தொடர்கள்
கதை
மருத்துவ சுற்றுலா.....-கே பி எஸ்

2024911111613281.jpeg

அயல்நாட்டிலிருந்து பலர் இந்தியா வந்து வைத்திய சிகிச்சை செய்து கொள்வார்கள்.

அயல்நாடுகளில் சிகிச்சைச் செலவு மிக மிக அதிகம்.

இந்தியாவில் ஆகும் மருத்துவச் செலவை டாலர் அல்லது பவுண்டு கணக்கில் பார்த்தால் அயல் நாட்டிற்கு அது சொற்பமானது.

அவர்களுக்கு இது ஒரு மருத்துவச் சுற்றுலா.( medical Tourism. )

நடப்பதில் உட்காருவதில் மற்றும் நிற்பதில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததால் சில மருத்துவர்களை தேடிப்போகும் அவசியம் எனக்கு ஏற்பட்டது. அதுவும்,சென்னைக்கு உள்ளேயே ஒரு மருத்துவ சுற்றுலாவாக இது மாறும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

என் மைத்துனன் என் உதவிக்கு ஓடோடி வந்தான். தாம்பரத்திற்கு அருகில் ஒரு சித்த வைத்தியர் இருப்பதாகவும், அவர் சிகிச்சை அளித்தால் முடமானவர்கள் கூட மாரத்தானில் பங்கு கொள்ளும் அளவுக்கு தேறி விடுவார்கள் என்று கூறினான்.

நடக்குமாஇது? (நான் நடப்பேனா!) என்று ஆராயாமல் உடனே சித்த மருத்துவரைப் பார்க்க காரில் பயணம் ஆனோம், கூடவே என் மனைவியுடன்.

சித்த வைத்தியர் சின்ன உருவம் தான்.சுமார் 60 வயது இருக்கும்.நரைத்த தாடி மீசையுடன் இருந்தார்.

என்னை ஏளனமாகப் பார்த்துவிட்டு "ஐயா! இந்த சுவற்றுக்கு முன்னால் இரண்டு கைகளையும் (ஐயா காப்பாற்றுங்கள்!) தலைக்கு மேலே விரித்துக்கொண்டு நில்லுங்கள்."என்றார்.

சுவற்றையே முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

" சரி கால்களை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். " என்றார்.

செய்தேன்.

"போதாது.இன்னும் அகலமாக,...

இன்னும் இன்னும்," என்று அவர் தொடர்ந்து கூச்சலிட, நான் பொறுமை இழந்து

"சார் இதற்கு மேல் முடியாது. இப்போதே எதோ கிழியற சத்தம் கேட்குது."என்று அலறினேன்.

ஒரு வழியாக , என் மனைவியும், மைத்துனனும் என்னை ஒரிஜினல் பொசிஷனுக்கு கொண்டுவர உதவி செய்தனர்.

"உங்களுக்கு வாதம் அதிகமாக இருக்கிறது.பித்தமும் அதிகம். கவலைப்பட வேண்டாம் சரி செய்து விடலாம்.வாதத்தின் அடிப்படையிலேயே 1482 நோய்கள் ஏற்படுகின்றன என்று சித்த மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது." என்றார் வைத்தியர்.

மனைவியும் மைத்துனரும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விருட்டென்று உள்ளே போன மருத்துவர் ஒரு நிமிடத்தில் கையில் இரண்டு குப்பிகளுடன் திரும்பி வந்தார்.ஒன்று சிறியது ஒன்று பெரியது.

நான் சொல்லும் ஐந்து பொருள்கள். இவைகளின் பெயரைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.புளிய இலை,எருக்கஞ்செடி இலை, புன்னை மர இலை,( மற்ற இரண்டு இலைகளின் பெயர்கள் எனக்கு மறந்து விட்டன!)

என்று எல்லாம் அவர் கூறி முடிப்பதற்குள்நான் குறுகிட்டேன்.

"ஐயா இதையெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாலே சாப்பிடணுமா?இல்லை சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடணுமா? " என்று அக்கறையுடன் கேட்டேன்.

கோபத்தின் உச்சிக்குச் சென்றார் மருத்துவர் . "ஐயா இது சாப்பிடுவதற்கு அல்ல.அந்த ஐந்து இலைகளையும் ஒன்றாக சேர்த்து வறுத்து சூடானவுடன் ஒரு துணியில் வைத்துக் கட்டி,எந்தக் காலில் வலி அதிகமோ அந்தக் காலில் ஒத்தடம். கொடுக்க வேண்டும்... தினமும்.... ஒரு மாதத்துக்கு.. என்றார்" வைத்தியர்.

அவரே தொடர்ந்து "இதோ இந்தப் பெரிய குப்பியில் எண்ணெய் இருக்கு.அதை தினமும் தடவி மசாஜ் செய்து விட்டு, அப்புறமா ஒத்தடம் கொடுக்கணும்."என்றார்.

"இந்த சின்னக் குப்பி? " என்று என் மைத்துனன் கேட்க,

"இது காலையில் எழுந்தவுடன் நாலு சொட்டு வெந்நீரில் விட்டு சாப்பிட வேண்டும்.உடலில் உள்ள நச்சுப் பொருட்களை எல்லாம் அறவே வெளியே நீக்கிவிடும். " என்றார்.

இந்த மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் கழிப்பிடம் போக நேரும். ஒரு முறை தான் அதற்கு அவசியம் ஏற்படும். " என்றுதொடர்ந்து கூறினார் மருத்துவர்.

மருத்துவருக்கு பணம் கொடுத்து விட்டு வெளியே வந்ததும் எங்களது இலை வேட்டை ஆரம் பமாகியது.

"அதோ அங்கே இருக்கு எருக்கஞ்செடி இலை" என்று என் மைத்துனன் கத்த, மனைவி புளிய மரத்தைத் தேடி ஆகாசத்தையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

புன்னை மரம் எப்படி இருக்கும் என்று நான் கேட்டதை யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் எப்படியோ எல்லா இலைகளையும் சேகரித்து வறுத்து காலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து. ஒத்தடம் .கொடுத்து,..என்று சிகிச்சை மும்முரமாக நடந்தது.

இந்த சிகிச்சை ஒரு வாரம் தொடர்ந்த பின் தான் மருத்துவர் கொடுத்த சின்னக் குப்பி ஞாபகத்துக்கு வந்தது.

"காலையில் நாலு சொட்டு வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று அடைப்பு மடை திறந்த வெள்ளம் போல வெளியே போகும். " என்ற அவரது அசரீரி குரல் காதில் ஒலித்தது.

மறுநாள் காலையில் நாலு மணிக்கு எழுந்து சின்ன குப்பியில் இருந்து நாலு சொட்டு வெந்நீரில் கலந்து குடித்தபின் புதுப் பட ரிலீசு க்காக காத்திருக்கும் ரசிகர் மன்ற தலைவர் போல காத்திருந்தேன்.

மருத்துவர் வாக்கு பலித்தது. உடம்பு லேசாகியது.காலை 5 மணிக்கு நடைப் பயிற்சிக்கு கிளம்பிவிட்டேன். இவரல்லவோ மருத்துவர்!!

இரண்டாம் நாள் ஒரு ஏமாற்றம் காத்திருந்தது. நான்கு சொட்டுப் புரட்சி நடக்கவில்லை.மருந்தை உண்டு ஒரு மணி நேரம் ஆகியும் போக வேண்டியது போகவில்லை.

சரி இனிமேல் நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என்று

ஐந்து மணிக்கு தெருவில் இறங்கி நடைப்பயிற்சியை ஆரம்பித்தேன்.

15 நிமிடங்கள் நடந்து மெயின் ரோட்டை அடைந்த பின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு புரட்சி நடப்பது போல ஒரு உணர்வு.கால் பிரச்சனை காரணமாக நான் சுபாவமாகவே மெல்ல மெல்ல நடக்கும் பழக்கம் உடையவன்.அதனால் 'புரட்சியை' அலட்சியப்படுத்திவிட்டு மேலே நடக்கலானேன். புரட்சி கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று இடியுடன், எந்நேரமும் கரையை கடக்கலாம் என்ற நிலையை வெகு விரைவில் எட்ட, வலியையும் பொருட்படுத்தாமல் வேகமாக திரும்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.நடை ஜாகிங் ஆகி, ஜாகிங் ஓட்டமாய்,ஓட்டம் லாங் ஜம்ப்பாகி, வீட்டை அடைந்து டாய்லெட்டில் நுழைந்த உடன் புரட்சி வெடித்தது.

என்னால் எப்படி ஓடி வர முடிந்தது என்று ஆச்சரியப்பட்டேன்.ஐந்து இலை ஒத்தடம் எண்ணெய் மசாஜை விட இந்த சின்னக் குப்பி வைத்தியம் அதிக பலனைக் கொடுக்குமோ?என்னால் தொடர்ந்து ஓட முடியாததால் சின்ன குப்பி வைத்தியம் அன்றோடு முடிந்தது.

ஐந்து வகை மரம் செடிகளும் இலைகளை இழந்து என்னால் மொட்டையாக நின்றது மட்டும்தான் மிச்சம்.

நடப்பதில் உள்ள பிரச்சனை இன்னும் தீரவில்லை.

சரி சித்த வைத்தியம் போதும்.ஆங்கில மருத்துவ சிகிச்சைக்கு செல்வோம் என்று முடிவு எடுத்து, சென்னையில் உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையை முற்றுகையிட்டேன்.

(தொடரும் )