சித்திரக் கவியில் உள்ள வகைகள் பற்றி இந்த வாரமும் பரணீதரன் மேலும் தொடர்கிறார்.
இந்த பந்தங்களில் பாம்பு என்ற உயிரினம் மட்டும் உண்டா? அல்லது வேறேதேனும் உயிரினம் உண்டா? அவைகளைத் தொடர்புபடுத்துவது எதனால்? என்ற நமது கேள்விக்கு பதிலளிக்கிறார்.
நாம் முன்பே பார்த்தது போல பந்தங்களை பொதுவாக கடவுளை வேண்டுவதற்கோ அல்லது அறத்தை (தர்மத்தை) அறிவுறுத்துவதற்கோ தான் பயன்படுத்துவர்.
அப்படி கடவுளையோ தர்மத்தையோ உணர்த்துவதற்கு மங்களகரமான விலங்குகளையோ, பறவைகளையோ, ஊர்வனவைகளையோ, பொருட்களையோ பயன்படுத்துவர்.
பொதுவாக தேர் என்று அழைக்கப்படும் ரதம், முரசு, சங்கு, சக்கரம், யானை, ஸ்ரீவத்சம்,என்று அழைக்கப்படும் மரு, கலசம், வைஜயந்தி என்று கூறப்படுகின்ற ஆரம் (ஹாரம் - கழுத்தில் அணிவது. இன்றைய நெக்லஸ் போன்றது), பத்மம் என்று அழைக்கப்படுகின்ற தாமரைப்பூ ஆகியவை அரச லட்சணங்கள் ஆகும்.
அரசன் என்பவன் மக்களை காப்பாற்றி அறத்தை நிலை நிறுத்தி அதர்மத்தை அழிப்பவனாக இருந்தான். அதனால் அவனை பொதுவாக திருமாலோடு ஒப்பிடுவது வழக்கம். திருமாலின் தொழில் காப்பாற்றுதல். அதையே அரசனும் செய்வதால், அவனையும் திருமாலாக நினைத்து முற்காலத்தில் மக்கள் வணங்கினார்கள். அதனால், அரச லட்சணங்கள் பொதுவாக மிகவும் மங்களகரமான பொருட்களாக பார்க்கப்பட்டது. இதைத் தவிர நாகம், மீன், சிங்கம், எருது, மயில் போன்றவைகளையும் கடவுளாக பார்க்கும் மரபு நம்மிடையே உள்ளது. இவைகள் பொதுவாக கடவுளரின் வாகனமாகவோ அல்லது தர்மத்தை நிலை நிறுத்த பயன்பட்ட பொருள்களாக உள்ளன. இப்படிப்பட்ட பொருட்களை வைத்து பந்தங்களை உருவாக்கியுள்ளனர்.
மேலே கூறிய பந்தங்களின் சில படங்களை கீழே கொடுத்துவிட்டு தொடர்ந்து விவரிக்கிறார்.
அமங்கலமான பொருட்களை வைத்து தர்மத்தை கூறுவது நமது பழக்கத்தில் இல்லை. அதனால் அப்படிப்பட்ட பொருட்களை வைத்து யாரும் பந்தங்களை உருவாக்குவதும் இல்லை.
மேலே உள்ள படத்தில் சங்கும் சக்கரமும் அறத்தை நிலைநாட்டும் போர் கருவிகளாக பயன்படுத்தப்பட்டன.
தாமரைப்பூ காக்கும் கடவுளான பெருமாளின் சின்னம். அதை அரசனின் குறியாகவும், மங்கள பொருளாகவும், செல்வ செழிப்பை உணர்த்துவதாகவும் பார்க்கலாம். அதனால் தான் பெரும்பாலான கோவில்களில் தாமரைப்பூ செதுக்கப்பட்டிருக்கும்.
இதற்கு அடுத்தார் போல் உள்ளது, வைஜயந்தி என்று கூறப்படுகின்ற மாலை வகையாகும். இது திருமாலை குறிக்கக்கூடிய ஒரு ஆபரணமாகும்.
அதற்கடுத்து உள்ளது யானை. இது மன்னனையோ, அறத்தை நிலைநாட்டுகின்ற போரில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் முன்பே தேர் பந்தத்தை பார்த்து விட்டதால் அதை இங்கே கொடுக்கவில்லை.
தேரும் போரில் உபயோகிக்கப்படும் ஒரு முக்கியமான கருவியாகும். பொதுவாக அரசனும், கடவுளரும் தேரிலே வலம் வருவார்கள். அதனால் இவைகளும் மங்கள பொருட்களாக எண்ணப்படுகின்றன.
இங்கே குதிரையை நேராக குறிப்பிடாமல் துரக பந்தனம் என்ற சித்திரக்கவியில் (இடது பக்க கீழே உள்ளது), சதுரங்கத்தில் குதிரை எவ்வாறு நடை செய்யுமோ, அது போல உருவாக்கப்படுவது துரக பந்தமாகும். துரகம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குதிரை என்பது பொருளாகும்.
அடுத்ததாக உடுக்கை முரசு போன்றவைகளும் போரிலே தர்மத்தை நிலை நாட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களாகும். அதனால் அவைகளிலும் பந்தங்கள் உள்ளன.
வேல், மயில், அறு மீன்கள் போன்றவை முருகப்பெருமானை நினைவூட்டும் பொருட்களாகும். இவைகளும் போரிலோ, தர்மத்தை நிலைநாட்டவோ பயன்படுத்தப்பட்ட பொருட்களாகும். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எரிந்து அசுரர்களை ஒழித்தார். மயில் மூலமாக போர்களத்தில் சண்டையிட்டார். அறுமீன்கள் என்பது அவருடைய வளர்த்த அன்னைகளான கார்த்திகை பெண்களை குறிக்க கூடிய பொருளாகும். முருகப்பெருமானும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவே அவதாரம் செய்தார். அதனால் அவரைப் பற்றி பாடுவதற்காகவோ அல்லது தர்மத்தை பற்றி பாடுவதற்கோ இந்த பந்தங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவைகளின் அருகில் உள்ளது கடக பந்தமாகும்.
கடகம் என்ற வடமொழிச் சொல்லிற்கு இரண்டு விதமான பொருள்கள் உள்ளன. ஒரு பொருள் நண்டு ஆகும். மற்றொரு பொருள் கையில் அணியும் வளையாகும். பொதுவாக கடகத்தை மன்னர்கள் தங்களுடைய கைகளில் அணிவர். அதனால் இவைகளும் மங்கள பொருளாக உள்ளது. இன்றும் கூட பெண்களின் வளையல்களை மங்கள பொருளாகவே நாம் நினைக்கிறோம்.
வலது பக்க கடைசியில் உள்ளது சருபதோபத்திரம் (சர்வதோபத்ரம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது) என்று கூறப்படுகின்ற ஸ்ரீவத்சம் ஆகும். எங்கு வேண்டுமானாலும் தொடங்கி எங்கு வேண்டுமானாலும் முடிக்கக்கூடிய ஒரு வகை செய்யுள் இது. ஆங்கிலத்தில் இன்ஃபினிட்டி என்று அழைக்கப்படுகின்ற பதத்தின் தமிழ் மற்றும் வடமொழிப் பெயரே சருபதோ பத்திரமாகும். இதை பொதுவாக கீழுள்ளவாறு உருவாக்குவார்கள். இதற்கு முதல் மற்றும் முடிவு கிடையாது. இதுவும் திருமாலின் ஒரு குறியாகும். திருமகள் குடி கொண்டுள்ள இடத்திற்கு ஸ்ரீவத்சம் என்று பெயர். அதனால் இதுவும் ஒரு மங்கள பொருளாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதனால்தான் குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டுமே பந்தங்கள் உருவாக்கப்படுகின்றன.
இன்னும் சித்திரக் கவிகள் உண்டாம். வரும் வாரம் பார்க்கலாமா என்று கூறிச் சென்றார்.
Leave a comment
Upload