விஜயதசமி என்றால் வெற்றி தருகின்ற நாள். நவராத்திரியில் தான் அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்கத் தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். அசுரனுடன் போர் செய்து ஒன்பதாம் நாளான நவமியில் மகிஷாசுரனை துர்க்காதேவி வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தவொரு செயலும் வெற்றிகரமாக முடியும்.
இந்த விஜயதசமியில் குழந்தைகளுக்கு ‘வித்யாரம்பம்’ செய்துவிக்கபடுகிறது. வித்யாரம்பம் என்பது சிறு குழந்தைகளின் அறிவு அறிமுகப்படுத்தப்படும் ஒரு மங்கள விழா.
( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்")
இது அக்ஷராப்யாசம் (எழுத்தறிவித்தல்) என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வியை இந்நன்னாளில் தொடங்கினால், அவர்கள் மேன்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
வித்யாரம்பம் விழாவானது கோயில்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் செய்துவிக்கபடுகிறது.
விஜயதசமியின் சிறப்பு:
விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து நற்செயல்களும் வெற்றியே தரும். முதல் நாளான சரஸ்வதி பூஜை அன்று மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை அடுக்கி வைத்து பூஜை செய்த பிறகு மறுநாள் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி புத்தகங்களை எடுத்துப் படித்தால் கல்வியில் மேன்மேலும் அபிவிருத்தி அடைந்து சரஸ்வதி கடாட்சம் அவர்களுக்கு என்றென்றும் நிலைத்து நிற்கும்.
இந்த விஜயதசமி நாளில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கற்க ஆரம்பித்தல் நன்று.
முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.
இந்த விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பித்தால் வெற்றியும் புகழும் கிடைக்கும்.
வித்யாரம்பம்:
பிறந்த குழந்தைகள் இயல்பாகவே தன் கண்களால் காண்பவற்றையும், நாம் அவர்களுக்குச் சொல்லக்கூடிய சின்ன சின்னப் பாடல்கள், கதைகள், எழுத்துக்களை உச்சரித்தல் மூலமும் கற்றுத் தெரிந்து கொள்கின்றன. இருப்பினும் முறையான கல்வியை முதன்முதலில் கற்கத் தொடங்கும்போது இறைவனை வழிபட்டுத் தொடங்குவது சிறப்பானது. அவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு இறைபக்தி உண்டாகும். கற்கும் கல்வியும் இறைவடிவமே என்பதை உணரும். இதற்காகவே வித்யாரம்பம் என்னும் எழுத்தறிவித்தலை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர். மேலும் மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
வித்யாரம்பம் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் அக்ஷராப்யாசம் செய்ய நவராத்திரி காலத்தில் வரும் 'விஜயதசமி தினமே மிகவும் சிறப்பானது. அன்றைய தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குழந்தையை நீராடச் செய்து, புத்தாடை உடுத்த வேண்டும். பிறகு பூஜைக்குத் தேவையான மஞ்சள், குங்குமம், தேங்காய், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், பூ, பூமாலை, நெல் அல்லது அரிசி சிறிதளவு(சுமார் 1கிலோ), வெற்றிலை, பாக்கு, நைவேத்தியத்திற்காகச் சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம், குழந்தை எழுதுவதற்கான எழுதும் பலகை,, சாக்பீஸ், நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றைத் தயார் செய்து
நல்ல நேரம் தொடங்குவதற்கு முன்பாக கோயிலுக்குச் சென்று. பூஜை விதிமுறையின்படி, ஒரு தட்டில் அரிசியை (நெல்) முழுவதுமாக தூவி வைக்க வேண்டும். பிறகு கோயிலில் உள்ள அர்ச்சகர் குழந்தையின் காதில் சரஸ்வதி மற்றும் பிரணவ மந்திரத்தை ஓதி, அக்குழந்தைகளின் கையை பிடித்து நெல்/அரிசி நிறைந்திருக்கும் தட்டில் 'ஓம்" என்கிற எழுத்தை எழுத வைத்து ஆசீர்வதித்து குழந்தையின் பேரில் அர்ச்சனை செய்வார்.
இதன் பின்பு கோயிலில் இருக்கும் இறைவனை வணங்கிய பின் வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த அளவு எழுதும் பலகை, நோட்டு புத்தகம், பென்சில், பேனா, இனிப்புகள் போன்றவற்றைத் தானமளிப்பது சிறந்த பலன்களைத் தரும். கோயில் செல்ல முடியாத பட்சத்தில் வீட்டில் குழந்தையை அப்பா, தாத்தா அல்லது தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்து, நெல்/அரிசியை முழுவதுமாக தூவி தட்டில் குழந்தையின் கையைப் பிடித்து பிள்ளையார் சுழி போட்ட பின்பு 'அ' எனும் முதல் எழுத்தை எழுதி வீட்டில் உள்ள சுவாமி படத்திற்கு நமஸ்காரம் செய்தபின் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யலாம்.
இவ்வாறு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைப்பதால் விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவியின் அருள் குழந்தைகளுக்குக் கிடைக்கப்பெற்று, கல்வி மற்றும் கலைகளில் சிறந்தவர்களாக விளங்கச் செய்து வாழ்வில் மேன்மையடைவார்கள்.
“சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம-ரூபின்னி |
வித்யாரம்பம் கரிஸ்ஸ்யாமி சித்திர்-பவது மே ஸதா ||”
வரங்களைத் தந்து அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் சரஸ்வதியை நாம் அனைவரும் தலைவணங்குவோம் .
எல்லாவிதமான வெற்றிகளைத் தந்தருளும் விஜயதசமி நன்னாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து கல்வி மற்றும் கலைகளில் மேன்மையடையட்டும்!!
Leave a comment
Upload