தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 30 இரட்டை பல்பு ” - மோகன் ஜி


2024911140841305.jpg

அது 90களின் துவக்கம்.

அப்போது கடலூரில் பணிபுரிந்து கொண்டிருந்த காலம்.

பெரும்பாலான சனிஞாயிறு மாலைகளில், ஏதோ இலக்கிய நிகழ்ச்சியோ, ஆன்மீகக் கூட்டமோ, பள்ளி கல்லூரிகளின் விழாக்களோ நான் உரையாற்ற அழைப்புகள் வந்தபடி இருக்கும்.

அந்த மாவட்டத்தின் தினசரி பத்திரிகைகளில் வரும் செய்திகளில் என் பெயர் வருவதும் சமயங்களில் புகைப்படத்தோடு வருவதும் வாடிக்கைதான்.

பத்திரிகைச் செய்திகளை கத்தரித்து, ஓரத்தில் தேதி குறிப்புகளுடன் தனிக் கோப்பில் சேகரித்து வருவார் என்னுடன் பணிபுரிந்த ராஜு என்னும் உதவியாளர்.

ராஜு வெள்ளந்தியான ஆசாமி. ஆங்கிலத்தையும் ஒருவழி பண்ணிவிடுவார். ராஜுவின் முதல்வேலையே செய்தி கட்டிங் அண்ட் ஒட்டிங் தான்!

அன்றைய தினம் ஒரு சனிக்கிழமை.

என் மனைவியும் குழந்தைகளும் சென்னைக்குப் போயிருந்தார்கள்.

அந்தக் காலையில் தினசரிகளை எடுக்க வாயில் பிரஷ்ஷுடன் பல்துலக்கியபடி வாசலுக்கு வந்தேன்.

என் எதிர்வீட்டில் அருமை நண்பர் முத்துசாமியும் வசித்து வந்தார்.

என்னைப் பார்த்தவுடன் அவசரமாக, “ குட்மார்னிங் பாஸ் ! முதல்ல உள்ளேபோய் பல்தேச்சுட்டு இங்க வாங்க! சேர்ந்து காபி சாப்பிடுவோம். இப்போ முதலில் உள்ளே போங்க! குவிக்!!” என்று விரட்டினார்.

குழப்பத்துடன் உள்ளேபோய் முகம் கழுவிக்கொண்டு எதற்காக முத்து உள்ளேபோகச் சொன்னார் என்று யோசித்தபடி மீண்டும் வாசலுக்கு வந்தேன். அவர் வீட்டுக்கு நடந்தேன்.

மணக்க மணக்கக் காபியும் வந்தது.

“இன்னைக்கு ஏதும் மீட்டிங் உண்டா பாஸ்?” என்று கேட்டார்.

அதற்கு நானும், ”இல்லை முத்து! ஏன் முதல்ல நம்ம ரோடுக்கு ஏதோ சிறுத்தை வந்துவிட்டதுபோல உள்ளே போங்கன்னு விரட்டினீங்க?” என்று கேட்டேன்.

“அதுவா மோகன்ஜி? இப்பத்தான் தினத்தந்தி நிருபரும் தினமலர் நிருபரும் இப்படிக்கா போனாங்களா…. நீங்க வேற வாசல்ல பல்லு தேச்சுக்கிட்டே நின்னீங்களா? நாளைக்கு பேப்பரில், ‘இன்று மோகன்ஜி பல் துலக்கினார்’!னு செய்தி போட்டுடுவாங்களேன்னு உங்களை உள்ளே போகச் சொன்னேன்!” என்றாரே பார்க்கணும்!

பேப்பரால் ஆன பல்பொன்று தலைமேலே பளிச்சென்று எரிந்தது.

பின்னாளில் பாட்ஷா படத்தில் ரஜினி தன் தம்பியைஉள்ளே போ!’ என்று விரட்டியது எங்க முத்துசாமியைப் பார்த்துத் தான் இருந்திருக்கும்.

சனி பல்பு தனி பல்பாகப் போகுமோ?!

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஏதோ சிறுதொழில் பயிற்சியின் துவக்க விழாவிற்கு அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை யாரோ என் அலுவலகத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அந்த நாளின் பணி துவங்கப்போகும் நேரம். கேஷ் கவுண்ட்டரில் கல்லூரிக் கட்டண சலான் செலுத்தவேண்டி சில மாணவிகளும் குழுமியிருந்தார்கள்.

கவுண்ட்டருக்கு தள்ளி நின்றபடி ராஜூவும் இன்னொரு ஊழியரும் அந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நானும் கேபினை விட்டு வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்தவுடன் ராஜூவும் மிகுந்த உற்சாகத்துடன், “சார்! இந்த போட்டோவுல எல்லாம் சுடிதார்ல நீங்க சூப்பராக விழுந்து இருக்கீங்க சார்!” என்றதுதான் தாமதம்! அந்த ஹாலே அமைதியாகிவிட்டது.

“என்ன ராஜு சொல்றே?” என்றபடி அந்த புகைப்படங்களைப் பிடுங்கிப் பார்த்தேன். அந்நாளைய மோஸ்தரான சஃபாரி உடையணிந்து அந்தப் படங்களில் இருந்தேன். நம்ம ராஜுவோ சஃபாரியை சுடிதாராக்கி என்னை அழகுபார்த்து மானத்தையும் சேர்த்தே வாங்கிவிட்டார்!

அங்கிருந்த மாணவிகள் எவருடைய முகமும் தெரியாதபடிக்கு நெருங்கி நின்று கொண்டிருந்தார்கள். ஆட்டம் துவங்கும் கிரிக்கெட் வீரர்கள் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு வட்டமாக நெருங்கி நின்றபடி, ஆட்டத்தின் திட்டத்தைப் பேசிக்கொண்டோ அல்லது ஏதேனும் ஜெபித்துக் கொண்டோ நிற்கும் காட்சி நினைவுக்கு வந்தது.

அந்த மாணவிகளின் அசைவில் ‘விசும்பி விசும்பி’ சிரிப்பதை உணர்ந்து நொந்தேன்.

அட ஈஸ்வரா! நான் தேடாமலேயே இன்னொரு பல்பு சுடிதார் போட்டுக் கொண்டு எரிகிறதே!!

மேலும் சொல்லவும் வேண்டுமோ? அதற்குப்பின் நான் சுடிதார்…. சாரி…. சஃபாரி அணிவதையே விட்டு விட்டேன்!

ஹய்யோ! ஹய்யோ!!