என்று தோன்றியது. கோவத்தை முன்னிறுத்தி மற்றவற்றை பின் தள்ளவேணுமோ என்னவோ என்று கூறிக்கொண்டாள்.
கையில் கிடைத்த ராதா கிருஷ்ணன் பொம்மையை தடவிக்கொடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
கைபேசி சிணுங்கியது. அக்காவிடமிருந்து செய்தி. திறந்து பார்த்த போது,
"இன்னிக்கு ராமர் கோவில்ல ராமருக்கு மகிஷாசுரமர்தினி அலங்காரம். எவ்ளோ அழகு பாரு என்று போட்டோவுடன் செய்தி அனுப்பி இருந்தாள். அமைதியான ராமர் எப்படி மகிஷாசுரமர்தினியாக மாறி இருக்கிறார் என்று அவளுக்கு வியப்பாக இருந்தது, முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர், கையில் இருந்த ராதா கிருஷ்ணரை பெட்டியில் வைத்தது விட்டு, ஒரு பேப்பரை எடுத்து பெண் தெய்வங்களின் லிஸ்ட் போட ஆரம்பித்தாள்.